மார்ச் 16, 2015

காலம் கருதிச் செய்வோம்..

இந்த கவிதையை நான் உறுப்பினராக உள்ள சந்த வசந்தம் முகநூல் குழுமத்தில் இப்போதுதான் இட்டேன்.. அங்கே இல்லாத என் நண்பர்களுக்காக, இங்கும்.

இன்று என் மறைந்த தந்தையை நினைத்துக் கொண்டிருந்தபோது, அவரது சுறுசுறுப்பையும், நேரம் தவறாமல் காரியமாற்றிய செயல்பாடுகளையும் அசை போட்டுக்கொண்டிருந்தேன்.. அவர் பெயர், சுப்ரமணியன்.. எல்லோரும் மணி என்றே கூப்பிடுவார்கள். செய்யும் செயல்களெல்லாம் மணி மணியாய் இருக்கும்; மணியைப் போற்றுவதில் அவரைப் போல் நான் கண்டதில்லை! எழுந்திருப்பது, குளியல், உணவு அருந்துவது, ருத்ரம் சமகம் கேட்பது, சுலோகங்கள் படிப்பது, இராம நாமம் எழுதுவது, தூங்கப்போவது என்று எல்லாமே நேரப்படிதான். நேரம் தவறி எதுவே செய்யமாட்டார். அவரது நினைவாக இந்த கவிதை: (எனக்கே நான் சொல்லிக்கொள்கிறேன்)

காலம் கருதிச் செய்வோம்
--------------------------------
காலம் முடிந்து வரப்போகும்
காலன் கண்டு பயப்படுறோம்
காலம் கண்முன் கடக்கிறதே
கடுகள வேனும் பயந்தோமா?

காலம் கரிசனம் இல்லாத
கடினப் பாதை - உணராமல்
ஓலம் வைத்துப் பின்னாலே
ஒப்பா ரித்தால் பயனில்லை

திரும்பிப் பார்த்துத் திகைத்திடலாம்
தொலைதூ ரத்தில் சென்றிருக்கும்
அரும்பிச் சிரித்த கணங்களெலாம்
அருகிக் கருகிக் காய்ந்திருக்கும்

வாழ்வின் மாலை நேரத்திலே
வானை நோக்கி அண்ணாந்து
ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டு
அசைபோ டுகிறோம் என்னபயன்?

பாழ்பட் டதுவும் தாழ்ந்ததுவும்
பாழும் ஊழ்வினை யாலில்லை
சூழ்நிலை தந்த வாய்ப்புகளை
சுணங்கித் தவற விட்டதினால்

எல்லாம் நாமே விதைக்கின்ற
எட்டிக் காயின் விருட்சங்கள்
அல்லால் அழகுத் தருணங்கள்
அவலம் ஆகத் தேவையில்லை

கண்கள் கெட்டப் பின்னாலே
கதிரவன் தரிசனம் வேண்டுகிறோம்
உண்மை இதுவே பலருக்கும்
உயிருள் ளவரைப் புரிவதில்லை

வேண்டும் மீண்டும் வாய்ப்பென்று
வேண்டா நாளும் இருக்கிறதா?
மாண்டால் மீண்டு வருவதற்கு 
மன்னு லகில்தான் வழியுண்டா?

காலம் கருதிச் செய்திடுவோம்
கருத்தாய் காரி யமாற்றிடுவோம்
ஞாலம் நேரம் கொய்பவர்க்கே
நாமும் உணர்ந்து போற்றிடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...