டிசம்பர் 18, 2014

கற்பகாம்பா அந்தாதி

கற்பகாம்பாளுக்கு அபிஷேகத்துக்கு இரண்டு நாளைக்கு முன்பு சென்றபோது, அங்கு கோவில் சுவர்களில் பொறிக்கப்பட்டிருந்த பாடல்களைப் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய அக்கா என்னை கற்பகாம்பாள் பேரில் ஒரு அந்தாதி எழுதேன் என்று விளையாட்டாகச் சொன்னாள்.. அதனால் இன்று எழுத முனைந்தேன். 
கற்பக அந்தாதி:

காப்புச் செய்யுள்:
ஓங்குபுகழ் மாமயிலை கற்பகத் தாலயத்துள்
ஊங்கியருள் பாலிக்கும் நாயகா - நீங்காதே
ஆங்காடும் நர்த்தனவி நாயகரே! அந்தாதி
ஈங்கிசைக்க நீரன்றோ காப்பு! 
கற்றுன் கழல்பற்றக் காக்கின்ற கற்பகமே
நற்றமிழில் நான்பாட உன்னினேன் - பற்றறுக்கும்
பொற்பேயென் பைந்தமிழ் பாவமர்ந்தே பாலித்து
வற்றா தருள்செய்ய வா 1
வாக்கருள்வாள் வாணியள் வற்றா வளமருள்வாள்
பூக்கமலத் தேயுறையும் பொன்மகள் - தீக்கழலை
தூக்கியோன் தன்தேவி தேயமருள் கற்பகமே
ஆக்கமொட னைத்தும்நீ தா 2
தாயே உனையன்றி தாரணியில் யாருண்டு
சேயேனுக் காதாரம் செய்மகா - மாயேகாப்
பாயே பரிந்துள்ளம் பற்றிக்கண் பார்த்தருள்
வாயே பராபரி நீ 3
நீயே எனக்குள் நித்தம் இருந்தாள்வாய்
நேயே கழலிணைத் தஞ்சமே - தீயேபோல்
நோயே மனத்தில் வராமலே செய்திடும்
தூயேநீ துன்பத் தெயில் 4
எயிலாய் எமைகாக் குமெளிய தெய்வம்
அயிலோன் வடிவேலன் அன்னை - ஒயிலாய்
மயிலாய் உருவெடுத் தீசரையர் சித்துப்
பயின்ற பராசக்தி யே 5
ஏகன் அநேகனாம் ஈசர்க்கும் சக்தியே
ஆகமம் போற்றிடும் அன்னையே! - தேகத்தில்
போகமும் மோகமும் போக்கிநீ புக்தியும்
மாகனமும் கற்பகமே தா
தாவென வேண்டாது தந்தேன் எனவருள்வே
தாவெனும் தண்பொழில் கற்பகமே - பாவெண்ணி
நாவென்றும் உன்புகழே பாடவுன் வாயிலுக்கு
வாவென்(று) அருள்தந்து கா 7
காபாலி என்றுன்றன் கோவிலுக்கு வந்தேனென்
காபாலி தேவனுடன் காணவுன்னை - நீபாலி
மாபாதம் தந்துன்றன் மங்காப் புகழையென்
பாபாட சொற்பதங்கள் தந்து 8
தந்துன் பதஞ்சேர்க்கும் தந்திமுகன் அன்னையே
சிந்தும் எழில்கொஞ்சும் சீராளே - சிந்தையிலே
நொந்தே உடல்நையா மற்காக்க கற்பகமுன்
விந்தை எமக்கும் அருள்  9
அருளாயோ அன்னையுனை பாப்பூவால் பாட
இருவிழியால் சற்றேபா ராயோ? - திருமால்
மருகோனை ஈன்றாளே! சாற்றுகவி மாலை
உருவாக நற்றமிழ்நான் கற்று. 10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...