டிசம்பர் 16, 2014

சிவனந்தாதி.. ஒரு முயற்சி..

காலை நேரத்திலே கண்விழித்தால் கவிதைதான் தோன்றுகிறது. இன்று ஒரு அந்தாதி எழுதவேண்டும் என்கிற ஒரு அவா..30 நிமிடத்தில் 11 பாக்கள் பூத்தன. எல்லாம் ஈசனைப் பாடி! 
நண்பர், கவிஞர் இராஜ.தியாகராஜன் அவர்களின் அந்தாதியைப் படித்ததில் வந்த ஊக்கம்.. அவருக்கு என் நன்றி. நேரம் கிடைக்கும்போது இதற்கு காப்புச் செய்யுளும் செய்வேன்.. முடிந்தால் 50 பாக்கள் வரை நீட்டிக்க வேண்டுமென்கிற ஆசையும் உண்டு.

சிவனந்தாதி

மாதவனே மிக்குகந்த மார்கழியாம் மாதத்தில்
போதமிகு புண்ணியர்கள் கூடுவர்கள் - ஏதமிலா
வேதசிவன் ஏற்றமதை இன்னிசையால் நாடோறும்
ஓதவுளம் ஒன்றிக் கனிந்து
கனிந்திடும் மாதொரு பாகனைதீம் பாவால்
இனித்திடவே ஏற்றமுடன் பாடு - கனிந்த
கனிச்சுவையும் சேர்த்ததிலே கூட்டி உளத்தில்
புனிதம் கலக்குமொரு பாட்டு
பாட்டும் பரதமும் பாகத்தான் பாருளோர்க்கு
காட்டிய நற்கலைகள் பண்பாக - ஆட்டுவித்து
வாட்டமிலா வாழ்வை வழங்கிடும் வள்ளலை
நாட்டமுடன் நாவாறப் பாடு
பாடுபட்டு பெற்ற பிறப்பிலொரு புண்ணியமும்
தேடுகிலீர் ஓடியெதைத் தேடுகிறீர் - வாடியுயிர்
கூடுவிட்டு தாம்பிரியும் முன்னேயும் வீடுவழி
தேடுகிலீர் தேறுவது என்று?
என்றுமெங்கும் உள்ளானை ஏகாந்த ரூபனை
வென்றுபுரம் மூன்றினையும் தீய்தெரித்த தீச்சுடரை
ஒன்றியிருந் துள்ளார உள்வோர்க் குகந்தானை
மன்றாடும் வாயிலிலே காண்
காண்பாரைக் கண்பார்க்கும் காருண்ய மூர்த்தியை
மாண்மிக்க ஞானியர்க்கும் எட்டாக் கருப்பொருளை
ஆண்டவன் ஆதிதேவன் அண்டம் நிறைந்தானை
தோண்டியுளப் பீடத்தில் பார்
பார்வதியின் நாதனுயர் பர்வதத்தின் நாயகனே
பார்க்கும் பரவெளிக்கும் மூலனே - நீர்மலிந்து
ஆர்க்கும் நதிமங்கை வெண்மதியை சூடுமுடி!
ஈர்க்கும் வசீகரனே நீர்!
நீரின்றி நெஞ்சத்தில் வேறொரு தெய்வமுண்டோ?
ஆரின்று ஆதரிப்பார் அண்ணலே ? - நாரின்றி
நீரிருந்தால் நானிலத்தில் நாதியிலை ஆதியே
பேரிடர் வாராது கா!
காப்பதும் கண்கட்டிச் சாய்ப்பதும் நீயன்றோ
பூப்பதம் காட்டுவாய் புண்ணியா - பாப்பதமாய்
பூப்பதெல்லாம் நீயுகந்த சீர்த்தமிழால்! உன்னையான்
கூப்பிட்ட போதெல்லாம் வா
வாசிவாசி யென்றுன்னை வாழ்த்த தமிழன்னை
பூசினாள் என்நாவில் பூக்கதமிழ் - ஏசினாலும்
நேசிக்கும் நேயாநீ நாயேனுக் குன்னருளை
ஆசியினை ஆசின்றி தா
தாயாகித் தந்தையு மானதயா தத்துவனே
ஓயாதுன் நாமமே என்நாவில் - பாயாதோ
நேயாவுன் இன்கருணை சேயே னுனைப்பாட
தூயா தருகமாத வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...