வாழ வகையில்லாதவற்கு மரணம் வரமாம்! அதைக் கொடுப்பதெதுவோ அது கடவுளாம்! இதனால சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், தற்கொலையோ, கொலையோ தவறில்லை, வாழ வகையில்லாதவரைப் பொருத்தவரை. இந்த சமூகத்தில் இருக்கும் அவலங்களைக் களைய முடியாது என்கிற உச்சக்கட்ட தோல்வி மனப்பான்மையின் வெளிப்பாடுதான் நான் கடவுள்.
ஸுப்பர் ஹீரோக்கள் வழக்கமாக செயல்படும் உலகத்திரை பாணியிலே, யதார்த்த பூச்சுடன், கோமணாண்டியாய், தண்டபாணியாய், தண்டல் அதிகாரத்தை ஒரு அஹோரிபாபா எடுத்துக் கொண்டிருக்கும் படம்தான் நான் கடவுள். வணிக சினிமாவின் மற்றொரு முகம்தான் இது.
இந்த படத்தில் பாராட்டத்தக்க “நிறைகள்” நிறைய. இருந்தாலும் படம் முடிந்த பிறகு, எந்த வித பாதிப்பையும், ஒரு நல்ல வித்தியாசமான படத்தைப் பார்த்தோம் என்னும் நிறைவையும், என்னுள் ஏற்படுத்தவில்லை..
வழக்கம் போல ஹீரோ, (அழுக்கு அஹோரியான ருத்ரன்) வில்லன்களை சம்ஹாரம் செய்து, அந்தோ பரிதாப அம்சவல்லிக்கு மோட்சகதி (அவளுக்கு மரணத்தை அளிப்பதன் மூலம்), தந்து, மறுபடியும் காசிக்கு வந்து தன் குருவை அடையும் காட்சியில் ஃப்ரீஸ் செய்து, டைட்டில் கார்டில் பாலாவின் பெயர் வரை, சாதாரண ஃபார்முலா படத்தின் அடித்தளம்தான் தெரிகிறது.
குறைகளை விரிக்கும் முன்பு, நிறைகள்.
ஆர்த்தர் வில்சனின் காசி காட்சிகள் – ஜெயமோகனின் விஷ்ணுபுர கதை வருணனைகளுக்கேற்ற இரசனையின் வெளிப்பாடு. விஷ்ணுபுரம் படமாக்கக் கூடுமானால், ஜெயமோகன், உங்கள் மனவெளிக்காட்சிகளை அசலாக படம் பிடிக்க இவர்தான் சரி.
குரூரங்களின் குத்தகைக்கார தாண்டவன் தான் நிஜமாகவே ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார்.
பிச்சைக்கார உடல் ஊனமுற்றவர்கள் உலகும், அவர்களை கொத்தடிமைகளாக்கி கொழுத்துக்கொண்டிருக்கும், பிச்சைக்கார உலக தாதாக்களயும், இவ்வளவு உண்மையின் நிதர்சனமாக எவரும் காட்டியதில்லை. இதற்காக கட்டாயம் பாலாவைப் பாராட்டவேண்டும்.
ஊனத்தை நகைச்சுவையாக்கும் இந்திய சினிமாவிலிருந்து வெளிப்பட்டு, ஊனமிருந்தாலும், உள்ளூடும் நகைச்சுவை உணர்வுகளைப் பாத்திரப் படைப்புகளில் உலவ விட்டிருப்பதற்கும் பாலாவிற்கு பாராட்டு.
உடல் ஊனம் தாண்டிய ஒளியான முகங்களினின் உயர்வான பங்களிப்பு, படத்தின் வெற்றிக்கு உத்தரவாதம் தரவேண்டும். இந்தப் படம் இவர்களுக்காகவே வெற்றிபெறவேண்டும். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இவர்களுக்கும், இன்னும் எத்தனையோ அவலங்களுக்கு நடுவில் வாழும் இவர்களைப் போன்றவர்களுக்கும், ஊனமில்லாத வாழ்வு அமையவேண்டும், அமைத்துத்தரத் தன்னார்வ தொண்டர்களும், நிறுவனங்களும் முன்வர வேண்டும். இலவச கலர் டீவி அரசாங்கங்கள், இவர்களினின் வாழ்வுகளை ஒளிபெறச் செய்யவேண்டும், இனிமேலாவது.
இந்த படத்திற்கு எதற்கு ஜெயமோகன் வசனம் என்ற தவிர்க்கமுடியாத கேள்விக்கு ஆறுதலாக, இழையோடும், கதையோடு ஒட்டிப்போகிற இயல்பான நகைச்சுவை, நாம் அவலம் என்று நினைக்கிற உலகிலும் கூட நம்மைப்போன்றே சிரிப்பும், சின்ன சின்ன சந்தோஷங்களும் உண்டு என்பதைக் காட்டுகிற, கதையின் எல்லைகளை மீறாத வெளிப்பாடு.
ஜெயமோகன், உங்களின் இலக்கிய, சமய, கலாச்சார புரிவுகளும், வெளிப்பதிவுகளும், இப்படத்தின் கனமில்லாத வெளிப்பாட்டை தாண்டியவை என்பது உங்கள் வாசகர்களுக்குத் தெரியும்.
கருணையில்லா, வெறித்தபார்வை ஆர்யாவின் உண்மையான மெனக்கெடல்.
அழகு பூஜாவின், அவலட்சண ஒப்பனையும், அளவான பாத்திரத்துகேற்ற நடிப்பும் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டியவை. இதற்கு உண்மையான விருது, அவருக்கு, அவருக்குள் இருக்கும் திறமையை வெளிச்சத்துக்கு கொண்டுவரும், நல்ல கதாபாத்திரங்கள், நல்ல திரைப்படங்கள் கிடைப்பதுதான். நல்ல நடிகைகளையும், நடிகர்களையும், நல்ல இயக்குநர்கள் கண்டுகொள்வார்கள் என்று நம்புவோம்.
இளையராஜாவின் இசை நீண்ட இடைவெளிக்குப் பிறகு நெகிழ்த்துகிற இசை. பின்னணி சேர்ப்பும், பாடல் வடிவங்களும், தமிழ் திரை இசையை குத்துக்களிடமிருந்து மீட்டுத்தரும் நேரிய முயற்சி.. அவர் பெருங்காயம் இருந்த பாண்டமல்ல.. பெருங்காயம் வாழும் பாண்டம்.
பாலாவின் மற்றைய படங்களைப் போல், வாழ்க்கையின் இருட்டுகளில் இருக்கும் கதாநாயக, நாயகிகள், அவர்களது அவல வாழ்க்கையில், அவர்கள் நேர்முகமாகவோ, எதிர்முகமாகவோ பங்கேற்றவர்கள் என்கிற போக்கின் நீட்சிதான் இந்த கதையும்.
அடிக்கடி க்ளோசப்பில் வந்து பயமுறுத்தும் விதமாக “அஹம் ப்ரம்மாஸ்மி” என்று அறைகூவியிருப்பது, வீட்டில் குழந்தைகளை பயமுறுத்த அடித்தொண்டையிலிருந்து உறுமிச் சொல்லும், “பூச்சாண்டீ…..!” போல் உள்ளது. மஹாவாக்கியங்களுள் ஒன்றான இதை ஏதோ வில்லன்களுக்கும், விவரமறியாதவர்களுக்கும் பயமுறுத்தும் மந்திரம் போலே காட்டியிருப்பது, அறைகுறை புரிதலைத்தான் காட்டுகிறது. பாலாவின் விவரம் எனக்குத் தெரியாது.. ஆனால் விவரமறிந்த ஜெயமோகனுக்குக் கூட இது அதிகமாகத் தோன்றவில்லையா?
கதை என்றால், “சுபம்” வேண்டுமென்றில்லை. வழக்கமான காதல் கதைகளைப் போல், காதலித்து, பெற்றோர்/மற்றோர் எதிர்ப்புகளிடையே மணம் செய்துகொள்வது, அல்லது உலகமகா பாதகங்களின் ஒட்டுமொத்த குத்தகைகாரர்களாக வரும் ஒன்று அல்லது மேற்பட்ட வில்லனை/ர்களை கூட்டத்தோடு அழித்து முடியும் கதைபோல் இல்லை என்கிற ஒரு தோற்றமிருந்தாலும், நான் கடவுளும், வரம்பற்ற நியாயம் வழங்குகிற அதிகாரம் பெற்றவனாகத்தான் தன்னுடைய கதாநாயகனையும் படைத்திருக்கிறது.
சிறுவயதில் காசியில் விட்டுவிட்டுப் போன மகனைத் தேடி வரும் தந்தை, அவனை தேடுவதில் பயன்படும் காசி பண்டிதர், அஹோரி ருத்ரனின் குரு, அவனின் தங்கை என்று ஒரு “திடுக்”, மிஸ்டிக் படமாக ஆரம்பித்தது, தமிழ் நாட்டின் களத்துக்கு மாறியதும், மலைகோயில், போலி சாமியார்கள், ருத்ரனின் கஞ்சாவோடு கூடிய மோன தவம், ஹிந்தி, ஸம்ஸ்க்ருதம், சிதைவாகி வருந்தமிழ், இடையே அடிவார ஊன பிச்சைக்காரர்கள், அவர்களை சந்தைச் சரக்குகளாக்கி சம்பாதிக்கும் நிழலுலக தாண்டவன், அவனுடைய அடியாட்கள், இவர்களுள் கருணையுள்ள ஆனால் காரியத்தில் கருத்தாயிருக்கிற ஒரு அடியாள், இவர்களிடம் போலீஸ் உதவியோடு மாட்டிக்கொள்ளும் குருட்டுப் பிச்சைக்காரப் பாடகி அம்சவல்லி, இதில் அம்சவல்லிக்கு கதிமோட்சம் கொடுக்கவே காசியிலிருந்து வந்து பிறகு குருவைச் சென்றடையும் ருத்ரன், அவனின் “முறுக்கு” நடை, தொலைத்த/தொலைதூரப் பார்வை, அதிரடி அடிதடி என்று கதை எங்கெல்லாமோ பயணித்து, கடைசியில் என்ன சொல்லவருகிறார் என்று பார்த்தால், அதே “அஹம் ப்ரம்மாஸ்மி”, அதுவும் நம்மூக்கிற்கருகில்…மிகவும் அருகில்.. ஐயோ பூச்சாண்டிதான்!
படம் பார்க்கவந்தவர்கள், பார்த்துவிட்டு வந்தவர்கள் சிலரிடம் பேசும் போதும், பத்திரிக்கை விமரிசனங்கள் சிலவற்றைப் படிக்கும் போதும், யானயைத் தடவிப் பார்த்து வருணித்த குருடர்களின் கதைதான் நினைவுக்கு வந்தது..! ஒருவேளை அதுதான் பாலாவின் நோக்கமோ?
கருணைக் கொலைகள் தேவையா என்னும் விவாதமே இன்னும் முடிவடையாதபோது, இந்த மாதிரி அதிரடி முடிவுகள் வணிக வெற்றிக்கு வேண்டுமானால் நியாயப்படுத்தப்படலாம், ஆனால் சமூக அவலங்களுக்கு முடிவான தீர்வாக அமையாது.
அத்வைத (இரண்டின்மை) சாரமாக சொல்லப்படும் மஹாவாக்கியங்களுள் ஒன்றான “அஹம் ப்ரம்மாஸ்மி”, “நான் இதுவல்ல, தான் அதுவல்ல” என்று நினைவூடே எழும் பலவித நிலைகள், மற்றும் தோற்றங்களைக் கடந்து, தன்னை பிறப்பும் இறப்பும், இல்லாத, அழிவில்லாத, என்றும், எங்கும் நிறைந்திருப்பதாயும், விளக்கங்களுக்கும், விவரணங்களுக்கும் புலப்படாத பொருளைக் குறிப்பது. அருணகிரி நாதர் பாடியதுபோல, “உருவாய், அருவாய், உளதாய், இலதாய்,” இலங்கும் பொருள் ப்ரம்மம் என்பது.
அது வன்முறை அறியாத, அஹங்கார நிலையில் செயல்படாத ஒரு உணர்வே தவிர, அதிகாரத்துடன் அறிவித்துக்கொள்ளும் பொருளல்ல! நுணுக்கமான செய்திகளைச் சொல்லவரும் பாலா போன்ற இயக்குநர்கள், முழு பின்புலம், பரிமாணங்களை கற்று, தேர்தல் மிகவும் அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam