உ
அண்மையில் சித்தியடைந்த ஆசார்யர் பூஜ்யஶ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி அவர்களைப் பற்றிய பாடல்கள் எழுதச் சொல்லி, நான் சார்ந்திருக்கும், சந்தவசந்தக் குழுவில் மூத்தவரான புலவர் இராமமூர்த்தி என்னைப் பணித்திருந்தார். ஆச்சார்யரைப் பற்றி எவ்வளவோ பாடலாம். என்னால் இயன்ற அளவில் ஒரு 18 கீர்த்தனைகளை எழுதி இங்கே பதிக்கிறேன். இன்னும் இரண்டொரு நாட்களில் இவற்றின் இசை வடிவங்களைப் பாடி "ஸவுண்ட் க்ளவுட்" (ஒலி மேகம்) என்னும் வலைத் தளத்தில் இடும் எண்ணமும் இருக்கிறது. பின்னர் ஒரு குறைந்த அளவு சுரக்குறிப்புகளையாவது இவற்றுக்குச் செய்யவும் எண்ணமிருக்கிறது. நேரம்தான் கிடைக்கவேண்டும்.. பாடுபவர்களுக்கு எளிதாக இருக்குமென்று நினைக்கிறேன்.. இக்கீர்தனைகளின் வடிவ அமைப்பிலோ, கருத்தமைப்பிலோ, ஏதேனும் குற்றங்குறைகள் இருப்பின், படிப்பவர்கள் தயவு செய்து சுட்டவும்.. அவற்றைத் திருத்தி வெளியிட ஏதுவாகும்.. இவற்றைப் படித்த/பாடிக்கேட்ட சில அன்பர்கள், முத்திரை எங்கே என்றும் கேட்டார்கள்.. முத்திரைப் பதித்தவர்களே முத்திரைகள் இல்லாமல் பாடல் செய்திருக்கிறார்கள்.. நான் எம்மாத்திரம்? தவிரவும், ஆச்சார்யர்களைப் பற்றிப் பாடும் பாடல்களில், அவர்கள் மட்டும்தான் இருக்கவேண்டும்! வலிந்து என்னுடைய முத்திரையென்று, பொருந்தாத வகையில் எதையும் திணிக்க மனம் செல்லவில்லை.
அன்புடன்
அஷோக் சுப்ரமணியன்..
பூஜ்யஸ்ரீ
காமகோடி ஸர்வக்ஞ பீடாதிபதி
ஸ்ரீஜயேந்திர இசை மஞ்சரி
துண்டீர ராஜத் துதிக்கையா! தாமரைத்
தண்டாள் பணிந்து சயேந்திரப் பாமலர்ச்
செண்டளிக் கின்றேன்யான்! சீலனே! தூயனே!
கண்டருள் தாராய் கனிந்து!
அத்துவித ஆசான்கள் ஆன்ற வழிவந்த
சித்கனராம் சந்திர சேகரர் - சத்தெனவச்
சத்குருவே தந்த சயேந்திர மாமணிக்கிப்
பத்திப்பா மஞ்சரிப் பாட்டு!
(1)
நாட்டை: ஆதி (3/4 இடம்)
பல்லவி:
அத்வைத நெறிகாக்கும் அருட்புனலே
ஆதிஶங்கரப் பொறியில் அவதரித்த கனலே!
அனுபல்லவி:
சித்கனரூப ஜயேந்திர ஸரஸ்வதீ!
வித்தக வேதசாஸ்த்ராகம வாக்பதீ!
சரணம்:
நித்திய பூஜா நியமத்தில் நின்றாய்!
சத்குரு சந்திரசேகரர் வழிசென்றாய்
சித்தத் திலென்றும் சேவையைக் கொண்டாய்
உத்தம முத்தனே ஒளிர்ஞானக் குன்றாய்!
(2)
கரஹரப்ரியா: ஆதி (1/2 இடம்)
பல்லவி:
ஜயஜய ஜயேந்திர ஸரஸ்வதி
ஜகத்குரு பாதாரவிந்தமே கதி!
அனுபல்லவி:
பவபயம் போக்கிடும் பரமகருணாநிதி
அவமதி நீங்கிட அவர்பதமே ததி!
சரணம்:
கரசரணங்கள் காருண்ய வாரிதி!
கண்கள்கனிவிலே காண்பது குளிர்மதி!
வரமென வாக்கமுதம் வற்றா ஜீவநதி!
தண்ணருள் பெறவே சத்குருவைத் துதி!
(3)
ஶங்கராபரணம் (மிஶ்ர சாபு)
பல்லவி:
ஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதி -
ஸனாதன ஸாரதி - யதி
அனுபல்லவி:
காமகோடி பீடம் அமர்ந்து
காஞ்சிமுனியின் சீலம் தொடர்ந்த
சரணம்:
சாரதையும்ஸ்ரீ ரமையுமெனுமிரு
நீரதமருளும் நிமலைவிழிகளின்
ஈரமன்பர்க்கென் றுமிருந்திட
நீரஜாக்ஷிகா மாக்ஷியைத்தொழும்
ஈரம் - கருணை
(4)
வாசஸ்பதி (ரூபகம்)
பல்லவி:
ஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதீ
திருவருள்புரி தயாநிதி!
அனுபல்லவி:
தீனருக்கருள் சீலமே
சின்மயானந்த கோலமே -ஜெய (ஸ்ரீ)
சரணம் 1:
வேதசாஸ்த்ர ஞானமாகி
வியந்திடும் ப்ரபாவமாகி
நீதமோதத் துறவியாகி
நிறைசிறந்த நிமலயோகி (ஸ்ரீ)
சரணம் 2:
ஸத்வகுணம் ஶாந்தரூபம்
ஸந்ததமும் மந்தஹாஸம்
சிந்தையில் ஸஹாயபாவம்
சீதநதி வாக்ப்ரவாஹம்! (ஸ்ரீ)
(5)
பேகடா (கண்டசாபு)
பல்லவி:
இருள்நீக்கி தலமுதித்த ஈசஸ்ரீ ஜயேந்திரா
மருள்நீக்கி மாஞானம் மகிழ்ந்தருளும் சங்கரா!
அனுபல்லவி:
இருஞ்சிறையாம் இகவாழ்வின் இருள்மாய வாழ்விதிலே
அருளொளியாய் அகவிருளை அகற்றவந்த அண்ணலே! (இருள் நீக்கி)
சரணம்:
கருணைவிழி கனிந்துமனம் கரைந்துருகச் செய்கிறாய்!
பெருமைசெய்து பேதையனின் பிறப்புக்கொரு பொருள்தந்தாய்!
தருநிழலில் அமர்ந்தருளும் தக்ஷிணா மூர்த்திபோல்
குருவேநீ திருசெய்தெம் குலம்வாழும் வகைசெய்தாய் (இருள் நீக்கி)
(6)
தன்யாசி (ஆதி ½ இடம்)
பல்லவி:
கண்டேன் குருமணியைக் காஞ்சியிலே - நான்
கண்பெற்ற பயனென்றே கண்டுகொண்டேன் (கண்டேன்)
அனுபல்லவி:
தண்டம் ஏந்திய கையும் தளிர்க்கும் குறுநகையும்
கொண்டே பக்தரைக்குறை அண்டாதருள் தகையைக் (கண்டேன்)
சரணம்:
உண்டே! உதவும்கரம் உண்டே! அதனருளை
உண்டேன், உவகைமிகக் கொண்டேன், உயர்வும்மிகக்
கண்டேன், உளத்தில்நிறை கொண்டேன் குருவருளை
விண்டேன், பணிந்துபதம் கொண்டேன் விழியிரண்டில் (கண்டேன்)
(7)
ஸாவேரி (கண்ட சாபு)
பல்லவி:
கலிதீர அவதரித்த காலடிஶங் கரஜோதி
காஞ்சியில்ஜ யேந்திரராய்க் காட்சி தந்ததே
அனுபல்லவி:
ஜொலித்திடும் சொல்வன்மை சுடர்வீசும் மெய்ஞானம்
மலிந்திடும் வாக்கமுதம் மலர்ந்திடும் வதனமெனக் (கலிதீர)
சரணம்:
வலிமிகுந்த வஞ்சகர்க்கும் வணங்காத வலிமையுடன்
பொலியருளைப், புன்சிரிப்பைப், பூரணமாய்க் கண்டோமே!
நலிவுற்ற தீனரெலாம் நாடோறும் நன்மையுறச்
சலியாமல் பலகாதம் தலந்தோறும் சென்றுலகில் (கலிதீர)
(8)
பைரவி (மிஸ்ரசாபு)
பல்லவி:
வேதநாதனுக்கே ப்ரணவாகார சாரத்தைப்
போதனை செய்த புண்யன் சுப்ரமண்யன்-கண்யன்
அனுபல்லவி:
சீதகம்பைக் கரையில் சீலர்சந்த்ர சேகரர்பால்
ஓதிச்சிறந்தானிந்த சுப்ரமண்யன்-லாவண்யன்
சரணம்:
இச்சாசக்தி, பொறியென்றாகி ஈன்றதன்றோ சுப்ரமண்யம்
ஈசனவன் க்ரியாசக்தி என்பதன்றோ சுப்ரமண்யம்
இச்சகத்தில் சந்த்ரசேகர இறைவனீந்த பெரும்புண்யம்
ஈசகுமரன் ஜயேந்திரன் என்றேயான சுப்ரமண்யம்
(9)
கல்யாணி (ஆதி)
பல்லவி:
கண்டோம் காஞ்சியிலே கனிந்த துறவியாய்
விண்டோம் அவரே வேதஞான வாஹினியாய்
அனுபல்லவி:
பண்டுபார் கடலாலப் படுநஞ்சை உண்டநீல
கண்டஏ கம்பனே கலியில் அவதரிக்கக்
சரணம்:
தண்டமேந்தும் கையில் தயையின்றி வேறில்லை
கண்டமெழும்பும் சொல்லில் கனிவின்றி வேறில்லை
மிண்டர்தம் தொல்லைக்கும் மிரளாப் பொறுமையெல்லை!
சண்டமாருதம் வரினும் சாயாஜ யேந்திரரைக்
(10)
தோடி (ஆதி)
பல்லவி:
நினைவாயென் நெஞ்சே, நிர்மலகுருவை!
வினையாவும் கெடுமே, விளைந்திடும் நலமே!
அனுபல்லவி:
தனைநாளும் ஜனசேவைத் தவத்தினி லேநிறுத்தி
முனைவோடு முதல்நின்ற முத்தர்ஜ யேந்திரரை
சரணம்:
சுனைநீர் போலவரே ஸுகம்தரும் ஶாந்தி
கனைகடல் போலொரு காருண்ய வாரிதி
புனைதுறவுக் கோலம் புண்ணியத் தின்ததி
நினையாமல் குருபாதம், நேருமோ சற்கதி?
ததி-வலிமை
(11)
ஸரஸ்வதி (ஆதி ¾ இடம்)
பல்லவி:
ஸத்குரு ஜயேந்திர ஸரஸ்வதி
நித்திய ஞானானந்த நிதி!-யதி -ஸ்ரீ (ஸத்குரு)
அனுபல்லவி:
அத்வைத ஆன்மிகக் குளிர்மதி
வித்தக வேதாந்த சன்மதி -ஸ்ரீ (ஸத்குரு)
சரணம் 1:
எத்தனை பிறவிகளை எடுத்தெடுத்து இளைத்தாலும்
புத்தியில் அகலாத பூர்வகர்ம தொல்லை
ஸத்குரு பாதங்கள் சற்றேயுள் நிலைத்தாலும்
நித்தியம் சுகம்வரும் நிகரதற் கில்லை - ஸ்ரீ (ஸத்குரு)
சரணம் 2:
முத்தரை நினைவார்க்கு மோதம் வாய்திடுமே!
ஸத்தினைத் உணர்ந்தார்க்கு ஶாந்தம் வந்திடுமே!
இத்தரை வாழ்வினில் இனிமையும் எளிமையும்
ஸத்குரு சரணங்கள் ஸந்ததம் தந்திடுமே -ஸ்ரீ (ஸத்குரு)
(12)
ஹிந்தோளம்: (ஆதி)
பல்லவி:
சந்த்ரசேகர ஸத்குருவாய்-ஜய
இந்த்ரஸரஸ்வதி கண்டோமே! - பூஜ்ய
அனுபல்லவி:
மந்தஹாஸ முகமும் மாணிக்க வாக்கும் - ஆத்ம
பந்துவைப் போலொரு பரிவான நோக்கும் - கொண்டே (சந்த்ர)
சரணம்:
நிந்தனை செய்தார்க்கும் நினைந்தது அருளே-ஒரு
அந்தமில் அருட்கடல் ஆனவர் அவரே - குரு
கந்தனைப் போல்ஞானக் கடலும் அவரே - வரும்
சந்தக்கவி அனைத்தும் ஸத்குரு அருளே - திரு (சந்த்ர)
(13)
தேவமனோஹரி: (ஆதி)
பல்லவி:
குருஜயேந்திர ஸரஸ்வதி - திரு
வருள்பெற துதியவர் கழலன்றோ கதி!
அனுபல்லவி:
இருவினை தீர்க்கும், இறைபதம் சேர்க்கும்
இருள்நீக்கி மருள்போக்கும் இணையிலா ஜோதி
சரணம்:
கருணைத்திரு உருவில் கனிந்தபுன் னகையும்
அருளாசி அள்ளித்தரும் அன்பான வாக்கும்
வருமாந்தர் யாவர்க்கும் வரையிலா சமநோக்கும்
தருந்துறவி நிழல்தரும் தருவாம்த யாநிதி!
(14)
ஸஹானா: (ஆதி)
பல்லவி:
காமாக்ஷி அன்னையே காருண்ய வடிவமாய்க்
காமகோடி குருமணியாய் வந்தனளே - கஞ்சி (காமாக்ஷி)
அனுபல்லவி:
ஏமம்திகழ் நுதலும் இன்னகை வதனமும்
சேமவிழி நோக்கும் செந்தவ உருவமாய் (காமாக்ஷி)
சரணம்:
தாமந்தரும் வாக்காம் தயையருள் கரங்களாம்
காமம்கடி மனமாம் கனிவில் கற்பகவனமாம்
நேமம்நிறை வாழ்வாம் நிழல்தரும் கழல்களாம்
பாமமிகு துறவின் பரிதிஜ யேந்திரராய் (காமாக்ஷி)
(ஏமம்-திருநீறு); (தாமம்-பரமபதம்)
(15)
பந்துவராளி: (ஆதி)
பல்லவி:
ஜகத்குரு ஜயேந்த்ர ஸரஸ்வதி - பக்தர்
அகங்களில் நிறைந்திடும் அருள்நிதி - காஞ்சி
அனுபல்லவி:
காஶ்மீரம் முதலாய்க் கன்யாகுமரிவரை
ஶாஸ்வதமான ஸனாதனம்வளர்த்த (ஜகத்குரு)
சரணம்:
காஞ்சியதே நமக்குக் கைலாசம் - நம்மை
வாஞ்சையுடன் காக்கும் வரகுருவே ஈஶன்
பூஞ்சையர்க்கும் கனிந்து புண்ணியமே நல்கும்
ஆஞ்சனேய அவதார அனுஜ-ஸ்ரீ
(16)
ஹமீர்கல்யாணி (திஸ்ர ஆதி)
ஜயஜய ஶங்கர ஜயஜய ஶங்கர
ஜயஶங்கர குருவே!
ஜயஶங்கர குரு - ஜயேந்த்ர ஸரஸ்வதி
சின்மயதிரு உருவே!
ஒருமா தருநிழல் உறையும் இறையினை
உணர்வாய் கருநெஞ்சே!
குருவாய் வருவார் குஹனார் வடிவில்
குறையோ டிடுமஞ்சேல்!
பருவம் செயுமாம் பலவாம் தொல்லை
பழியே தருவஞ்சம்
நெருப்பாய் எரிப்பார் நெஞ்சில் நினைநல்
வழியாய் அடைதஞ்சம்
அருணைக் கோபுர அடியில் ஒருவர்க்(கு)
அளித்தார் அருள்தஞ்சம்
கருணைக் குருவின் கனிவாம் அதுவே
காஞ்சியில் மிகவிஞ்சும்
விருப்பும் வெறுப்பும் வேருடன் கெடவே
வைத்திடும் கழற்கஞ்சம்
உருவாய் அருவாய் உளதாம் குருநிழல்
ஒன்றே அருள்கொஞ்சும்
விஞ்சும் - மேலாகும்
(17)
ப்ருந்தாவன ஸாரங்கா (ஆதி):
பல்லவி:
ப்ருந்தாவனம் கண்டேன் – அழகிய
ப்ருந்தாவனம் கண்டேன் – காஞ்சியில்
ப்ருந்தாவனம் கண்டேன் – பெரியவா
ப்ருந்தாவனம் கண்டேன் – காமகோடி
ஆச்சார்யாள் நித்ய வாஸம் செய்யும்
ஆச்சார்யாள் நித்ய வாஸம் செய்தருளும் – (ப்ருந்தாவனம்)
சரணம் 1:
பக்தருக்கெல்லாம் அவர் பெரியவர் – பாரில்
பக்தி அன்பு கருணை நெறியவர் – என்றும்
துறவு நெறி நின்ற துரியவர் – வடிவில்
அறமவர் அரிதின் அரியவர் – அவரின் – (ப்ருந்தாவனம்)
சரணம் 2:
சந்திரஶேகர குருவழி சென்றே- ஜய
இந்திரஸரஸ்வதி நிலைபுகழ் வென்றார்! -
சந்ததம்சத்திய நெறிஞானக் குன்றின்
செந்தழல்சோதியாய் சீலரிவர் நின்ற (ப்ருந்தாவனம்)
சரணம் 2:
சந்திரஶேகர குருபதம் அடைந்தே - ஜய
இந்திரஸரஸ்வதி பெரும்புகழ் உடைத்தார்
சந்ததம்சத்திய வாக்கதன் கொடையால்
அந்தமிலாயிரம் அற்புதம் படைத்தவரின் (ப்ருந்தாவனம்)
சரணம் 3:
ஆதிசங்கரரின் அவதாரம் என்றே
அவனியில் ஆன்றோர்கள் கூறுவரே
ஆதிபரம்பொருள் அகண்ட ஜோதியாய்
அத்வைத சாரமாய் அமைந்த நம்குருவின் (ப்ருந்தாவனம்)
(18)
நீலமணி: (ஆதி)
பல்லவி:
தெய்வத்தின் குரல்நம்மைத் தேடி வருகுது - அருள்
செய்கின்ற சேதிகளைச் செவியில் கூறுது - அந்த (தெய்வத்தின்)
அனுபல்லவி:
வையமெல்லாம் வியக்கும் மெய்யவதாரமாய்
பெய்யுங்கருணை மழை பேரருள்ஜயேந்த்திர (தெய்வத்தின்)
சரணம்:
கைகளில் தண்டமும் கண்களில் கனிவும் - அத்
வைதநெறி காட்டும் அருளென வாக்கும்
வெய்யிலாம் வாழ்விலே தருவென நிழலும் - உயர்
மெய்ஞ்ஞான போதமும் மோதமும் தருமந்த
*** ஜயேந்திர இசை மஞ்சரி நிறைவுற்றது ***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam