ஜனவரி மாதம், கவிவேழம் இலந்தை இராமசாமியவர்களின் ஆன்ற தலைமையில் நடந்த இணையக் கவியரங்கத்திற்காக எழுதிய கவிதை..
------------------------------------------------------------------------
கவியரங்கம் - 44
தலைப்பு: : இப்படி எப்படி?
தொடக்கநாள்: 28-திசம்பர்-2017
இட்டநாள்: 11-சனவரி-2018
------------------------------ ------------------------------ -------
வேழமுகன் போற்றி!
வேழமுகம் போற்றி வினைகள் துவங்குவோர்க்குப்
பாழாமோ ஏதுமிந்த பாரினிலே? - வாழுமிந்த
வையத்தில் செந்தமிழாய் வந்துளத் தேகுதுதிக்
கையனே, நீயன்றோ காப்பு!
கவிவேழம் போற்றி!
ஆழப் பயின்றறிவில் ஆன்றதலை மைக்கவி
வேழம்நம் பாப்பயிர்க்கு வித்தாவார் - சூழும்
கவிவாணர் பூத்திங்குக் காய்த்துக் கனிய
உவந்தே இடுவார் உரம்!
கவிக்குலத்தோர் போற்றி!
செந்தமிழ்த் தேறலால் தீங்கவிகள் யாத்திடும்
சந்தவசந் தக்கவிச் சான்றோரே! - அந்தமின்றி
வந்துநாளும் இவ்வரங்கில் வட்டிக்கும் பாக்குலமே!
தந்தேன் உமக்கெல்லாம் தாழ்!
இப்படி எப்படி?
இப்படி எப்படி என்றே வியக்க
அப்பா! எத்தனை அதிசயம் உலகில்?
இப்படி எப்படி என்றே விதுப்புற
தப்பாய் எத்தனை தாரணி தன்னில்?
இப்படி எப்படி என்றே நினைக்க
சிப்பியின் முத்தாய் சிந்தனைக் குவியலைச்
செப்ப முடைத்தாய் செதுக்கிப் புதுக்க
இப்பா வரங்கில் எத்தனைக் கவிஞர்? ....(1)
சங்கத் தமிழ்ப்பா சாற்றுங் கவிக்குலம்
இங்கே திரண்டு எழுதும் கவிதைகள்
பங்கில் உமையொரு பாகன் கூரைகீழ்
தங்கத் தாமரை தடாகம் தன்னிலே
பொங்கும் புனல்மேல் பொலியும் பலகையாய்
நங்கவி யாப்பை நன்றெனில் ஏற்கும்!
மங்கிய தென்றால் மயக்கம் நீக்கித்
பங்கம் வராமல் பகரே செய்யும்!....(2)
இவர்கள் வாக்கில் எத்தனைப் பொருட்கள்!
உவக்கச் சிலவாம், உவட்டும் சிலவாம்!
கவர்ந்து உள்ளம் கனியச் சிலவாம்!
சிவந்து கண்கள் சினக்கச் சிலவாம்
பவத்தில் காணும் பருப்பொருள் எல்லாம்
சிவமே என்னும் சிந்தனை சிலவாம்!
அவமே ஆயினும் அழகாய் கவிதைத்
தவமாய் தமிழால் தழைக்கும் புலமாம்!....(3)
நாட்டு நடப்பினில் நாளும் வெதும்பி
நாட்டம் வாழ்வில் நலிந்த மனங்களை,
ஈட்டும் வழியெதும் இல்லா தொழிந்து
கேட்டில் உழன்று கிழியும் உடல்களை,
ஆட்டம் போட்டு அரசியல் செய்து
வேட்டை யாடிடும் வீணர் கும்பலை,
ஓட்டை விற்கும் ஒழுக்க கேட்டைச்
சாட்டை கொண்டு சாடும் கவிகள்!....(4)
சூட்டிகை யில்லா சுதந்திர மக்களை,
தீட்டென தீயத் தீண்டா மையெனும்
பூட்டினை இன்னும் போடுவார் தம்மை,
பாட்டிலே பிறமொழிப் பதங்கள் சேர்த்து
‘நோட்டுக்’ காக நுவல்திரைக் கவிகளை
மேட்டுக் குடியின் மேதமை யென்று
நீட்டி முழக்கும் நிருமூ டிகளைக்
காட்டிக் கசையடிக் கனலாய் கவிகள்!....(5)
இத்தரை மீதினில் எத்தனை மதங்கள்?
நித்தமும் அவற்றால் நேர்பவை காணின்,
சித்தரும் முத்தரும் சீரறி வாளரும்
வித்தகச் சாத்திர வேதவல் லோர்களும்
பித்தம் நீக்கப் பிறந்து இவணா?
புத்தர் பிறந்ததும் போதியின் கீழதில்
உத்தம ஞானம் உணர்ந்துப் பெற்றதும்
சத்தியம் தானா? சாத்தியம் தானா?....(6)
எங்கே நேர்மை? எங்கே ஒண்மை?
எங்கே உண்மை? எங்கே தூய்மை?
எங்கே எங்கே எங்கே என்றே
அங்கும் இங்கும் அலையும் மனங்கள்
சிங்க மாகச் சீறும் குரல்கள்
அங்கதப் பேச்சு, அங்க லாய்ப்புகள்!
இங்கே எப்படி இப்படி யாச்சென,
கங்குல் நிலைக்காய் கதறும் கவிகள்!....(7)
கவிகள் வாக்கில் கனலுண் டானால்
கவிதை பூக்கள் கனன்றெழு மானால்
புவிமேல் சத்தியம் புன்மைகள் மாயும்!
கவிந்த இருளும் கன்மக் கேடும்
அவியும்! அளிசெய் ஆதவன் அருளால்
சவியுடன் மீளும் சகமும் ஒருநாள்!
கவிவல் லோரே! கருமாய் அதனால்,
கவியாப் பீரே! கவியாப் பீரே!....(8)
இப்படி எப்படி என்பது வேதனை!
இப்படி எப்படி என்பது வியப்பு!
இப்படி எப்படி என்பது சீற்றம்!
இப்படி எப்படி என்பது சிந்தனை!
செப்படி வித்தை செய்வது இல்லை!
தப்படி வைத்தால் தப்புவ தென்னாம்?
அப்படி யன்றி, அதனால் கேட்போம்
இப்படி எப்படி என்றே கவிதையில்!....(9)