ஶுபாகமன்
(ஸ்ரீக்ருஷ்ண ஸுதாமா)
கணபதி வந்தனம் - ராகம்: கணபதிப்ரியா: (ஸரீ3க3பநீ3ஸ்)
கந்தைச்சு தாமர்க்கு கண்ணன்
கனிந்தகதை
செந்தமிழில்
நாடகமாய்
சீர்த்தியுடன்
செய்வதற்கு
தந்திமுக ஐங்கரனே தந்தருள்வாய்
விந்தைமிகு
சந்தமுடன் பாடிடவே சற்று
சரஸ்வதி வந்தனம் - ராகம்: சரஸ்வதி:
வாணி அயன்ராணி! வாக்கு
தவுமமுதக்
கேணி! அருள்தரு கீர்வாணி
- பாணிமிகு
பாடலில் வந்திறங்கு பாரதியென்
பாப்பொருள்
கூடத் தமிழைக் கொடு!
தக்ஷிணாமூர்த்தி வந்தனம் - ராகம்: கேதாரம்
ஆலம் அமர்ந்தருள் ஆரணப்
பூரணா
வாலா திரிசூலா வான்மியா
- காலனை
காலதால் கன்றிடச் செய்தவா,
காவியம்
சாலவும் செய்யவருள் தா
திருமால் வந்தனம் - ராகம்: சாரங்கா
வேத வியாசன் விளைத்தநூல்
பாகவதம்
போதச் சுகர்வாய் புகல்வழி
புக்கிங்கே
நீதமுடன் யாமுரைக்க நீயருள்!
மாலேநின்
பாதங்க ளேயெமக்குப் பற்று!
Scene1:
நைமிசாரண்யம் - ஸுத
பௌராணிகர்,
சௌனகர்,
மற்றும்
சில
ரிஷிகள்.
சௌனகர்,
ஸுதரை
மேலும் ஸ்ரீக்ருஷ்ண பகவானின்
உத்க்ருஷ்டமான
லீலைகளயும்,
அவர்
பக்த
ஸ்ரேஷ்டர்களுக்கு
அருள்
செய்த
சரிதங்களையும்,
சுகப்ரம்ம
ரிஷி
பரிக்ஷித்து
மஹராஜனுக்கும்
கூறியவாறு
விரித்துரைக்கக்
கேட்கிறார்;
ராகம்: நாட்டை; தாளம் - ஆதி
பல்லவி:
நேமிச ஆரண்யம் எனும்
மறைக்காடு
பூமியில் புண்ணிய தவத்தினர்
வீடு
அனுபல்லவி:
நேமமாய்
சத்திர
வேள்வியை
வளர்த்திட
வாமமா முனிவரும் வந்தவண்
செளனக
நாமனே முதலாய் நடத்திட
வேண்டினர்
ஆமென தேவரும் அதைவழி
மொழிந்தனர்!
வேதகோஷம் 1: (ஶாந்தி மந்த்ரம்)
ஓம் சஹனா வவது||
சஹனௌ
புனக்து
|| சஹ வீர்யம் கரவாவஹை
||
தேஜஸ்வி நாவதீத மஸ்து
||மா வித் விஷாவஹை
||
பொருள்:- நம்மை இறைவன் பாதுகாப்பானாக! நாம் மகிழ்ச்சியாய் இருக்கவும், உழைக்கவும் இறைவன் அருள்வானாக! நமது கல்வி நிறைவானதாகவும் பலனளிப்பதாகவும் அமைய இறைவன் அருள்வானாக! நாம் ஒருவருக்கொருவர் இணக்கமாக இருக்க அருள்வானாக |
பொருள்:- நம்மை இறைவன் பாதுகாப்பானாக! நாம் மகிழ்ச்சியாய் இருக்கவும், உழைக்கவும் இறைவன் அருள்வானாக! நமது கல்வி நிறைவானதாகவும் பலனளிப்பதாகவும் அமைய இறைவன் அருள்வானாக! நாம் ஒருவருக்கொருவர் இணக்கமாக இருக்க அருள்வானாக |
சரணம்1:
வேள்வியின் நிறைவில் வியாசனின்
மகனாம்
கேள்வியில் நிறைந்தார், கிளிமுனி
சுகனார்
பண்டொரு நாளில் பரிக்ஷித்து
அரசனார்
தண்டமாய் கொடுவிட தக்ஷனால்
மடியுமுன்
அண்டமும் அரசனும் அனைவரும்
பயனுற
விண்டநல் நாரணன் வியன்மிகு
கதைகளை,
விரித்துரைத் திடவே வேண்டினர்
சூதரை!
பரிவுடன் ஹரிபுகழ் பகர்ந்தவர்
ஓதினார்!
வேதகோஷம் 2:
நாராயண பரோ ஜ்யோதிராத்மா
நாராயண பர
:
நாராயண பரம் ப்ரஹ்ம
தத்வம்
நாராயண
பர
:
நாராயண பரோ த்யாதா
த்யானம் நாராயண
பர.
- (நாராயண ஸுக்தம்)
பொருள் : நாராயணனே சிறந்த
ஒளி,
நாராயணனே
பரமாத்மா
, நாராயணனே பரப்பிரம்மம், நாராயணனே
மேலான
உண்மை,
நாராயணனே
தியானம்
செய்பவர்களுள்
சிறந்தவர்.
நாராயணனே
சிறந்த
தியானம்.
ரிஷிகள்: ராகம்: சாமா - தாளம்: ஆதி
நானிலம் நலிவுறும் நாளினில்
நாரணன்
மேனியோ டுலகினில் மீண்டும்
மீண்டும்
வருங்கதை எல்லாம் வாய்மொழி
கேட்டோம்
அருஞ்செயல் கண்ணனின் அவதா
ரமதனின்
பெருமைகள் யாவையும் பேசிய
பெரியீர்!
உருகவே மேலும் உரைத்திடு
வீரே!
சூதர்: ராகம்: பஹூதாரி - தாளம் - ஆதி
பல்லவி:
கூறுவேன் தவசிகாள் கொற்றவன்
மாதவன்
வீறுகொள் கதையெலாம் வீற்றிவண்
கேட்பிரே!
சரணம்:
பரிட்சித்து அரசனும் பரந்தாமன் கண்ணனின்
சரித்திர மெல்லாம் தனக்குரைத்
திடசுகப்
பிரமத்தை வேண்டியே, பேறனெப்
கண்ணனின்
பெருமைகள் கேட்டனன் பிறவியை அறுத்தனன்”
“இப்போது பரிட்சித்து இராஜன் சுகரிடம் வேண்டுவது பின்னணியில்...” (shadow play)
பரிட்சித்து: ராகம்: ஹம்ஸநாதம்; தாளம் -ஆதி
மாதவன் புகழ்சொலும் வாக்கதே
வாக்குமாம்
பாதனைப் பூசிக்கும், பாக்கியம்
கைகளாம்
புத்தியில் நினைபவை புண்ணிய
மனங்களாம்
நித்தியம் கேட்பவை நிறைவுறு
செவிகளாம்
தொழுதெழு வனவே துயரறு
சிரங்களாம்
விழுமியன் தரிசனம் விழுவன
விழிகளாம்
அவனடி படுநீர் அடைவன
அவயமாம்!
அவன்புகழ் சரித்திரம் அருளுவீர்
ஐயனே!
மீண்டும் முன்னணியில் நைமிசாரணிய வனம். பரிட்சீத்து காட்சி பின்னணியில் மங்கலாகி மறைகிறது!
சூதர்: ராகம்: பஹுதாரி - தாளம்: ஆதி
சுகமுனி கூறினான் சுந்தரன்
சரித்திரம்
பகருவன் அதிலொரு பக்தனின்
அருட்கதை!
ராகம்: ஹிந்தோளம் - தாளம்: ஆதி
சாந்தீ பனிரிஷி சத்குரு
குலத்திலே
காந்தியில் மிகுந்தோன்
கல்வியில்
சிறந்தோன்,
சாந்தநல் குணவான் சன்மார்கன்
ஸுதாமன்,
காந்தனாம் கண்ணணின் கனிந்தநல்
தோழனாம்!
கந்தையே ஆடையாய் கடும்வறு மையிலும்
நந்தன் மகனவற்கு நலம்தரு செல்வமாம்!
சுந்தரக் கண்ணனே சொந்தம் ஸுதாமருக்கு
விந்தையாய் யாவரும் வியந்திடும் நட்பதாம்!
Scene 2:
சந்தீபனி ஆஸ்ரமம்: இப்படி இருந்து வரும் நாளில் ஒருநாள், குரு சமயலுக்காக விறகும், ஒமத்தீ வளர்க்க, சமித்துகளையும் (இத்துமம்) கொண்டுவர சுதாமவையும், கிருஷ்ணனையும் அனுப்புதல்; குருபத்தினி இருவருக்குமாய் “அவல்” மூட்டையொன்றைக் குசேலரிடம் தந்து பசிவந்த வேளையில் பகிர்ந்துண்ணுமாறு
கூறுதல்)
ஆஸ்ரமத்து குழந்தைகள்:
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே
காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
திரியம்பகம் யஜாமஹே சுகந்திம்
புஷ்டிவர்த்தனம்|
உர்வாருகமிவ பந்தனான் - ம்ருத்யோர்
- முக்ஷீயமாம்ருதாத்|
சந்தீபனி ரிஷி: ராகம்: கீரவாணி தாளம்: ஆதி (திரியம்பகம் ஸ்லோகத் தமிழாக்கம்
கீழே)
நறுமணம் கமழ்பவன் நலமருள்
கருணையன்
இறைமுக் கண்ணனை இறைஞ்சி
வணங்குவோம்
பிறப்பிறப் பின்பிடியில் பிணிந்துழ
லாத
திறந்தரு மோட்ச சிறுபதம்
சேர்ந்திட
(நறுமணம்) (சிறுபதம்-வழி)
(ஆஸ்ரம குழந்தைகளை காலை வகுப்பு முடிந்து, அவரவர் வேலைக்கு அனுப்பிவிட்டு, க்ருஷ்ணனையும், ஸுதாமனையும், இருக்கச்சொல்லிவிட்டு, பிறகு அவர்களை நோக்கி)
சந்தீபனி மஹரிஷி - பூர்விகல்யாணி:
பல்லவி:
ஆரண்யம் சென்று வாரீர்
- சீடர்களே
ஈரமிலா விறகும் இத்துமமும்
கொணர
(ஆரண்யம்)
அனுபல்லவி:
சீராக ஓமத்தீ சிறப்புடன்
நாம்வளர்க்க
தீருமுன் னேவேண்டும்! திரட்டிடவே விரைந்து (ஆரண்யம்)
சரணம்:
ஆறுகுட்டை களெல்லாம் ஆழமாம்
அங்கே!
ஊறுமர வமுதல் உறுமும்
மிருகமுண்டே!
ஏறுமரங் களெலாம் ஏராளம்
அவற்றின்மேல் (ஏறும் - உயரமான)
சீறுகுரங் குகளோ திரிசமன்
செய்யுமன்றே!
சேறுடனே சகதியாய் சிக்கபல குழிகளுண்டே!
கூறுமெனெச் சரிக்கை கொண்டு
கருத்துடனே!
குருபத்தினி: ஸஹானா - ஆதி
பல்லவி:
குருசேவை செய்யவே கொடும்வனம்
செல்கிறீர்!
குழந்தை ஸுதாமா குழலழகா
கண்ணா!
அனுபல்லவி:
தருவேன் அவல்சிறிது, தாளாப்
பசியெடுத்தால்
இருவரும் பகிர்ந்திந்த இன்னவலை உண்ணுவீர்!
சரணம் 1:
செல்லும் வழியெல்லாம் சிற்றோடை
பலவுண்டு!
சில்லெனும் நீரவற்றில் தித்திக்கும்
கற்கண்டு!
தொல்லை வனமுழுதும் துட்டமிரு கங்களுண்டு!
அல்லல் களாயிரமும் அந்தகாட்டி
னிலேயுண்டு!
சரணம் 2:
கொல்லும் பசிவந்தால் கொறித்திந்த
அவலையுண்டு,
நல்லநீ ரைமொண்டு நாகுளிர
நீங்களுண்டு
எல்லி மறையுமுன் இத்துமம்,
விறகுகொண்டு
இல்லினை அடைவீரே என்மொழி நீவீர்விண்டு! (எல்லி- சூரியன்;
விண்டு - தெளிந்து)
(வனம் நோக்கி ஸுதாமனும் க்ருஷ்ணனும் சென்று விறகுகளைப் பொறுக்கி எடுத்து மூட்டைகளைக் கட்டி எடுத்துக்கொண்டு ஓரிடத்தில் வைத்து, பசியாற அவலை எடுத்து உண்ணுகின்றனர்.. ஸுதாமருக்கு விக்கலெடுக்க, க்ருஷ்ணன் ஒரு குவளையில் நீர் எடுத்துவர ஓடைக்கு ஓடி கொண்டு வருவதற்குள், ஸுதாமன் கள்ளத்தனமாக சிலபிடி அவல்களை உண்ணவும், க்ருஷ்ணன் நீரைக் கொடுத்துவிட்டு, ஸுதாமனின் அவல் மூட்டையைப் பார்த்து அதில் இல்லாதிருக்கவே, ஸுதாமனை தன்கண்களாலேயே
வினவுகிறான். ஸுதாமன் நாம் உண்டதுபோக மிச்சமேது மில்லை என்று கையை விரிக்க, க்ருஷ்ணர் ஓரப்பார்வையில் புன்னகைத்துக் கொண்டே, பரவாயில்லை என்பதுபோல தலையசைத்துவிட்டு, நீரைக்கொடுத்துவிட்டு விறகு மூட்டையில் ஒன்றை எடுத்துக்கொண்டு நடக்கிறார்.. ஸுதாமன் குற்ற உணர்வில் க்ருஷ்ணனைத் தொடர்கிறார்...)
Scene 3: (வனம்)
ஸுதாமன்: ராகம்: தேவமனோஹரி: தாளம்-ஆதி
நொந்தன கண்ணாயென் கால்கள்
- இருண்டு
அந்தகன் வந்தாற்போல் கண்கள்
- பசியில்
வெந்தது கண்ணாயென் வயிறும்
- அதனால்
கந்தலாய் ஆச்சுதென் உடலும்
- நடந்து (நொந்தன கண்ணா)
கண்ணன்: ராகம்: தேவமனோஹரி: தாளம்-ஆதி
சிந்தை மயங்கும்ஸு தாமா
- குருவார்
தந்தவே லையினை செய்வோம், மெதுவாய்!
அந்தி வருவதற்கு முன்னே
- இங்கே
குந்தி அவலையுண்போம் சொன்னேன்-
அதனால்
(சிந்தை)
ராகம்: ரஞ்சனி (விருத்தம்)
குளிர்தரு நீழலிலே கொணர்ந்தநல்
அவலுணவை
களித்தனர் ஓரிலையில் கண்ணனும்
ஸுதாமனும்
துளிர்த்ததாம் தாகத்திலே துவள்ஸுதா
மந்துன்பம்
எளிதிலே போக்கிடவே எழுந்தோடி
நீர்கொணர்ந்தான்
அளிசெயும் கண்ணனங்கே! அதற்குள்
ஸுதாமனும்
ஒளித்தொரு கையவலை உண்டதையும்
கண்டகண்ணன்
இளிதவழும் இன்முகத்தான், ஏதொன்றும்
அறியான்போல்
ஒளிமுகத் தால்சிரித்தான் உள்வைத்தான்
ஒருகணக்கை!
(விறகு மூட்டையில் பெரியதை, கண்ணன் தூக்கிக் கொள்ள, ஸுதாமன் குற்ற உணர்வொடு, அவனைப் பின் தொடர்கிறான்... அப்போது இடியும் மின்னலுமாய் அடிக்கிறது. சிறுவர்கள் இருவரும் மழைக்கு ஒரு மரத்தடியில் ஒதுங்கி, அப்படியே அசதியில் தூங்கிவிடுதல். மறுநாள் காலை புலர்ந்ததும்,
சந்தீபனி குரு சிறுவர்கள் இருவரையும் தேடிக்கொண்டு காட்டுக்கு வருகிறார். தன்னந்தனியாக,
மழையும் காற்றுமாக உள்ள நேரத்தில் அனுப்பிவிட்டோமே என்று பதைபதைத்துக்கொண்டு)
ஸந்தீபனி குரு: ராகம்: ரேவதி: தாளம்: ஆதி
என்னருமை குழந்தைகாள்? எங்கேதான்
சென்றீரோ?
இன்னல்களே சூழ்ந்திருக்கும் இந்தயிருள்
காட்டினிலே!
விண்பிளந்த வேளையிலா விறகுக்கு
அனுப்பிடுவேன்?
கண்மணியாம் சீடர்களை, காணயெங்கே
தேடிடுவேன்?
(தேடிக்கொண்டே வருகையில், கண்ணனின் குழலோசைக் கேட்கிறது… ஸந்தீபனி மஹரிஷி முகம் மலர்கிறது.. குழல்வரும் திசை நோக்கி நடக்கிறார்.. அங்கே ஒரு மரத்தின் மீது அமர்ந்து குழல் வாசித்துக்கொண்டிருக்கிறான்.. கீழே ஸுதாமன் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறான்.. வன மிருகங்களெல்லாம் கண்ணனின் குழலோசையில் மயங்கி நிற்க.. ஸந்தீபனி மஹரிஷியின் கண்களில் ஆனந்த பாஷ்பம்… ஓடி சென்று இருவரையும் அணைத்துக் கொள்கிறார். பின்பு இருவரும் பின் தொடர.. ஆசிரமத்தை அடைகின்றனர்.. எல்லோருக்கும் மகிழ்ச்சி..
Scene 3ன் தொடர்ச்சி (சந்தீபனி மஹரிஷி ஆஸ்ரமம்)
ராகம்: அம்ருதவர்ஷிணி: தாளம்: ஆதி
கற்பதெல்லாம் சீடர்காள் கசடறக்
கற்றீரே!
நற்குடியாய் நீவிரெலாம் நாடு
திரும்புவீரே!
அற்புதமாய் கல்வியால்நீர் அடைந்த
ஆற்றலெலாம்
சற்குணச் சீலராய் சந்ததமும்
வாழ்வதற்கே!
(கற்பதெல்லாம்)
Scene 4
பல வருடங்களுக்குப் பிறகு, ஸுதாமன் வீடு; ஸுதாமா-க்ஷூத்க்ஷாமா, குழந்தைகள்;
வீட்டின் ஏழ்மை நிலை; ஸுதாமன்
பூஜை, புனஸ்காரம் முடித்து, பிக்ஷை எடுக்கச் சென்றிருக்கிறார்; வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை; குழந்தைகள் அங்குமிங்குமாய் ஓட்டம், உணவுக்காய் ஒரே ஆர்ப்பாட்டம்; களைத்த உருவினளாய் க்ஷுத்க்ஷாமா கையைப் பிசைந்து கொண்டிருக்க.. ஸுதாமர் வீட்டினுள் நுழைகிறார்
ராகம்: மாயாமாளவகௌளை - ஆதி
குழந்தை 1:
அம்மா எனக்கு அடுபசி
இப்போ!
அடுப்பில் சமையல் ஆவது
எப்போ?
அம்மா:
இடுப்பில் குழந்தை இங்கே
இருக்க
அடுப்பில் வைக்க அரிசியும்
பருப்பும்
கொடுக்க அப்பா குரலையும்
காணோம்
கடுப்பாய் இருக்கேன்! கத்தினால்
அடிப்பேன்!
குழந்தை 2:
அம்மா பரணி அடிக்கிறான்
என்னை
சும்மா சும்மா உருட்டுறான்
கண்ணை
குழந்தை 3: (திஸ்ரம்)
அம்மா ரேவதி அகத்தியக்
காரி
அடித்து எந்தன் காலினை
வாரி
சும்மா என்மேல் துப்புறாள்
காரி
கடித்து விட்டு வைக்குமொப்
பாரி!
குழந்தை 4: (ராகம்: முகாரி - திஸ்ரம்)
அம்மா தாரகை மூலக்காரி
நம்பா தேமிகு பசப்புக்காரி
வம்புகள் செய்வாள் வாயில்சூரி
வாயைத் திறந்தால் வருமுகாரி
குழந்தைகள்:
அம்மா அன்னம்!.. அம்மா
அடித்தான்...
அம்மா
கடித்தாள்..
அம்மா
அதோபார்..
அம்மா இங்கேபார்! அம்மா
தலைவலி!..
அம்மா
அம்மா...
அம்மா..
அம்மா...
(க்ஷுத்க்ஷாமா, குழந்தைகளை கட்டுப்படுத்துவதிலும், சமாதனப்படுத்துவதிலுமே களைத்து, தலை கிறுகிறுத்து ஒரிடத்தில் வந்து உட்காருகிறாள்.. பின்பு அலுப்புடன்)
அம்மா: ராகம்: பிலஹரி: தாளம்: ஆதி
பல்லவி:
பிச்சைக்குப் போனவைய்யன் இன்னும்
வரக்காணேன்
- தீபம்
வச்சுசாய ரட்சைவேளை வந்தபின்னும்
- என்னேயென் சாபம்!
சரணம் 1:
கந்தலாடை மேனியோடு கார்காலக்
குளிர்வாட்ட
எந்தநேரம் பார்த்தாலும் இருக்கிறாரே
சீடரோடே
வந்தால்லோ பொழுதோடு வாய்க்குணவும்
நான்சமைக்க!
இந்ததுன்பம் நம்குடிக்கு எத்தனைநாள்
தான்பொறுக்க?
சரணம் 2:
சொந்தவீடு இல்லையென்று சொன்னதில்லை
ஒருநாளும்!
முந்தைவினை மூண்டதென அழுததில்லை
சிறுபோதும்!
எந்தன்குறை தீர்க்குங்கடன் இறையுனக்கே
தானல்லவோ?
நந்தன்மகன் கண்ணனே! வேறெங்கு
நான்சொல்லவோ?
(ஸுதாமர் உள்ளே வருகிறார்! அவர் வந்தவுடன் குழந்தைகளெல்லாம் ஆளுக்கு ஒரு மூலைக்குச் சென்று அடங்கிவிடுகின்றனர்.- சென்று கை, கால்களைக் கழுவிக்கொண்டு, வந்ததும், அவருக்கு அருந்த நீர் கொடுத்துவிட்டு, அவரிடமிருந்து பிக்ஷை மூட்டையை
வாங்கிக்கொள்ளுகிறாள்)
ராகம்: ஸ்ரீரஞ்சனி - தாளம்: ஆதி
பல்லவி:
அமருங்கள் ஐயனே! ஆயாசம் தீரவே!
உமதுடல் நோகுமே! ஓய்வெடுத்
திடுமே!
அனுபல்லவி:
நாளெலாம் வீதிதோறும் நடந்துசுற்றி நலிந்து
தோள்சுமந்த பிட்சையாலே துரிதமாய முதுசெய்வேன்
(அவர் கொடுத்த மூட்டையை ஆர்வத்துடன் பிரித்துப் பார்க்கும் மனைவிக்கு, ஏமாற்றம்... மொத்தமே சில பிடி அவல்கள்தான்... தவிர வாடிய சில காய்கறிகள்..)
ராகம்: கானடா தாளம்: ஆதி
பல்லவி:
ஐயே! ஈதென்ன அடிவரைக்கும்
பார்த்தாலும்
பையில்! உழக்களவே பச்சரிசி யேகாணும்!
சரணம்1:
பிட்சைய ரிசிரெண்டு பேர்களுக்கும்
காணுமோ?
அட்சயப் பாத்திரமும் அதைக்கண்டு
நாணுமோ?
சிட்சைகற் றசீடருக்கு சித்தத்திலே
தோன்றாதோ>
தட்சிணை தராமலேயே தட்டிக்கொண்டு
போவாரோ?
(ஐயே)
சரணம்2:
எத்தனை நாட்களுக்கு ஏழ்மையிலே
வாழுவதோ?
இத்தனை குழந்தைகளும் இளைத்தேதான்
வாடுவதோ?
வித்தையில் வல்லராயினும் வெறுங்கை
முழம்போடுமோ?
நித்தமும் குடும்பமிதில் நிருவாகம்
தான்கூடுமோ?
(ஐயே)
Scene 5:
குசேலர் மனைவிக்கு ஹிதோபதேசம்
செய்வது-மனைவி
அதற்கு
மறுத்து
- அருளில்லார்க்கு அவ்வுலகில்லை; பொருளில்லார்க்கு
இவ்வுலகில்லை
என்று
கூறி,
பால்ய
சிநேகிதரைப்
பார்த்து
வரும்படி
கூறுதல்.
குசேலர்
கைப்பொருள்
கொண்டு
செல்ல
விழைதல்..
மனைவி
சென்று
நால்வரிடம்
அவலைப்பெற்று,
புடைத்து,
குப்பை
நீக்கி,
மூன்று
கைப்பிடி
அளவுக்கு
ஒரு
கந்தையில்
முடிந்து
தருதல்...
ஸுதாமர்: ராகம்: தோடி தாளம்: ஆதி
மரம்நட்டவன் செடிக்கு வரம்தரவும்
அறியானோ?
கரம்தந்தவன் நமக்கு கனிந்திடவும்
தெரியானோ?
உரத்தையவன் சோதித்து உள்ளபடி
அருள்வானே!
சிரத்தையுடன் சேவித்தால் சிந்தையில்
கருதுவானே (மரம்நட்டவன்)
இப்பிறப்பில் ஏழ்மையென்று ஏன்நீயும்
புலம்புகிறாய்!
எப்பிறப்பின் வினையாலோ இப்பிறப்பு
உலைவினிலே!
முப்பிறவி கன்மவினை மூண்டெழுவ
தறிந்தோமோ?
அப்பனந்த கண்ணனவன் அணுக்கமதை
அடைந்திருந்தும்
(இப்பிறப்பில்)
க்ஷுத்க்ஷாமை: ராகம்: வராளி தாளம்: ஆதி
நான்சொல்ல வந்ததையே நன்றாக
நீர்சொன்னீர்
ஏனின்னும் இப்படிநாம் ஏழ்மையிலே
வாழவேண்டும்?
கோன்கண்ணன் உங்களது குருகுலத்து
நண்பனன்றோ?
வானுலகும் வாழ்துகின்ற வள்ளலுங்கள்
கண்ணனன்றோ?
(நான்)
விருத்தமாக:
அருளில்லார்க் கவ்வுலகும் பொருளில்லார்க்
கிவ்வுலகும்
ஒருநாளும் இல்லையெனும் உபதேசம்
கேட்டிருப்பீர்
கருதீரோ அவ்வுண்மை? கண்ணனிடம்
செல்வீரோ?
கருதாமல் இதம்பேசி கடும்வறுமை
உழல்வீரோ?
(மீண்டும் பாடலாக)
சென்றொரு முறையேனும் ஸ்ரீதரனைக்
கண்டுவந்தால்
வென்றிடும் வாழ்விதுவே வீணாகக்
கழியாதே!
இன்னுமென்ன தயக்கமோ? ஏனிந்த
சுணக்கமோ?
உன்னியவன் நாமத்தினை உடனின்றே
வணங்கியே
(சென்)
ஸுதாமர்: ராகம்: மனோரஞ்சனி - தாளம்: ஆதி
என்னருமை பத்தினியே எத்தனைதான்
சொன்னாலும்
உன்கருத்தில் ஏறவில்லை உயர்பொருளும்
எட்டவில்லை!
என்னருமை கண்ணனிடம் இரந்துநான்
யாசிப்பதோ?
சின்னவனைப் போலங்கென் சிறுகுறைகள்
வாசிப்பதோ?
(க்ஷூத்க்ஷாமா, விடாப்பிடியாகக்
கூறவும், சிறிதே சிந்தித்து, பிறகு அவளைச் அமைதி செய்து)
சரிசென்று காண்கின்றேன்! சகலமவன் செயலன்றே!
அரிமாத வன்என்ணம் அதுவாக இருக்கிறதே!
துரியனந்த கண்ணன்வாழ் துவாரகைக்கு செல்ல,சற்றே,
பொரியவலை தந்திடுவாய் புண்ணியமா
கும்நமக்கு!
(க்ஷுத்க்ஷாமை, நான்கு வீடுகளுக்குச் சென்று, நான்குபிடி அவலைக் கொண்டுவருகிறாள். முறத்தால் புடைத்து, கல்லையும், உமியையும் நீக்கி, மூன்று பிடி அவல்களாகக் எடுத்து, அவற்றை ஒரு துணிமூட்டையாகக் கட்டித் தருகின்றாள்.. வாங்கிக்கொண்ட ஸுதாமன் அதை ஏமாற்றத்தோடு பார்த்து, இருந்தாலும் இடுப்பில் முடிந்து கொண்டு கிளம்புகிறார்)
Scene 6:
குசேலரின் கடும், நெடிய பயணம் - துவாரகை வந்தடைதல்- பெரிய மாளிகைகளையெல்லாம் கண்டு ஆச்சரியப்படுதல், செல்லும் வழி அறியாது திகைத்தல் - குறுக்கே நெடுக்கே செல்லும் குதிரைகள், பாதசாரிகள், வண்டிகள், தேர்களால் நிலை தடுமாறி வீழ்ந்து எழுதல், தன்மீது உள்ள புழுதியெல்லாம் துடைத்துக்கொள்ளல்- அவ்வப்போது அவல் மூட்டை இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளல்- கண்ணன் மாளிகையின் முன்னால் வந்து நிற்றல்.
துவாரகைப் பயணம்: ராகம்: ஸிந்துபைரவி - தாளம்-ஆதி
பல்லவி:
நடந்தானே ஸுதாமன் நண்பனைக்
காண
(நடந்தானே)
அனுபல்லவி:
கடந்தானே காதங்கள்! கானகங்கள்
வழியே!
விடைக்கின்ற குளிரிலும் வேகின்ற
வெயிலிலும்
(நடந்தானே)
சரணம்:
நலிந்ததம் தேகத்தால் நடைதளர்ந்
தாலும்தன்
நாவினிலே நாராணந் நாமமே
துணையாக
துவாரகை வழிபார்த்து துயிலவும்
மறந்தவன்
அவாவுடன் நண்பனை, அரவிந்தனைக்
காண
(நடந்தானே)
துவாரகை அடைந்து வீதிகளில் பிரமிப்புடன் நடத்தல்.. மூன்று படை வீதிகளையும் கடந்து, கண்ணனுக்கு அந்தரங்க பக்தர்களாம் அந்தகர்கள், விருஷ்ணி குலத்தவர் வீடுகளையும் கடந்து, பெரிய மாளிகைகள் உள்ள வீதிகளுக்கு வந்தார் ஸுதாமர். வீதிகளில் போவோரும் வருவோரும், ஓடும் தேர்களும், சாடும் புரவிகளும், விண்ணுயர் மாடங்களும், அவற்றில் வீற்றிருக்கும் மங்கையரும், மற்றவருமென்று, ஸுதாமர் ஒரே வியப்பும், வியர்ப்புமாக, தடுமாறி, சில நேரங்களில் கீழே விழுந்து, பயந்து எழுந்து துவாரகை வீதிகளில் நடக்கிறார்)
துவாரகை கண்டு வியத்தல்: ராகம்: அடாணா தாளம்-ஆதி
பல்லவி:
இதுவோ துவாரகை என்விழிகட்கு
உவகை?
எங்கெங்கு நோக்கினும் வெற்றிப்
பதாகை!
அனுபல்லவி:
முப்படை வீதிகளும் முக்கியர்
வீடுகளும்
ஒப்பிலா அந்தகரும் உயர்விருஷ்
ணிகளும்வாழும்
சரணம் 1:
உயர்ந்த மாளிகைகள்; உப்பரிகை
மங்கையர்
வியக்கும் வீதிகளில் வேடிக்கை
விநோதங்கள்
விரையும் தேர்களும் வேகமாய்
குதிரைகளும்!
வியர்க்கும் என்னுடலம்! விழுமே
என்கால்களும்!
சரணம் 2:
எத்தனை மாளிகைகள்? இந்தமா
நகரிலே
இத்தனை யிலெதிலே என்கண்ணன்
இருப்பானோ?
அத்தனுக் குப்பதினா றாயிரம்
மனையாமே
சித்தங் கவர்ந்தஸ்ரீ ருக்மணியார்
வீடெதுவோ?
ஒருவழியாக கண்ணனின் பதினாறாயிரம் மனைவியர் பளிங்கு மாளிகைகளிலும், பளிச்சிடும் பெருமாளிகையான ஸ்ரீருக்மணி தேவியின் மாளிகையின் வாசலுக்கு வந்து சேருகிறார். மாளிகை வாயிலில் துவார பாலகரிடம் கண்ணனின் பள்ளித்தோழன் என்பதையும், கண்ணனிடம் தாம் வந்திருப்பதை கூறச்சொல்லல்.. சில பார்வையாளார்கள் இவருடைய உருவையும், உடையையும் கண்டு, இவர் கிருஷ்ணருடைய பாலத்தோழன் என்றலை கேலி செய்தல்.. துவார பாலகர்கள், அவர்களைக் கண்டித்து, பகவான் கிருஷ்ண பக்தஜன வத்ஸலன், அவனுக்கு பேதங்கள் கிடையாது என்று கூறி, உள்ளே சென்று கிருஷ்ணனுக்கு சுதாமாவின் வரவைக் கூறல்
துவாரபாலகரை வேண்டுதல்: இராகம்: பாகேஸ்ரீ தாளம்: ஆதி
பல்லவி:
துவார பாலகரே! தோத்திரம்
உமக்கே!
துவாரகே சன்தோழன் வந்தேனென்று
கூறுமே!
அனுபல்லவி:
தொலைதூரம் வந்திருக்கேன் துவண்டுடல்
நொந்திருக்கேன்
அலைகுழலான் கண்ணபிரான் அன்பையே
வேண்டியிங்கே!
சரணம்: (துவாரபாலகர்)
அந்தண உத்தமரே ஐயன்
அந்தபுரத்திலே
அந்தரங்க வேளையிலே அனுமதி
என்றுமில்லே
என்றாலும் ஐயனுக்கு இப்போதே
அறிவிப்போம்
குன்றாது பொறுப்பீரே! கோமகன்சொல்
தெரிவிப்போம்!
கூடியிருக்கும் மக்களெல்லாம்: ராகம்: பேகடா
பல்லவி:
கந்தையாடை மேனியரா கண்ணனார்க்கு
தோழரவார்?
விந்தையிலும் விந்தையிது! வேடிக்கைக்
காணவாரீர்!
அனுபல்லவி:
நொந்தவுடல் பஞ்சைவிழி உந்தியதோ
ஒட்டியதாம்
சொந்தங்கொண் டாடிவரும் சோடனயை
கேட்கவாரீர்..
சரணம்:
பாருமிந்த வேடிக்கையை பஞ்சைப்
பரதேசியினை!
யாருயிவர்? தோழரென்று யாதவரைக்
கூறுகிறார்!
சேருமிடம் பாராமால் சேர்பவோரோ
நம்மராசர்?
மேருவுக்கோ வற்றலான குன்றிவரை ஈடுசொல்ல?
Scene 7:
இதற்குள் அரண்மனைக்குள் சென்று ஸ்ரீருக்மணிதேவியுடன் கட்டிலில் வீற்றிருக்கும் கண்ணனிடம் சேதி தெரிவிக்கப்பட, கிருஷ்ணர் சுதாமா என்ற பேரைக்கேட்டவுடன். தன் ஆசனத்திலிருந்து துள்ளி எழுந்து வாசல் கதவுக்கு விரைதல்... சுதாமாவைப் பார்த்து ஆலிங்கனம் செய்தல், சுதாமர் அன்பால் நெகிழ்ந்து ஆனந்த கண்ணீருடன்..உள்ளே அழைத்துச் சென்று, அவரைத் ருக்மணி அமர்ந்திருந்த கட்டிலில் உட்காரச்செய்து, பாதங்களைக் கழுவி, பாதத்தண்ணீரை சிரசில் தரித்தல். சந்தனம், அகில்,, குங்கும திரவியங்களைப் பூசுதல்.. பிராமணோத்தமரான குசேலரை தூப தீபங்களால் ஆராதித்து, தாம்பூலமும் கொடுத்து, சுபாகமனத்தைக் கூறுவது.. ருக்மணி வெண்சாமரம் வீசுதல். அந்தப்புரப் பெண்கள் ஆச்சரியம் அடைதல்..
ராகம்: கல்யாணவசந்தம் தாளம்: ஆதி
பல்லவி:
வரவேண்டும் வரவேண்டும் வாலரே
ஸுதாமா! (வாலன்- தூய
அறிவுள்ளவர்)
வரமேபோல் என்னெளிய வாசல்வந்தீர்
குணதாமா (தாமா-சூரியன்)
அனுபல்லவி:
இருக்கயிங்கே வாருமய்யா இதமாச
னத்தமர்ந்து
இருபாத சேவைதந்து எமக்குன்றன்
ஆசிதந்து
(வரவேண்டும்)
(இப்போது மணித் தேங்காய் கையில் கொடுத்து, பாதசேவை செய்து, நீரால் பாதங்களைக் கழுவி, பட்டாலே துடைத்து, மஞ்சள், குங்குமமிட்டு, பூக்களால் அருச்சனை செய்து, பூவைத் கண்களில் ஒற்றி தலையில் சூடி, கழுவிய நீரை சிரசில் தெளித்துக்கொண்டு, பின்பு சந்தனம் பூசி, அகிற் புகைக் காட்டி, தூப தீபங்களைக் காட்டி, சகல மரியாதைகளயும் செய்தல். ருக்மிணிதேவி வெண்சாமரம் வீசுதல்..
சரணம் 1:
அந்தணரில் உம்போலே ஆன்றவரை
அறிந்திலனே
எந்தநாளும் உம்முடைய இன்நினைவும்
அகன்றிலனே!
இத்தனைநாள் எங்கிருந்தீர் என்னினிய
தோழரேநீர்
வித்தகரே இன்றேனும் விரும்பியிங்கு
வந்தீரே!
சரணம் 2:
என்றுமுமக் கிவ்வுலக இன்பங்களில்
நாட்டமில்லை
சென்றுதனம் வேண்டியும்நீர் சேர்க்குமார்வம்
கண்டதில்லை
இன்குணத்தோ ரேயேற்ற இல்லாளை
மணந்தீரா?
இன்றுயென்னால் ஆவதென்ன
என்றெனக்குச்
சொல்வீரா?
அந்தப்புர பெண்டிர்கள் அவர்களுக்குள்ளாகப் வியந்து, பேசுவது..
ஆரபி: ஆதி
ஏழையிந்த அந்தணர்தான் என்னவறம்
செய்தாரோ?
ஊழிமுதல் வரேயிங்கே உவந்துமெத்த
மெச்சுறாரே!
தோழனென்று சொல்லுகிறார் சொந்தவண்ணன்
போலணைத்தார்
தோழிதேவி ருக்குமணி சொந்தமதும்
தான்மறந்தார்!
Scene 8:
கிருஷ்ணர் குருகுல வாசக் கதைகளை நினைவுகூறுதல். குருபத்தினி தனக்கு பிடித்த அவலை அவ்வப்போது தந்ததை நினைவு கூற, குசேலர் தன்னிடமிருந்த அவல் முடிப்பை தடவிப் பார்க்கையில்... தான் கிருஷணனுக்கு அவல் தராமல் தானே உண்டதை நினைத்து, இன்று வெட்குதல்... கிருஷ்ணர் விஷமத்தனமாக சிரித்துக்கொண்டே.. தனக்கு சுதாமா கொண்டுவந்தது என்ன என்று வினவிக்கொண்டே, அவர் தர வெட்கப்பட்டு தன்னுடைய கந்தையாடைக்குள் ஒளிக்க முயன்ற அவல் மூட்டையை கண்டு, அதை வலுக்கட்டாயமாக பறித்து, பிரித்து, சிரித்துக்கொண்டே ஒரு பிடி அவலை வாய்க்குள் போட்டு, மென்று சுவைக்கையில்... சுதாமவின் ஊரில் அவரிருந்த வீடு பெரிய மாளிகையாகவும், பொன்னும், பொருளும் குவிந்து மனைவியும் மக்களும் நல்ல ஆடைகளையும், நவவித உணவு வகைகளையும் உண்டு களிக்க... மீண்டும் இன்னொரு பிடி அவலை எடுக்க, அன்னை ருக்மணி தடுக்க... கொடுக்கவேண்டியதெல்லாம் கொடுத்த பின்னர். எங்கே மற்றொரு பிடி அவலால் தன்னையே சுதாமாவின் சேவகத்துக்குக் கொடுத்துவிடுவனோ என்று அஞ்சி...
க்ருஷ்ணர்: இராகம்: பெஹாக் - தாளம்: ஆதி:
பல்லவி:
குருகுல வாசம் கொள்ளையாம்
சந்தோஷம்
அருமை நினைவலைகள் அமைந்த
விசேஷம்
சரணம் 1:
கருமுகில் போலன்னக் கருணை
மழையாக
குருவின் பத்தினியார் கொடுப்பார்
அவல்தினமும்
ஒருமுறை இருவரும் குருவவர்
ஆணையில்!
தருவனம் சென்றதும் தளிர்போல்
நினைவினில்
(குருகுல)
சரணம் 2:
விறகொடு சமித்தும் விழைந்தநம்
குருராயர்
திறமுடை நம்மையே செல்லவும்
பணித்தாரே!
உறுபசி வேளையில் ஒருமர
நீழலிலே
சிறுபிடி அவலினை சேர்ந்துண்
டதைநினைக்கின்!
(குருகுல)
ஸுதாமருக்குச் சுருக்கென்று ஆகிறது. தன்னுடைய விக்கல் தாகத்துக்கு நீர் கொண்டுவர கண்ணன் சென்றபோது, தாம் கண்ணனை ஏமாற்றுவதாக எண்ணி ஒருபிடி அவலை அதிகமாக உண்டது நினைவுக்கு வருகிறது. கூடவே எல்லாம் அறிந்த பரமனுக்கு அது தெரிந்தும் பாராதவன் போலிருந்ததும் நினைவுக்கு வருகிறது. கண்களில் கண்ணீர் அரும்பி பெருகுகிறது
ஸுதாமர்: இராகம்: சல்லாபம்: தாளம்: ஆதி
சரணம் கண்ணா சரணம்
சரணம்!
பரமன் உனது கழலே
சதமும்!
கருணா நிதியே கமலக்
கண்ணா!
அருள்வாய் உனது அணுக்கம்
நிதமும்!
ஒருமுறை உனது ஒளிவிழிப்
பார்வை
பெருகிட மாநிலம் பெருந்தவம்
கிடக்கும்
அருகனோ இல்லையே அடியனுக்
குன்றன்
அருளினை அள்ளி, அள்ளித்
தந்தாயே!
கிருஷ்ணர்: இராகம்: ஸுநாதவிநோதினி தாளம்: ஆதி
பல்லவி:
ஒளித்ததை கண்டுகொண்டேன் உந்தன்
இடையினிலே
அனுபல்லவி:
களித்திடத் தாராமல் கச்சையில்
முடிந்துவைத்து
சரணம் 1:
எளியபொருள் ஆனாலும் எனக்குவந்த
அவலன்றோ?
துளியவலை நானுண்டால் துன்பமேதும்
உமக்குண்டோ?
அளிக்காமல் சென்றாலே அண்ணியார்க்கு
என்னசொல்வீர்
இளியாகிப் போகுமன்றோ? ஏமாற்றியெனை
நீர்செய்தால்!
சரணம் 2:
பத்தியில்லா மூடர்களின் பகட்டெனக்கு
இன்பமில்லை
இத்தரையில் சித்தமுடன் இலையினையோ
இன்கனியோ
ஒருமலரோ நன்னீரோ உண்மையான
பத்தியுடன்
தருவதுவே நான்விரும்பும் தரமான
உணவென்பேன்!
(கண்ணன் உரிமையோடு, ஸுதாமரின் கச்சையிலிருக்கும் அவல் பையை எடுத்துக்கொண்டு, முடிச்சை அவிழ்த்து, ஒரு பிடி அவலை எடுத்து ஆர்வமாய் உண்டு உவக்கிறார்.. அக்கணமே, ஸுதாமரின் ஊரில் அவர் இருந்த எளிய குடிசை, பெரிய மாளிகையாகிறது.. வீட்டிலே! குழந்தைகளுக்கெல்லாம் புதுப்புது ஆடைகள், உண்ண அறுசுவை உணவு வகைகள். ஸுதாமர் மனைவி ஸ்ரீதேவியிந் அவதாராம்போல், சர்வாலங்கார பூஷிதையாக இருக்கிறாள்... மறுபிடி அவலை கண்ணன் எடுக்க முடிச்சுப் பையைத் துழவும்போது, அன்னை ருக்மணி மாயவன் கண்ணணை மறித்து, கையைப் பிடிக்கிறாள்.. எங்கே அடுத்த பிடி அவலால் தானும் அந்த அந்தணருக்கு ஸ்வாதீனமாகி விடுவோமோ என்று அஞ்சி!)
இராகம்: தேஷ்; தாளம்: ஆதி
பல்லவி:
ஒருபிடித்தான் உண்டான் கண்ணன்
- அங்கே
பெருந்தனம் பெற்றான் ஸுதாமன்
- அவலை (ஒருபிடி)
அனுபல்லவி:
உயர்மா ளிகைகளும் ஒப்பிலா
வாழ்வும்
வியக்கச்செய் தானந்த வேதன்
ஒருநொடியில்/அவலை
(ஒருபிடி)
சரணம்:
வறுமை ஒழிந்ததே வளமெல்லாம்
சேர்ந்தே
அறுந்து துன்பமெலாம் அழல்பட்
டழிந்ததே
இறைமனம் கனிந்ததால் ஏற்றமாய்
ஆனதே!
குறையெலாம் தீர்ந்ததே! கொண்டாட்ட
மானதே!
(ஒருபிடி)
விருத்தம்:
மறுபிடி அவலுக்காய் மாயவன்
துழவினான்
மறித்தவன் மனையாள் மாயனைத்
தடுத்தனள்
மறுபடி யுமுண்டால் மாயவன்
எனையிழப்பான்
நெறியிலை என்றவள் நினைந்து
கைப்பிடித்தாள்!
Scene 9:
ஸுதாமா கிருஷ்ணன் ருக்மணியிடம் விடைபெற்று செல்லல்.. தன்னுடைய ஊருக்கும், தெருவுக்கும் வந்து தான் துவாரகையை இன்னும் விடவில்லையோ என்று ஐயம் கொள்ளுதல்.. மனைவியும், மக்களும் ஓடி வந்து, எதிர்கொண்டு, அழைத்துச் சென்று, அவருக்கு சகல மரியாதையும் செய்து.. ஏழைக் குடில், மிகப் பெரிய மாளிகையானதையும், பட்டு வஸ்திரங்களும், பலவித அணிகளும், அறுசுவை உணவும், பணியாட்களுமாக செல்வம் நிறைந்ததைக் கூறி, பகவான் கிருஷ்ணனின் பால்ய சிநேகித பாசத்தைப் பாராட்டுகின்றனர்..
இராகம்: பூபாளம் தாளம்: ஆதி
பல்லவி:
பொழுது புலர்ந்தது புதுவாழ்வு
பூத்தது
எழுமைக் குமாகவே ஏற்றமும்
சேர்ந்தது
அனுபல்லவி:
கந்தைய ணிந்துவந்தான் கந்தையணிந்தே
சென்றான்
எந்தையை கண்டபின்னும், எந்தசெல்வம்
வேண்டுமென்று!
சரணம்:
பிரியா விடைதந்தான் பிரேமத்
துடன்கண்ணன்
சிரித்தாற் போல்முகத்தில் சிந்தும்
விழியீரம்
பெரியோர் ஸுதாமருக்கோ பேரின்பப்
பூரிப்பாம்
கரிமேனிக் கண்ணனைதாம் கண்டதே
புளகிதமாம்.
இராகம்: குந்தலவராளி: தாளம்: கண்டசாபு
பல்லவி:
இதுயென்ன மாயமோ இதுவும்து
வாரகையோ
புதிதாக மாளிகைகள் போகம்சூழ்
பொழில்களுடன்
(இதுயென்ன)
சரணம்:
மயன்செய்த மாயங்களோ மாயவன்
உபாயங்களோ
வயக்காக மின்னுகின்ற வானுயர்ந்த
மாடங்களே!
நயந்தென்ன சொன்னாலும் நானிருக்க
வல்லனென்று
கயக்கண்ணன் செய்தானோ கண்ணைகட்டு
வித்தையிங்கு?
(இதுயென்ன)
க்ஷுத்க்ஷாமை: (குழந்தைகள், பணிப்பெண்கள், ஆட்கள் சூழ)
இராகம்: ஆபோகி: தாளம்: ஆதி
பல்லவி:
வரவேண்டும் ஐயனே வாழவைத்தான்
கண்ணனே!
அனுபல்லவி:
பரந்தாமன் அருள்செய்து பழுதனைத்தும்
துடைத்தான்
சரணம்:
சுரக்கும் காமதேனுபோல் சொர்ணமழைப்
பொழிந்தான்
இரக்கத் தேவையின்றி எல்லாமே
கொடுத்தான்
வரமொன் றுகேட்டதற்கு வாரியன்றோ
வழங்கிவிட்டான்
சிரந்தாழ்த்தி கரங்கூப்பி சீர்கோவிந்தனைத்
தொழுவோம்
(வர)
Scene 10:
சுதாமா, மனைவி மக்களுக்காக, விஷய சுகங்களில் ஈடுபட்டு, பகவான் அளித்த ஐஸ்வர்யங்களை அனுபவித்தாலும், இதயத்தில் பகவானின் பிரேமையையும், தான் சிறுவயதில் செய்த சிறுமையையும், அவன் அதன் காராணமாகவே தன்னை வறுமையிலிருந்த்தி, தன்னை உணர வைத்ததையும் எண்ணிப்பார்த்து, ஆனந்தக் கண்ணீர் விட்டு, கண்ணனிடம் கதறுகிறார்.. தான் ஒவ்வொரு பிறவியிலும் பகவானையே நினைக்க வேண்டுமென்கிறார். கண்ணன் அவர்முன் தோன்ற, அவரைப் பலவிதமாய் துதித்து முடவனுக் கிரங்கி முழுக்காட்ட வந்த கங்கைப்போல எண்ணி பூசிக்க, கண்ணன் அவரை ஆரத்தழுவி, அவரைப்போன்ற அறவழி அந்தணர்க்கொரு நாளும், தன் அணுக்கம் மாறாது என்று ஆற்றளித்து, அவரது செல்வங்களை பெண்டு பிள்ளைகளோடு அனுபவித்து, அவருடைய கடமைகளாற்றி பரமபதத்தை அடையுமாறு அருளினார்..
ஸுதாமன்: இராகம்: சுபபந்துவராளி: தாளம்: ஆதி
பல்லவி:
அபராதம் செய்தேனை ஆதரித்தே
க்ருஷ்ணா
சுபமே செய்தாயே க்ருஷ்ணா
- (எனக்கு) அன்று
அனுபல்லவி:
அபயம் தந்தே என்றன்
அகமே
நீ
நிறைந்தாலும்
சபலச் சுழலில் சிக்கி
சததம்
உழல்வேனோ?
சரணம்:
உபகாரம் வேண்டினேன் உடன்செய்து
எனைகாக்க
ஓடோடி வருவாய் கண்ணா
- பவச்சுழல்
அபகார மாயையாம் அனல்மேல்
மெழுகாகும்
அவத்தை களைவாய் கண்ணா
- அறியாமல்
கண்ணன்: இராகம்: மத்யமாவதி
அஷ்ட ஐஸ்வர்யமும் அடைந்தாலும்
அணுஅளவும்
அறவழியை அகலாத அந்தண
ஸுதாமரே!
கஷ்டங்கள் வந்தாலும் கணங்கூட
வழுவாத
சிஷ்டரே சீலரே செல்வீரே
வைகுந்தம்
(அப்படியே சுதாமர் க்ருஷ்ணரைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்.. ஒரு ஜோதி அவரிடமிருந்து கிளம்பி வைகுந்தம் சேர்கிறது
---------- சுபம்
------
தில்லானா:
ஹமீர் கல்யாணி தாளம்: ஆதி
பல்லவி:
நாத்ருத தீம், தீம், தீம்த தனதிரனா - நாத்ருத தீம், - தீம் தில்லான
நாத்ருத்ருதானி தீம் - த்ருத்ருதானி தீம், - த்ருதானி தீம்,
தானி தீம், தானி
அனுபல்லவி:
தோம்த நம்த ஜம்த நாத்ருதானி தீம் நாத்ருதானி தீம் நாத்ருத்ருதானி ( தோம்த)
தோம்த நம்த ஜம்ஜம்த நாத்ருதானி தீம் நாத்ருதானி தீம் நாத்ருதானி (தோம்த)
தோம்த நம்த தோம்த்ருத நம்த்ருத தோம், - தோம்த்ருத நம்த்ருத தோம்,
தோம்த்ருத நம்த்ருத
சரணம்:
கண்ணா கார்முகில் வண்ணா - கிரிதரா
பண்ணா லுனைப்பாடும் வண்ணம் - அருள்பரா
விண்ணும் மண்ணும் வியக்க மண்ணை வாயிலுண்டவா
அண்டமெல்லாம் அதிலே அன்னைக் காணதந்தவா!
தாம்த தீம்த தோம்த தகஜணு தீம்;- - மிருதங்க ஒலியுடன்
தாம்தத் தீம்தத் தோம்த தகஜணு தீம்; - தண்டைகள் ஜதியுடன்
த்ருகதோம் த்ருகதோம் த்ருகதோம் - திமி தகிட திமி
தளாங்குவென பதம் காளியன் சிரஸினில்
இனிநாம் உய்ந்தோம் எனவே விழிநிறைந்து உந்தன்
பாதரவிந்தமதை சரணம் அடைந்திடுவோம்
நீல மயிலிறகாட ஆட ப்ருந்தாவன கோபியர் தாளங்கள் போட
கோல அழகுடன் நீயும் ஆட அந்த கொள்ளை அழகினிலே அன்பரும் கூட
ஸ்,,நி தா,ப மா,ப- ஸ்நிதப
மா; ;- ஸ்நிதபம- ரிஸ்நிதப
ரிஸ்,நி தபாத மா,ப - ஸ்நிதப மா; ;- ஸமா-கபா-மதா -ப
ரிரி ஸ்ஸ் நிநி தத மம பப - ஸ்நிதப மா; ;- ஸமா-கபா-மதா -ப
ரிஸ்-ஸ்நி-நித-தப-ஸம-கப-மத-பஸ்
( தத்தரிகிடதக தாம்; - தகதரிகிடதக தாம்; ) ததீங்கிணதொம் - 4
½
( தரிகிடதக தாம்; - தரிகிடதக தாம்; ) - ததீங்கிணதொம் - 4
( கிடதக தாம்; - கிடதக தாம்;) - ததீங்கிணதொம் - 3 ½
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam