நமது அன்றாட
வாழ்வில் நாம் பார்க்கும் சாதாரணத் தொழிலாளிகளில், எத்தனைப் பேரின் அன்றாட அலுவல்களை
கூர்ந்து கவனிக்கிறோம்? அவர்களின் தொழில் செய்யும் நேர்த்தியை, வித்தகத்தை நாம் பாராட்டுகிறோம்?
ஒரு நடைபாதை
சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளியிலிருந்து, வண்டியில் வைத்து கூவி தெருவில் காய்கறி
விற்கும் வியாபாரி, மற்றும் அன்றாட சமூகத்தின் அங்கமாக இயங்கி, இயக்கும் சாதாரணர்களை
நாம் பொதுவாக, அவர்கள் வாழ்வியல் கோணத்திலிருந்து தெரிந்து கொள்வதில்லை.. அவர்கள் செய்யும்
தொழிலின் கோணத்திலிருந்தும், இரசிப்பதும் இல்லை, பாராட்டுவதும் இல்லை. தெரிந்துகொண்டாலும்,
சினிமாவில் மிகைப்படுத்தப்படும் பாத்திரப் படைப்புகளைப் பார்த்தே நாம் இவர்களை மனத்தில்
உருவகித்துக்கொள்ளுகிறோம்.
நம்ம தமிழ் நாட்டு பஸ் கண்டக்டர்களைப் போல் அபூர்வ
பிறவிகளை வேறு எங்கும் காண்பதரிது. தோள்பட்டையிலே மாட்டிய தொங்கும் தோல் பை, ஒரு விரலில்
(பொதுவாக ஆள்காட்டி இடுக்கில்) உள்ள சீட்டியடிப்பான் (பிகில்), ஆள்காட்டி, மோதிரவிரல்கள்,
நடுவிரலோடு இடுக்கிப் பிடியாய் மடக்கி இலாவகமாகப் பிடித்திருக்கும் ரூபாய் நோட்டுக்கள்,
மற்றும் அதே கையில் ஏந்திய பல நாணயப் பிரிவுகளில் உள்ள பயணச் சீட்டுகள், ஓடுகிற பேருந்தில்,
போடுகிற தீடீர் தடை மிதிச் (ப்ரேக்) செயல்களுக்கு எப்போதும் தயாராக இருக்கும் சற்றே
அகன்று பாவிய கால்கள், “டிகிட் டிகிட்” என்று ஒரு அலாதியான லயத்தில் கூவும் குரலென்று,
பல செயல்களை ஒரே நேரத்தில் நிர்வகிக்கும், செய்யும் பன்முகத் திறமை எத்தனைப் பேருக்கு
உண்டு?
சாதாரண கூட்டல்,
கழித்தல் கணக்குகளுக்கு, கைக் கணிணிகளை நம்பியிருக்கும் இத் தலைமுறையினரிடையே நொடியில்
துல்லியமாக, சில்லரைகளை எண்ணிக்கொடுக்கும் எத்தனைக் நடத்துனர்களை நாம் பார்க்கிறோம்!
பலதரப்பட்ட மனிதர்களை
ஏந்தி செல்லும் பேருந்தை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்களுக்கு எந்த வித ஒழுங்கும் இல்லாமல்,
குறுக்கே புகுந்து பாயும் இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்களையும், வண்டிகளையும்
சமாளித்து ஓட்டுவது ஒரு வேலையென்றால், நடத்துனர்களுக்கு, அதேபோல் பெரும்பாலும் எந்த
வித வரிசை ஒழுங்குமில்லாமல், வண்டியில் ஏறும், இறங்கும் பயணிகளோடு போராடுவதும், அவர்களுக்கு
முன்னும் பின்னும் நடந்து, விசாரித்து பயணச் சீட்டு வழங்குவதும் பெரும் வேலை. பயணச்சீட்டு
இல்லாமல் ஏமாற்றும் பேர்வழிகளையும், உடன் செல்பவர்களோடு மறைமுகமாக, வெளிப்படையாக குறும்பும்,
வன்கொடுமைகளும் செய்யும் அராஜக நபர்களை சமாளிப்பதும் இன்னொரு பெரும் வேலை.
சரியான சில்லரை
கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டாலும், பெரிய
நோட்டுகளைக் கொடுத்துவிட்டு, மீதியை உடனடியாக எதிர்பார்க்கும் பயணிகளுக்குப் பயணச்சீட்டின்
பின்பக்கம் எழுதிக்கொடுத்துவிட்டு, இறங்கு இடம் வருவதற்குள் அது கிடைக்கவேண்டுமே என்று
கவலையில் இருக்கும் பயணிகளைத் தேடிவந்து கொடுக்கும் எத்தனை நடத்துனர்களை நாம் பார்த்திருக்கிறோம்.
கொட்டும் மழையோ,
கொளுத்தும் வெயிலோ, மறுபடியும் மறுபடியும் ஒரே தடத்திலேயே மீண்டும் மீண்டும் பயணித்து,
பல தரப்பட்ட மனிதர்களோடு பழகி, சமாளிக்கும் பஸ் கண்டக்டர்களை (நடத்துனர்கள்) அடுத்த
முறை சந்திக்கும்போது, அவர்களின் இயக்கத்தை கொஞ்சம் அனுசரணையாக நோக்குங்களேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam