ஜனவரி 28, 2016

ஆலமும் அரசும்... - மடக்கு வெண்பா!

மடக்குக் கவிதைகள் எழுதுவது ஒரு சுவையான அனுபவம். இதோ வேடிக்கையாக ஒரு கவிதை..

ஆலமும் அரசும்!

ஆலம் அருந்தி அகிலம் புரந்தாரே
ஆலம் அடியமர் ஆதியவன் - நீலம்
அரசன் கழுத்தில் அடக்கினாள் சூலி!
அரசல் புரசலாய் பேச்சு!

பாற்கடல் கடைந்தபோது வெளிவந்த ஆலகால விடத்தை அருந்தியதால், தேவர்களையும், அசுரர்களையும் மட்டுமா, சிவன் காத்தார்? உலகையே அல்லவா? அவரே கல்லாலின் கீழமர்ந்து நால்வர்க்கு வாக்கிறந்த பூரணமாய் உபதேசித்த தட்சிணாமூர்த்தி, ஆதி நாயகனும் அல்லவா? அவ்விடத்தினால் நீலம் பாரித்தபோது, அதை அந்த அரசனின் கண்டத்திலே அடக்கி வைத்தாள் அன்னை சூலி! அதில் சுயநலம் இல்லை, பொது நலம்தான்! ஆனாலும் புரிந்து கொள்ளாத உலகமோ, சூலி சிவனின் கழுத்தைப் பிடித்தாள் என்று அரசல் புரசலாகப் (மேலோட்டமாக) பேசுகிறது.

ஜனவரி 14, 2016

பொங்கல் வாழ்த்துக்கள்

பாரத நாட்டின் பழமை
     பாரம் பரியச் செழுமை
ஏரதன் உழவோர் கெழுமை
     ஏற்றம் தருமவர் விழுமை
நாரம் மலையொடு காடு
    நனியாய் நிறைந்த நாடு
பாரில் உண்டோ ஈடு
    பரவ சத்தோடு பாடு!

அருவியில் பொங்கி மலர்ந்து
   ஆறாய் ஓடி விரிந்து
மருவியே கடலில் கலந்து
    மழையாய் வானம் பொழிந்து
தருநன் நீரால் விளைந்து
   தரணியில் செந்நெல் பரந்து
வருதே பொங்கல் விருந்து
   வாங்க உண்போம் விரைந்து!.

பொங்கல் நன்னாள் இன்பம்
    பொங்கும் இன்னாள் எங்கும்
மங்கும் மாசுபொ சுங்கும்
    மகிழ்வே கூடித் தங்கும்
தங்கம் போலா தவனும்
     தகதக வென்றெ மின்னும்
கங்குல் போலாம் கருமை

     கரைய ஓங்குமே ஒருமை

தமிழிசை வளர்த்த செம்மல்கள் – 2

திராவிட செவ்விசை முன்னோடி - சீர்காழி முத்துத்தாண்டவர்

[சென்னையில் வெளிவரும் இலக்கிய வேல், மாத இதழின் Novermber - 2015 பதிப்புக்காக திராவிட செவ்விசை முன்னோடியாம் சீர்காழி முத்துத்தாண்டவரைப் பற்றி எழுதிய கட்டுரை]

அடிநாதம்:
கருநாடக இசையென்று பரவலாக அறியப்படும் திராவிட செவ்விசையின் மரபு சங்ககாலத்திற்கும் முற்பட்டது என்று ஏற்கனவே பலரும் பலமுறை நிறுவியாயிற்று. சிலப்பதிகாரம், பரிபாடல், தொகை நூல்கள் என்று, சங்க இலக்கியங்களில்  நெடுக விரவிக் கிடக்கும் சான்றுகளாலும், அடியார்க்கு நல்லார் போன்ற உரையாசிரியர்களின் மேற்கோள் செய்யுள்களாலும், ஓலைச் சுவடிகளில் மீட்டெடுக்கப்பட்ட ஒரு சில அரிய புத்தகங்களாலும், நம் முன்னோரது இசையின் பழமைக் கூறுகளையும், மரபுகளையும் நம்மால் ஓரளவுக்கு ஊகிக்க முடிகிறது! பெருமை கொள்ள முடிகிறது. ஆயினும் இப்படித்தான் இருந்தது, பாடியிருப்பார்கள் என்று உறுதியிட்டுச் சொல்லக்கூடிய தொடர்ச்சி அற்றுப்போனதும் உண்மை,
இன்றும் சைவாலயங்களில் ஓதுவார்கள் இசைக்கும் திருமுறைகள், வைணவ ஆலயங்களில்  பாடப்படும் பாசுரங்கள், அரையர் சேவை போன்ற  இசையோடு கூடிய வழிபாடுகளில், எந்த அளவுக்கு செவ்விசை மரபின் தொன்மையைக் காப்பாற்றி நமக்கு அத்தொடர்ச்சியைத் தந்துள்ளன என்பதும் அந்த இறைவனுக்கே வெளிச்சம்.
தனித்தமிழிசை இயக்கம், பண் ஆராய்ச்சி, தமிழ் உருப்படிகளையே பாடுதல் என்று பயணித்தாலும், இவர்கள் பாடுவதும் பெரும்பாலும் பிற்கால பாடலாசிரியர்களாம் கோபால கிருஷ்ண பாரதியார், நீலகண்ட சிவன், பாபநாசம் சிவன் போன்றோரின் பாடல்கள்தாம். தேவார, திருவாசக, பிரபந்த பாசுரங்களோ, அன்றி சங்க இலக்கியப் பாடல்களோ, அல்லது பிற்கால இலக்கியப் பாடல்களையோ அல்ல! சிலப்பாதிகாரத்தின் இசை குறிப்புகள்கூட இசை இலக்கணங்களையும், மரபுகளையும் சுட்டுகின்றனவே தவிர எடுத்துக்காட்டுப் பாடல்களாக கூறியவொன்றும் இல்லை.
இப்போது நாம் செவ்விசையாகக் கேட்பதெல்லாம், ஏறக்குறைய 15-ம் நூற்றாண்டுக்குப் பிறகு முளைவிட்டு, பயிராக செழித்திருக்கிற இசை வடிவங்கள்தாம். இவற்றிலும், காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரைக்குமான பலவித இசை வகைகளின் கொடுக்கல் வாங்கல்களோடு!
எது எவ்வாறாயினும், இன்று செவ்வியல் மேடைகளில் பாடப்படும் பாடல்களின் கீர்த்தனை என்னும் இசைவடிவத்துக்கு பிள்ளையார் சுழிபோட்ட முதல் இசைப்பாடலாசிரியர் (சாகித்யகர்த்தா) சீர்காழி மூவர் என்று அழைக்கப்படும் தமிழ் மூவரின் முதலாமவரான முத்துத்தாண்டவர்.

கிருதியும், கீர்த்தியும்:
பொதுவாக கீர்த்தனை, கிருதி என்று சொல்லப்படும் இசைவடிவங்கள் இரண்டுமே வழக்கத்தில் இருப்பினும்,  கட்டமைப்பில் இரண்டுமே சற்று வேறுப்பட்டவை மூலச்சொல்லை எடுத்துக்கொண்டால் கிருதி என்பது கீர்த்தி என்ற சொல்லின் திரிபாகத்தான் இருக்கமுடியும். இறைப்பொருளின் கீர்த்தியைப் பாடும் இசைவடிவமே கிருதி எனப்படுவது. அதேபோல் கீர்த்தனை என்ற சொல்லும் கீர்த்தி மற்றும் ஆராதனை என்ற இரண்டு சொற்களின் கூட்டாகவே கொள்ளலாம்.  இவை இரண்டுமே, பல்லவி, அனுபல்லவி, சரணம் (எடுப்பு, தொடுப்பு, முடிப்பு) என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டவைதாம் இவ்விரண்டுக்குமான வேற்றுமைகளை பின்னொரு கட்டுரையில் விரிவாகப் பார்ப்போமே!
செய்யுள் வடிவப் பாடல்களே இசைப்பாடல்களாக இருந்து வந்த நிலையில், முத்துத்தாண்டவர்தான் (ஏறக்குறைய கருநாடக இசையின் கொள்ளுப்பாட்டன் எனப்படும் புரந்தரதாசரின் சமகாலத்தவர் அல்லது சற்றே பிந்திய காலத்தவர்) புதிய இசைவடிவத்தைப் பழக்கத்துக்கு கொணர்ந்தார் என்றே உறுதியாகச் சொல்லலாம். இவர் அமைத்துத் தந்த பாதையில் பயணித்தவர்கள்தான், பின்பு வந்த இசைப்பாடலாசிரியர்கள் எல்லோருமே! இவருக்கு முன்னோடியாக யாராவது இருந்திருக்கக் கூடுமா என்று, சமகால இசையாசிரியர்கள் வரலாறுகளையும், படைப்புகளையும் நோக்கும்போது, தெளிவாகத் தெரியவில்லை.! கன்னட தேசத்தைச் சார்ந்த புரந்தர தாசர், கனகதாசர் போன்றோர் ஏறக்குறைய சமகாலத்தவர்களானாலும், அவர்கள் கீர்த்தனை கட்டமைப்பை கடைபிடிக்கவில்லை.  அதேபோல்தான் முன்னவரான ஆந்திரத்து அன்னாமாச்சாரியாரும். பத்ராசல இராமதாசர் இவருக்கும் பின்னால் வந்த திருவையாற்று மூவருக்கும் இடைபட்டவர். இவரும் கீர்த்தனை அமைப்பையொட்டி உருப்படிகள் செய்திருப்பதால், முத்துதாண்டவர் காலத்திலேயோ, அல்லது அவரது காலத்துக்குப் பிறகோ இவ்வமைப்பு ஒப்புக்கொள்ளப்பட பொது இசை வடிவமாகிவிட்டிருந்தது என்று அறியலாம்.
முத்துத்தாண்டவர் வாழ்க்கை சரித்திரம் சுருக்கமாக:
முத்துத்தாண்டவரது வாழ்க்கைச் சரித்திரத்தைப் பற்றி பல இணையதள கட்டுரைகள் உள்ளன. இசைப்பேரறிஞர், முனைவர் திருப்பாம்புரம் சோ. சண்முகசுந்தரம் முத்துத்தாண்டவரின் கூடவே இருந்து பாடல்களைத் தொகுத்ததாகக் கூறப்படும் சிதம்பரம் அமிர்தகவி குப்பையா பிள்ளை பரம்பரையில் வந்தவர். இவர் 2000ம் வருடம் பதிப்பித்த சீர்காழி மூவர் கீர்த்தனைகள் (இரண்டு பாகங்களில்) புத்தகத்தின் முதல் பாகத்தில், முத்துத்தாண்டவரின் வாழ்க்கை சரிதம் விரிவாகச் சொல்லப்படுகிறது, இதுவும் கூட செவிவழிச் செய்திவழியாகப் புனையப்பட்ட வரலாறே தவிர உறுதி செய்யப்பட்ட ஒன்றல்ல. தவிரவும் இப்போது பதிப்பில் இல்லாத யாழ்பாணத்து நீர்வேலி பண்டித நடராஜ பிள்ளையவர்களால் 1960களில் பதிப்பிக்கப்பட்ட முத்துத்தாண்டவர் என்கிற புத்தகமும் (இணையத்தில் PDF புத்தகமாகக் கிடைக்கிறது), அதில் அவர் கேள்விபட்ட அளவில் தாண்டவரது  சரித்திரத்தையும், சில பாடல்கள் உருவான வரலாற்றையும் விவரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுருக்கமாக இங்கே:  இவர் சோழநாட்டில் சம்பந்தமூர்த்தி நாயனார் அவதரித்த சீர்காழி என்னும் சிவத்தலத்திலே பாணர் குலத்தில் 1500களில் பிறந்திருக்கவேண்டும் என்று ஊகிக்கப்படுகிறது. இவருடைய பெற்றோர்கள் இவருக்கு இட்ட பெயர் தாண்டவன் என்பதாம். எப்படி இவர் முத்துத்தாண்டவர் ஆனார்? சிறு வயதிலேயே சூலை நோயால் பீடிக்கப்பட்டிருந்த இவர், இவர் குலத்தொழிலில் ஈடுபடாமல் சிவபக்தியிலேயே நாட்டமுடையவராக இருந்துவந்தார். 
சீர்காழித்தலம் திருத்தோணிபுரம் என்ற பெயரால் அறியப்பட்டுவந்தது. அங்கு ஆலயத்து இறைவரும் இறைவியும், திருத்தோணியப்பர் மற்றும் திருநிலை நாயகியாவர். இவ்வாலயத்துக்கு தினமும் சென்று திருமுறைகளைப் பாடுவதிலும், சில நேரங்களில் வெகு நேரம் தங்கிவிடுவதுமாக இருந்தார் நமது தாண்டவர்.  ஒரு சமயம், இரவில் தவறுதலாக கோவிலில் வைத்து பூட்டப்பட, வெளியே போக வழியறியாது, வருந்தி இறைவியின் சந்நிதியில் உருகிப் பாடிக்கொண்டே இருந்தாராம்; அப்போது அம்பிகையே கோவில் அர்ச்சகரின் சிறுபெண் வடிவில் வந்து அன்னம் அளித்து அவருடைய பசியை ஆற்றி, அவருடைய நோய் நீங்க தில்லைச் சென்று சபாநாதரைப் பாடி, நோயை நீக்கிக்கொள்ளும்படி  பணித்து மறைந்தாளாம். மறுநாள் அவண் வந்து அவரைக்கண்ட அர்ச்சகரும் கோவில் அதிகாரிகளும் ஏதோ தெய்வச் செயல் நடந்திருப்பதையும், அவருடைய முகம் முத்து போன்று ஒளிர்ந்ததையும் கண்டு, அவரை முத்துத்தாண்டவர் என்றே அழைக்கத் தொடங்கினார்காளாம்; அம்மையின் உத்தரவுபடியே, தில்லைநாதனைப் பாட தில்லைக்குச் சென்று அடியார் ஒருவர் வாக்கிலுதித்த பூலோக கயிலாச கிரி என்ற சொற்றொடரை வைத்தே முதல் கீர்த்தனையை அவர் பாடி நோய் நீங்கப்பெற்றதாகவும்,இவருடைய சரித்திரத்தை எழுத முனைந்தவர்கள் எழுதியுள்ளனர்.  இது சுந்தரமூர்த்தி நாயனாரின் ஒரு வரி, சேக்கிழாரின் ஒரு சில பாடல்களாகி, கோபாலகிருட்டின பாரதியாரின் முழுநீள இசை நாடகமான நந்தனார் சரித்திரம் போன்று, கற்பனை விரிந்துகொண்டேபோன கதைதான்.
உறுதி செய்ய அகச்சான்றுகளோ, வேறு புறச்சான்றுகளோ, அவருடைய பாடல்களிலும், வேறு எங்கும் கிடைக்கவில்லை.  அவருடைய வாழ்க்கை வரலாறு எப்படியோ இருந்துவிட்டு போகட்டும். அவருடைய ஆழ்ந்த இறை பக்தியும், அவை அனுபூதியாக பாடல்களில் வந்த வடிவமும், இசையுலகிற்கு அவர் விட்டுச் சென்ற புதிய இசைப்பாடல் கட்டமைப்பும், நின்று நிலைத்து, செவ்வியல் இசையின் வடிவமைத்தவர் என்று சரித்திரத்தில் அவர் பெயரைப் பொறித்துவிட்டன. அவர் பக்தியில் திளைத்த உயர்ந்த இசைப்பாடலாசிரியராயிருந்தார் என்பதில் யாருக்கும் சற்றும் ஐயமே இருக்கமுடியாது.
இக்கட்டுரையின் முக்கிய நோக்கமும் முத்துத்தாண்டவரின் இசை முத்துக்களை, வடிவமைப்பை, வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதுதான்!
பாடல்களின் அமைப்பும், சிறப்பும்:
12ம் நூற்றாண்டுகளின் இறுதியில் தெலுங்கு சோழர்களின் ஆட்சிகாலம் முடிந்து, விஜயநகர ஆட்சியாளார்களின் சார்பில் ஆளவந்த கன்னட-தெலுங்கு நாயக்க மன்னர்கள் தஞ்சையையும், மதுரையையும் ஆளத்தொடங்கி, பின்பு அது மராட்டிய வழித்தோன்றல்களின் ஆட்சிகளாகத் தொடர்ந்த இடைப்பட்ட மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகளில், தூயதமிழ் பாடல்கள் என்பது அருகி வடமொழி விரவிக் கலந்த கவிதைகளே பரவலாயின. இவற்றின் தாக்கத்தை தாயுமானவ சுவாமிகள், அருணகிரி நாதர் போன்றோரின் பாடல்களில் இன்றும் காணலாம். தனித்தமிழ் மரபுக்கவிதைகளைக் கட்டிக்-காப்பவர்கள் இருந்தாலும், இசைவடிவங்களில் மணிப்ரவாள நடையே மேலோங்கியிருந்தது என்பது வெளிச்சம்.
இந்த தாக்கமானது, முதல் இசைப்பாடலாசிரியரான முத்துத்தாண்டவரையும் விட்டுவைக்கவில்லை. ஒருவேளை அந்நாளைய தமிழ் நாட்டின் பேச்சு வழக்கும் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும்.
பூலோக கயிலாச கிரி எனத்தொடங்கும் அவருடைய முதற்பாடல், அவர் தில்லைத்தலத்தின் அழகைக் கண்டு வியந்து பாடியதாக அமைந்தது. இன்று பரவலாக அறியப்படும் கீர்த்தனை வடிவை அமைத்துக் கொடுத்தது. இவரது பாடல்கள் பொதுவாக, கவித்துவம் நிரம்பிய பக்தி வெளிப்பாடுகளேயன்றி, மரபுக்கவிதை என்ற கட்டமைப்புக்குள் வராதவை. ஆனால் அவற்றிலும் எதுகை, மோனை, இயைபு, முரண்தொடை போன்ற அழகுகளெல்லாம் நிரம்பியிருக்கும். எடுத்துக்காட்டாக, பூலோக, புவனத்தில், போன்ற முதற் சொற்களும், சாலோக, சாமீப, சாரூப, சாயுச்சிய, சபைவாணர் போன்றவையும் மோனை அழகைக் கொண்டவைதாம். அதேபோல் நாலு, மேலு, காலு, ஆலி என்று எதுகைகளுக்கும் பஞ்சமில்லை. இப்பாடல்களினால், வடமொழிச் சொற்களை கையாளுவதை இவர் வலிந்து விலக்காததையும் நாம் அறிந்துகொள்ளலாம். ஏறக்குறைய சமகாலத்-தவரான தாயுமானவரின் பாடல்களிலும் இத்தகைய வடமொழிச் சொல்லடுக்குகள் உண்டு
தாண்டவரின் நாட்டியப் பதங்கள்:
இவருடைய பாடல்களில் நாட்டியம் நிருத்யம் என்ற இரண்டும் சேர்ந்து ஆடுவதற்கு ஏற்ப பரதநாட்டியச் சொற்கட்டுக்களை பாடலோடு இணைந்தே செய்திருக்கிறார். இந்த வழிமுறைகளை இவருக்கு அடுத்த நூற்றாண்டில் வந்த ஊத்துக்காடு வேங்கட கவி, பின்பு வந்த கோபாலகிருட்டின பாரதி, நீலகண்ட சிவன், பாபநாசம் சிவன் வரை எல்லோரும் கடை பிடித்திருக்கிறார்கள்.
மலயமாருத இராகத்தில் அமைந்த கண்டபின் கண்குளிர்ந்தேன் என்ற பாடலிலும், சாருகேசியில்
அமைந்த ஆடிய வேடிக்கைப் பாரீர் என்ற பாடலிலும், சிவனுடைய நடனத்தின் எழிலை பரதத்தின் சொற்கட்டுக்களாலேயே பாடியிருப்பார், அவை இயல்பாக பாடல்வரிகளோடேயே பின்னிப் பிணைந்திருக்கும். இயல்பாகவே வந்த பாணர் பரம்பரையின் இசை மற்று நாட்டிய அறிவு இவரது பாடல்களில் விவரமாக, அழகாக, இயல்பாக ஒளிர்வதைக் காணலாம்.
எடுத்துக்காட்டாக மலயமாருதத்தில் அமைந்த, கண்டபின் கண்குளிர்ந்தேன் என்ற பாடலின் சரணத்தில், திந்தோம் திரிகிட தோதிமி எனவே சிந்தித்து நின்றாடு உம்பர்கள் கோனை வரும் வரிகளைக் கூறலாம். இதே போன்று பல பாடல்களிலும் உண்டு.
பின்னாளில் நீலகண்ட சிவன் தன்னுடைய பூர்விகல்யாணி இராகத்தில் அமைந்த ஆனந்த நடமாடுவார் தில்லை என்ற பாடலின் சரணத்தில், தஜ்ஜம் தகஜம் தகதிமி தளாங்குதக ததிங்கிணதோம், தளாங்குதக ததிங்கிணதோம், தகதிமிதக ததிங்கிணத்தொமென்று என்று அமைத்தது இப்பாணியை ஒட்டியே!
தாண்டவர் கற்பனையில் கண்ட தாண்டவக் காட்சி:
இவருடைய மேம்பட்ட கற்பனை வளத்துக்கு, மேற்கண்ட மலயமாருதப்பாடலே சான்று. சிவபெருமான் நடனத்தைக் இவர் இவ்வாறு கற்பனை செய்தார். பிறை நிலவும், கங்கையும் அவர் முடியிலிருந்துகொண்டு அசைந்து ஆடுமாம்; அமரர்களும் முனிவர்களும் சிவ சிவ என்று பேரொலி எழுப்பி வணங்குவார்களாம்; தேவலோகத்து இசைக்கலைஞர்களாகன நாரதரும், தும்புருவும் சந்தித்து இணைந்து பாடுகிறார்களாம். இந்த விந்தையான நாட்டியக் கச்சேரிக்கு, திருமாலும் இயைந்து மத்தளம் கொட்டுகிறாராம்; பிரமன் தாளக்கருவியை முழக்கி நட்டுவாங்கம் செய்கிறாராம்; அப்போது மேலே சொல்லப்பட்ட ஜதிச் சொற்களை எண்ணி தன்னுடைய காற்சதங்கைகள் ஒலிக்க நடனம் ஆடுகின்றாராம் கூத்தபிரான்.அத்தகைய காட்சியைக் கண்டு முத்துத்-தாண்டவருடைய கண்கள் குளிர்ந்தனவாம்;  அவர் பிறவி எய்திய பயனையும் அடைந்துவிட்டாராம். ஆதிசங்கர சௌந்தர்ய லஹரியில், வாணி, உமையின் ஒரு ஆஹா என்ற சொல்லின் இனிமைக்கு வெட்கி தாம் வீணையை மூடிவைத்தாகச் (சுலோகம்: விபஞ்யா காயந்தி) செய்த ஒரு கற்பனைப் போன்றதே இதுவும்.
படிக்கவே சுவை! முறையொடு இசை பயின்று குரல் வளமிக்கோர் இசைக்கும்போது எவ்வளவு இனிமை? கூடவே இவற்றை அபிநயித்து ஆடும் நாட்டியமும் இருந்தால் இறைவனையே கண்முன்னால் நிறுத்திவிடாதா?
எல்லோரும் அறிந்து வெகுவாகப் பாடப்படுகிறா மாயாமாளவ கௌளை இராகத்தில் அமைந்த ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கைக் காண் ஆயிரம் வேண்டாமோ என்ற பாடலில் சரணமானது, பல்லவி, அனு பல்லவிகளை விட மத்தியமகாலம் எனப்படும் வேகமாகப் பாடுகிற ஒரு அமைப்பைக் கொண்டது.  இதில் ஆடல்வல்லாரோடு யாரெல்லாம் ஆடினார்கள், எவையெல்லாம் ஆடின என்று ஒரு பெரிய பட்டியலையே மூன்று சரணங்களில் இடுகிறார்.
தாமரைப் பாதத்தணிந்த சிலம்புகள், கிண் கிண் என்று ஒலியெழுப்பும் சலங்கைகள், உரித்து தரித்த புலித்தோல் ஆடை, சிவந்த கைகளில் ஏந்திய மான்மழு, காதணிந்த பொற்குழைகள், தலையணிந்த கங்கை, இளம் பிறைய, விரித்த செஞ்சடை,  மணிகள் பதித்த ஆரங்கள், மலர் மாலைகள், கழுத்தைச் சுற்றிய படமெடுக்கும் அரவம், கொன்றை மலர் மாலை, இறைவன் ஏறி வருகிற தில்லையின் தேர், பெருந்திரளாக வரும் வேதியர்கள், தில்லைவாழ் அந்தணர்களாம் மூவாயிரம்பேர், தில்லை நகரத்து காரணி காளி, நிர்த்த கணபதி, வேலனாம் முருகர், நான்முகன், திருமால், இந்திரன், முப்பது முக்கோடி தேவர்கள்,முனிவர்கள், பதஞ்சலி மற்றும் புலிப்பாணியான வியாக்கிர பாதர், நந்தி, சிவகாமி அன்னையென்று ஒரு பெரிய பட்டாளமே உடனாட தில்லைக் கூத்து நடந்ததாம்.
இதே போன்ற கற்பனையை பாபநாசம் சிவனவர்கள் கபாலி நாதனின் பவனியைப் பற்றி காணக்கண் கோடி வேண்டும் என்று பாடியதை சென்ற மாதக் கட்டுரையில் சுட்டியிருந்தேன்.
அப்பரின் மந்திரமாய நீறும் தாண்டவரின் அருமருந்தும்:
ஒவ்வொரு கலைஞனுக்குமே தமது முன்னோடிகளின் தாக்கமும், அவர் விட்டுச் சென்ற தடங்களைப் பின்பற்றுதலும் இருக்கும். திருநாவுக்கரசப் பெருமானின், மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு என்கிற பாடலின் தாக்கமாகத்தான், தாண்டவரும் காம்போதி இராகத்தில் அமைந்த, அருமருந்தொரு தனி மருந்திது அம்பலத்தே கண்டேன் என்று பாடுகிறார். இதில் நீறைப் பாடாது நீறணிந்த நெற்றிக்கண்ணனாரையே மருந்தாகப் போற்றிப் பாடுகிறார்.
திருமருந்துடன் பாடும் மருந்து, தில்லையம்பலத்தில் ஆடும் மருந்து, இருவினைகள் அருக்கும் மருந்து, ஏழை அடியார்க்கும் இரங்கும் மருந்து, திரித்தி தித்தியென்றாடும் மருந்து, தேவாதி மூவர்கள் காணா மருந்து, கருத்தைத் திருத்தி இருத்தும் மருந்து, காலனைக் காலால் உதைத்த மருந்து என்றெல்லாம் அம்பலத்-தண்ணலையே பவ நோய்களைப் போக்கும் மருந்தாகப் போற்றிப் பாடுகிறார்.
தன்குற்றங்களைச் சொல்லியும் தயைவேண்டல்:
பாபநாசம் சிவனைப்பற்றிய கட்டுரையில் சுட்டப்பட்டிருந்த பொல்லாப் புலியிலும் என்ற பாடலைப் போலவே, காமவர்த்தினி (பந்துவராளி) இராகத்தில் ஈசனே கோடி சூரியப் பிரகாசனே கனகசபை என்ற பாடலில், தான் குற்றங்களையெல்லாம் சொல்லி, உயர்குணங்கள் இல்லாதோனாயினும் தனக்கு கனகசபேசன் அருள் புரியவேண்டும் என்று எல்லாச் சரணங்களையும் முடித்திருப்பார்.
அறியேன் நெஞ்சில் நேசம் பிறியேன் வருங் கருமம்
குறியேன் அறிவில் லாத சிறியேன் என்னை நீயாளாய்
நினையேன் உனை வேடமும் புனையேன் சிவகங்கையில்
நனையேன் கொடியதீ வினையேன் உய்யவே யாளாய்
துதியேன் வணங்கா வஞ்ச மதியேன் என்றாலும் சபா
பதியே நம்பினேன் சிவ கதியே தந்து எனையாளாய்
தாண்டவரின் பாடல்களில் சைவநெறி:
பொதுவாக இவருடைய கீர்த்தனைகளில், பல புராண செய்திகளை சொல்லியிருப்பார்;  சிதம்பர நகர வருணனைகளும், கோவிலின் வருணனைகளும் பல பாடல்களில் சொல்லப்பட்டுள்ளன. முத்துத்தாண்டவர் பாடல்களில் அத்வைத சிந்தனைகளும் ஏராளமாக உண்டு. ஆபேரி இராகத்தில் அமைந்த ‘என்னை எனக்குத் தெரிய சொல்வாய்- தில்லைப் பொன்னம்பலத்தரசேஎன்ற பாடலில், தன்னையறியும் அறிவது நீ சற்றும் தப்ப ஒண்ணாதிப்போ சாமி சமயம் என்று பாடி, தன்னை அறிவதுவே மெய்ஞான போதம் என்னும் சைவ சித்தாந்தக் கருத்தை மிகவும் எளிதாகக் கூறிவிடுவார்.
எத்தனையோ பாடல்களைப் பற்றி விவரித்து எழுதலாமென்றாலும், கல்யாணி இராகத்தில் அமைந்த ஆடினதெப்படியோ நடனம் நீர் ஆடின தெப்படியோ இவருடைய தத்துவத் தேடலை, சைவசித்தாந்த புரிதலை தெளிவாக அடிக்கோடிட்டு காட்டுவதாகும். அத்துவிதம் (அத்வைதம்) என்ற சொல்லே வியப்புக்குரிய சொல். ஆதி சங்கரர் காலத்துக்குப் பிறகே இச்சொல் புழக்கத்துக்கு வந்தது. இது இறைபொருள்/தத்துவம் என்பதை தெளிவாக இரண்டல்ல என்று குறிக்கும் சொல்! ஆனால் அவனை நிச்சயமாக ஒன்றென்றோ, ஒன்றுமில்லாத சூனியமென்றோ கூறவில்லை. இதைப் பற்றி ஒரு வெண்பாவை சிலநாட்களுக்கு முன்பு எழுதியிருந்தேன்.
ஒன்றானால் கூறலாமே ஒன்றென்றே - அத்வைதம்
ஒன்றல்ல இல்லாத ஒன்றுமல்ல? - நன்றுநோக்கின்
ஒன்றுக்கு மேலான ஒன்றென்றும் இல்லையது
ஒன்றுக்கும் ஒப்பிலா ஒன்று
இதே கருத்தை பதினைந்தாம் நூற்றாண்டிலே பாடலிலே அற்புதமாகச் சொல்லிவிட்டார் நம் தாண்டவர். அப்பாடலின் சரணங்கள் ஒவ்வொன்று அற்புதமானவை.
ஒன்றல்ல இரண்டல்ல ஒன்றிரண்டு மல்ல
நன்றல்ல தீதல்ல நாதவிந்து மல்ல
அன்றல்ல இன்றல்ல ஆதியந்த முமல்ல
மன்றுள் மரகத வல்லிகொண் டாடநின் (றாடின)
இறுதியாக சில சிந்தனைகள், செய்திகள்:
தாண்டவரின் இசைப்பாடல்களில் நிரம்பிய கவித்துவமும் இருந்தன, அவருடைய முழுமுதல் நம்பிக்கையான சைவநெறி சார்ந்த கருத்துக்களும் இருந்தன, ஆற்றோட்டமான நடையும் இருந்தது; நடமாடி வந்த சொல்லொழுக்கும் இருந்தது. எல்லாவற்றையும் விஞ்சி, சைவ நாயன்மார்களின் திருமுறைக்கும், மாணிக்கவாசகரின் திருவாசகத்துக்கும், சேக்கிழார் பெருமானின் பெரியபுராணத்தும், சற்று குறைவில்லாத பக்தி நெறி, அதுவும் இசையோடு கூடி பண்டிதர் பாமரர் என்று எல்லோரையும் ஈர்க்கக்கூடிய விதத்தில் அமைந்திருந்தது. முத்துத்தாண்டவர் காலத்தில் எந்த இராகங்கள் எல்லாம் புழக்கத்தில் இருந்தனவோ தெரியாது. இப்போது அவருடைய பாடல்களுக்கு அமைக்கப்பட்டிருக்கும் மெட்டுக்கள் பலவும் பின்னாளில் அமைக்கப்பட்டவையேபோல் தோன்றுகின்றன. அவருடை பரம்பரை-யினர் வழியாக தமிழ்ப்பண் முறையிலே வந்திருக்கும் சிலபாடல்கள், சாதாளி, மேற்செம்பாலை,  அந்தாளிக் குறிஞ்சி, பாலையாழ்,  சோமராகம், அந்தி, சாயரி, சாயவேளர் கொல்லி, செவ்வழிப்பாலை, மேகராகம், முல்லைப்பாணி, சாமரம், தக்கேசி, இந்தளம், பழம்பஞ்சுரம், செந்துருத்தி, தக்கராகம், பழந்தக்கராகம், காஞ்சி, மருதயாழ் போன்ற பண்பெயர்களைத் தாங்கிவந்தாலும், அவற்றின் இன்றைய கருநாடக சங்கீத இணை/ஓப்பு இராகங்களிலேயே பாடப்படுகின்றன. இணைய இசைத்தளங்களில் இவருடைய பலபாடல்கள் கேட்கக் கிடைக்கின்றன. உங்களுக்காக இந்த மாதத்திய பரிந்துரைப் பாடல்கள்:
அருமருந்தொரு, ஆடிக்கொண்டார், ஆரார் ஆசைப்படார்ஈசனே கோடிப்ரகாசனே, உனை நம்பினேன், காணாமல் வீணிலே, சேவிக்க வேண்டுமைய்யாதெரிசித்தளவில், மாயவித்தை, அம்பர சிதம்பர, ஆடினதெப்படியோ, மற்வாதிரு நெஞ்சமே, கண்டபின் கண்குளிர்ந்தேன்
இன்னும் இசைவாணர்கள் சுரக்குறிப்பிலிருந்தும் பாடாத பல அருமையான பாடல்கள் இருப்பினும், அவை ஏட்டளவில் இருப்பதுமட்டுமே உண்மை. விரித்த கடையில் கொள்ளும் இசைவாணர்கள் மிகவும் குறைவு. முயன்றால் செவ்விசையில் அற்புதமான தமிழ்பாடல்கள் மேடைகளிலே ஒலிக்கலாம்..

ஜனவரி 13, 2016

தமிழிசை வளர்த்த செம்மல்கள் - 1

சிவபுண்ய கானமணி சிவன்

[சென்னையில் வெளிவரும் இலக்கிய வேல், மாத இதழின் October - 2015 பதிப்புக்காக சிவபுண்ய கானமணி, தமிழ் தியாகய்யா பாபநாசம் சிவன் அவர்களின் 125 வருட நினைவு நாளுக்காக எழுதிய கட்டுரை]

இதோ! மார்கழி இசை மாதம் மலர ஆரம்பிக்க இன்னும் சிறிது நாட்களே! சென்னையின் ஒவ்வொரு மூலையிலும், முறையாகக் கட்டப்பட்ட இசை வளாகங்களிலோ, அல்லது தினமொன்றாக முளைக்கும் “எங்கள் வீட்டு மாடி சபா” அமைப்புகளிலோ ஆரம்ப நிலை கலைஞர்கள் முதல், இசை உச்சத்தின் பல்வேறு படிகளில் இருக்கும் வெற்றியாளார்கள் வரை இசை மழையாகப் பொழியப்போகின்றனர்.
ஆனால், பெரும்பாலும் இசைமூவர் என்று போற்றப்படும் தியாகராஜர், ஸ்யாமா சாஸ்த்ரிகளின் தெலுங்கு கீர்த்தனங்களோ அல்லது முத்து ஸ்வாமி தீக்ஷிதரின் சமஸ்க்ருத கீர்த்தனைகளோதான், மேடைகளில் கோலோச்சும். தமிழ் உருப்படிகள் மிகவும் குறைவாக, பொதுவாக கச்சேரிகளில் இறுதி உதிரிகளாகவே பாடப்படும்; அல்லது இடையில் “நானும் தமிழில் பாடியிருக்கிறேன்” என்ற அறிக்கை உருப்படிகளாக மட்டுமே இருக்கும்.
மேலே சொன்ன மேதைகளின் இசை உருப்படிகள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் இசை நுட்பத்திலும், கருத்தாக்கங்களிலும், இறை உணர்வின் வெளிப்பாட்டிலும், மேன்மையானவைதாம். ஆனால் ஐயத்துக்கிடமின்றி இன்றைய கர்நாடக இசையின் தாயகமாக இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக இருந்துகொண்டிருக்கும் தமிழகத்தின் செவ்விசை மேடைகளில், தமிழ் மொழிப் பாடல்கள் புறந்தள்ளப்பட்டிருக்கும் விந்தை வேறு எந்த மொழி பேசும் மாநிலத்திலும் நடவாதது.
இசைக்கு மொழி இரண்டாம் பட்சம்தான் என்பார்கள் சிலர்; இசையே மொழிதானே என்பர் வேறு சிலர்; இதில் எதற்கு மொழியைக் கொண்டு சேர்க்கவேண்டும் என்று கேட்பவர்களின் வாதங்களோ, தெலுங்கிலேயே இருக்கலாம், சமசுகிருதத்திலேயே இருக்கலாம் என்பதற்கான சப்பைக்கட்டுத்தான்.
தெலுங்கு மூவருக்கு முன்பேயான சீர்காழி தமிழ் மூவர்களாம், முத்துத்தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, மற்று அருணாசல கவிராயர் போன்றோரும், இணை காலத்தவரான கோபால கிருஷ்ண பாரதியும், பின்னவர்களான நீலகண்ட சிவனும், மஹா வைத்தியநாத சிவனும், கோடீச்வர ஐயரும் இந்த கட்டுரையின் நாயகரான பாபநாசம் சிவனென்று அறியப்படும் போலகம் இராமய்யா அவர்களும், அழகு தமிழில், கவித்துவம், இசை நுணுக்கங்களும் நிரம்பிய பாடல்கள் ஆயிரக்கணக்கில் செய்திருந்தாலும் கச்சேரி மேடைகளில் என்னவோ அருகியே கேட்கபெறுவன. இது பெரிய விவாதத்திற்கு உரிய தலைப்பு! வேறொரு கட்டுரையில் பார்ப்போம்!
சிவபுண்ணிய கானமணி என்று காஞ்சி மஹாசுவாமிகளால் கௌரவிக்கப்பட்ட பாபநாசம் சிவன் தமிழ் இசை உலகின் தனிப்பெரும் தாரகை என்பதிலே ஐயமே இல்லை! எத்தனையோ பட்டங்களும், விருதுகளும் பெற்றிருந்தாலும், சிவனின் இசை நிறைந்த இறைப்பணிக்கு ஏற்ற விருது அவர் பெற்ற இந்த பட்டமே!
இவரின் வாழ்க்கை வரலாறும், அவருடைய இயற்பெயரான போலகம் (அவர் பிறந்த ஊர்) இராமசர்மன் (இராமய்யா) பாபநாசம் சிவனாக மாறியதும் பல இணைய தளங்களிலுளும், இவரின் இளைய புதல்வியும், தந்தையின் அடியொற்றி நூற்றுக்கணக்கில் பாடல்களை எழுதியுள்ள, வாழும் சாஹித்யகர்த்தாவுமான, திருமதி ருக்மிணி ரமணி அவர்கள் எழுதிய “ஸ்ரீ பாபனாசம் சிவன் சரிதம்” என்ற புத்தகத்திலும் படித்தே தெரிந்து கொள்ளலாம். இவரது இசை உருப்படிகளின் தொகுப்பும் தேடி அறிந்துகொள்வது எளிதே.
ஆனால் அவரது பாடல்களில் காணப்பெறும் இசை நுணுக்கங்களும், சொல்லாட்சியும், எளிமையும், இனிமையும் பற்றி பொதுவாக மேடைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வல்லுனர்கள் போற்றிப் பேசினாலும், விரிவான ஆக்கங்கள் காணப்பெறுவதில்லை. இக்கட்டுரையின் நோக்கம், விரிவாக இல்லையென்றாலும், ஓரளவுக்காவது இவற்றைத் தொட்டுச் சுட்டுவதுதான். விரிவாக என்றால் ஆராய்ச்சி நூலே எழுதவேண்டியிருக்கும்.
கச்சேரி மேடைகளில் மறைந்த இசைமேதைகள் மதுரை மணி ஐயராலும், டி.கே பட்டமாள், செம்மங்குடி சீனிவாச ஐயர் போன்றோர்களால் பரவலாகப் பாடப்பட்டு புழக்கத்தில் இருக்கும் “எப்போது பசுமை” உருப்படிகளான, “காவா வா கந்தா வா வா”, “நானொரு விளையாட்டு பொம்மையா”, “சரவணபவ எனும் திருமந்திரம்”, “காபாலி”, “காணக் கண்கோடி வேண்டும்”, “உன்னையல்லால் வேறு” , “கற்பகமே கருணக் கண் பாராய்”, “என்னத்தவம் செய்தனை?” மற்றும் நடன மேடைகளில் ஆடப்படும் பல அழகு பத வர்ணங்களைப் பற்றியும் பலரும் அறிவார்கள், கேட்டிருப்பர்.
உன்னைத்துதிக்க அருள்தா” என்று திருவாரூர் தேரோட்டத் திருவிழாவில் வீதிவிடங்க சுவாமியைத் தரிசித்த பக்தி பெருக்கில் பாடத் தொடங்கிய இவருடைய நா, சென்னையில் மைலையில் கற்பாகாம்பாள் சமேத கபாலி ஆண்டவனின் அருட்ப்பார்வைக்காட்பட்டு, அங்கேயே தங்கி ஆயிரக்கணக்கான பாடல்களை எழுபதுகளின் தொடக்கம் வரை எழுதவைத்தது.
எதுகை, மோனை, சுரங்கள் சொற்களாக இயல்பாக பொருளோடு அமைந்த விந்தையென்று எத்தனையோ அழகுகள் இவர் பாடல்களில். சொற்களையோ, இராகங்களையோ இவர் தேடிச் செல்லவில்லை. இவரது பாடல்களோடு, அவை தாமாக ஒட்டிக்கொண்டன என்பதுதான் உண்மை. சமசுகிருதத்தில் திருவனந்தபுரத்தில் வையாகரணி பட்டம் பெற்ற இவர், தமிழை முறையாகக் கற்றதில்லை; இருப்பினும், இயற்கையாக இருந்த அழகுணர்ச்சியும், இறையருளாள் பொருத்தமாக அமைந்தவிட்ட சொற்களுமாக, இவரது இசைப்பாடல்கள் நெஞ்சை அள்ளும் இசை மணிக்குவியல்தான்.
கர்நாடக இசைப் பாடல் இலக்கண மரபில், பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் முறைமையும், தவிர நடை வேறுபாடுகளும், “மத்தியம காலம்” எனப்படும் வேகமாறுபாடுகளும் கொண்ட சரண அமைப்புகளும் உண்டு. பல்லவி என்னும் தொடுப்பின் முதல் சொல்லோடு அழகாக, அனுபல்லவி, மற்றும் சரணங்களின் இறுதிச் சொற்களும் சேர்வதே அழகு. இவர் பாடல்களில் அவை தாமாக வந்து அமைந்திருப்பது அழகோ அழகு.
எடுத்துக்காட்டாக, “மாயம் ஏதோ” என்கிற மாயாமாளவ கௌளை பத வர்ணத்தில், சரணத்தில், “ஆறுமுகா புகல் அறியேன் - என”வரும். பின்னால் வரும் சிட்டைசுர ஸாகித்யங்களில், முடிவுகளை நோக்கினால், “ மருக”, மகிழ்”, “குஹனே”, “தவழ்”, “சீல” என்ற ஒவ்வொரு முடிவும் “ஆறுமுகா” என்ற சொல்லோடு இயல்பாகப் பொருந்தி வருவன.
காப்பி இராகத்தில் அமைந்த “சோதனைச் சுமைக்கு ஏழை ஆளா” என்கிற பாடலில் அமைந்த சொற் சிலம்பம் மிகவும் உயர்வானது. அப்பாடலை முழுவதுமாகப் பார்ப்போம்:
பல்லவி:
சோதனைச் சுமைக்கு ஏழை ஆளா - சுப்ரமண்ய தயாளா - (மாளா/மீளா/தாளா)
சரணம்1:
பாதகமலம் மறவாத அடிமை - (உன் /என்) - பாதக மலம் அகலாதா - வாதா
சரணம்2: 
உனதருளிலும் என் வினைவலி பெரிதோ - உனக்கிரக்கம் இல்லையோ கந்தா - வந்தாள்
சரணம்3:
சூரசம்ஹாரா குமரா குருபரா - ராமதாசன் தொழும் பாலா - வேலா
இப்பாடலின் பல்லவியில், “ஆளா/தாளா” என்று அமைந்ததுமட்டுமல்லாமல், மாளா (இறந்துபடாத சோதனை), மீளா (மீளவே முடியாத சோதனை), தாளா (தாங்க முடியாத சோதனை) என்றெல்லாம் பாடிவிட்டு, அவனையே “தான் பணியும் தாளா” என்றும் பொருள் வரும் பாடியிருப்பது, வேறு எந்த இசைப்புலவரின் பாடலிலும் காணமுடியாத ஒன்று.
முதற் சரணத்தில் வரும், “பாத கமலம்” என்ற சொற்களே, அதன் இரண்டாம் வரியில், “பாதக மலம்” என்று பிரிந்து வேறு பொருளாக வருவதும், முதல் அடியைத் திருப்பிப் பாடும்போது “உன்” என்றும், இரண்டாம் அடியைப் பாடும்போது, “என்” என்றும் இருப்பதும் இசைக்கலைஞர்களின் உணர்வுபூர்வமான வெளிப்பாட்டுக்கு உறுதுணைதானே! சரண இறுதிகளில் அமைந்த அகலாதா/வாதா, கந்தா/வந்தாள், பாலா/வேலா போன்ற இறுதிச் சொல் எதுகையும் (வடமொழியினர் அந்த்யப்ராஸம் என்பர்), இவரது வடமொழிப் புலமை தமிழ்ப்பாடலுக்குத் தந்த வளமாகவோ, வரமாகவோதான் கொள்ளவேண்டும்.
இறைவனது அருட் கொடையினும், தன் ஊழ்வலி பெரிதா என்று கேட்கும் கற்பனை, “அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்னும் சிவபுராண வரிகளின் வலிமைக்குச் சற்றும் குறையாத ஒன்று.
கனராகங்களாகட்டும், ஜனரஞ்சகமான இராகங்களாகட்டும், இராகங்களின் உருவையும் சாரத்தையும் ஒன்றாக சரியான விகிதத்தில் கலந்து, இலக்கண விதிகளுக்குச் சற்றும் வழுவாமல் கொடுப்பதில் தியாகய்யருக்குப் பிறகுத் தமிழ் தியாகய்யர் என்று போற்றப்படும் இவர் ஒருவராலேயே முடிந்திருக்கிறது.
தியாகய்யரின் அடியொற்றியே இவரும் தோடி, கரஹரப்ரியா போன்ற இராகங்களில் பல பாடல்களை அமைத்துள்ளார். ஜி.என்.பியின் குரலில் “தாமதமேன் ஸ்வாமி” என்கிற பாடலும், இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் குரலில் “கார்த்திகேய என்கிற” பாடலும் தோடி இராகத்தின் இரண்டு உச்ச பரிமாணங்கள். தியாகய்யரின் பரிதானமிச்சிதே என்ற பாடலின் மெட்டிலேயே “நிஜமுன்னை நம்பினேன்” என்ற பாடலும், “உண்டேதி ராமுடொக்கடு” என்ற ஹரிகாம்போதி பாடலின் மெட்டையொட்டி, “உண்டென்று உறுதி கொள்வாய் மனமே” என்ற பாடலும் அமைந்திருப்பது, இவருக்கு தியாகய்யரின் இசை நுணுக்கங்கள் மிகவும் அணுக்கம் என்பதற்கு அத்தாட்சி.
மைலை நாதராம் கபாலீச்வரரின் அதிகாரநந்தி உற்சவ ஊர்வலத்தை வர்ணிக்கும் “காணக்கண்கோடி வேண்டும் - காபாலியின் பவனி” என்கிற பாடல் காம்போதி இராகத்தில் போற்றப்படுகிற ஒரு உயரிய அரிய உருப்படி மட்டுமல்ல. இறைவனின் ஊர்வல அழகை வர்ணிக்கும் பாடல்களில் முதன்மையானதும் கூட!
பாபநாசம் சிவன் அவர்கள் தூய சமஸ்க்ருதத்திலேயே பல பாடல்களை இயற்றியுள்ளார்; அவையும்கூட, மொழியறியாதவர்களும் புரிந்துகொள்ளும் இலகுவான சொற்களைக் கொண்டு. அதேபோன்று, பெரும்பாலான பாடல்களில் சமஸ்க்ருத சொற்களும் கலந்து விரவி வந்தாலும், கேட்போருக்கு விளங்கும்வகையிலேயே அவை அமைந்திருப்பதே உண்மை!
இவருடைய இசையமைப்பை பற்றி இவரே கூறும் ஒரு வாக்குமூலமும் உண்டு, இவரது பேகடா இராகப் பாடலான, “கான ரசமுடன்” என்ற பாடலில். அதில் சரணத்தில் வரும் வரிகளில், “ தடையற என்றும் வாடாத முத்தமிழ் மலர் எடுத்து தொடரெழுவகை சுரமெனும் ம்ருதுவான நாரில் தொடுத்து நிதமும்” என்பார் சிவனவர்கள். அதாவது ஏழு சுரங்களை மிருதுவான நாரில் தொடுக்கும் மலர்மாலையாக இருக்கவேண்டுமாம் இறைவனைப் பாடும் இசையானது!
சிவன் இறையோடு முறையிடுவார், சண்டையிடுவார், கோபிப்பார், அழுவார் தொழுவார், தன்னையே நொந்துகொள்வார், தன் பாடல்களில்! மாயாமாளவ கௌளயில் அமைந்த கீழே வரும் பாடலை அவரே சென்னை ம்யூஸிக் அகாடமியில் பாடியிருக்கிறார்.
பல்லவி:
பொல்லாப் புலியினும் பொல்லாப் புலையனெனனைப்
புவிதனில் ஏன் படைத்தாய் சம்போ?”
அனுபல்லவி:
நல்லோரைக் கனவில் நான் நணுகமாட்டேன்
நல்லது சொன்னாலும் நான் கேட்கமாட்டேன்
சரணம்:
உன்நாமம் என் நாவாறச் சொல்லமாட்டேன்
நல்லது சொன்னாலும் நான் கேட்கமாட்டேன்.
என்னாளும் மூவாசை நான் தள்ளமாட்டேன்
என்னயன் உன் ஆலயத்துள் செல்லமாட்டேன்
மற்றொரு ஹரிகாம்போதி பாடலில், “ உனது மலரடியில் விழுவேன் தொழுவேன் - உருகி அம்மா அம்மா என்று அழுவேன்” என்று சொல்வதில் ஒரு குழந்தையின் பிடிவாதம் இருக்கிறது.
நாத்திகம் பேசுபவர்களுக்கு நயமாகப் புராண நிகழ்ச்சிகளைச் சொல்லிச் செய்த பாடல்கள் உண்டு. திஸ்ர கதியென்று சொல்லப்படும் துள்ளல் கதியிலே அமைந்து கேட்பதற்கு நெஞ்சை அள்ளும் கருத்தமைந்த கீழ்காணும் கரஹரப்ரியாப் பாடல், சூதாட்டத்திற்குப் பிறகு மகாபாரதப் பெரியவர்கள் நிலைமை, வீர வீமன், அர்சுனன் போன்றவர்களில் செயலின்மை, திரௌபதியின் அவலம், கண்ணன் துயர் தீர்க்கவந்து ஆடை கோடியாய் தந்து மானத்தைக் காப்பாற்றியது என்று நான்கே வரிகளில் துல்லியமாகக் காட்டிவிட்டார். பீஷ்மர் போன்ற அவைப் பெரியவர்கள் ஊமைகளாய், கண்ணிருந்தும் குருடர்களாய் போனதையும் சொல்லாமல் விடவில்லை.
பல்லவி:
இல்லையென்ற சொல்லொன்று மட்டும் வேண்டாம் - கஷ்டங்கள்
எத்தனை நம்மைத் துளைத்தெடுதாலும் - தெய்வம்
அனுபல்லவி:
தொல்லை தந்த தந்தையொழிந்தான் - புடமிட்ட 
ஸ்வர்ணமாய் ப்ரஹ்லாதன் சுடர் விட்டெழுந்த கதையறிந்தும்
சரணம்:
வீடுமன் முதலாம் ஊமை குருடர் நடுவிலே - வீமன்
விஜயனும் கற்சிலையாய் சமைந்த சபையிலே - உயிர்
வாடிக் கதறும் பாஞ்சாலி துயரற - ஆடை
கோடி கோடியாய் கொடுத்த கோவிந்தன் அருளிருக்க
ஏற்கனவே சொல்லியிருந்தாற்போல் பாபனாசம் சிவனின் இசைப் பாடல்களின் சிறப்பை எழுத்திலே காட்ட ஒரு சிறு கட்டுரைப் போதாது. இசை நுணுக்கங்களை எழுத்தில் வடிப்பதிலும் பாடிக் காட்டுவதிலேயே பொருளிருக்கும். ஆனால் ஊடகக்கருவிகளான “யூட்யூப்” போன்றவையும், இசைக்கான இணையதளங்களில் எண்ணற்ற இசைப்பதிவுகளைக் கொண்டுள்ள சங்கீதப்ரியா.ஆர்க் (sangeethapriya.org) தளத்திலும், தேடினாலே கிடைக்கக்கூடிய சிவனவர்களின் எத்தனையோ பாடல்களின் பதிவுகள், அவரவர்க்கு பிடித்தமான இசை வாணர்கள், வாணிகள் குரல்களிலேயே கிடைக்கின்றன. ஆர்வலர்கள் அங்கெல்லாம் சென்று கேட்கலாமே!
உங்களுக்காக சில பாடல்களைப் பரிந்துரைக்கிறேன் இங்கே. “அடித்தாலும் உனைவிட்டு”, “அத்புத லீலைகளை”, ஆனந்த நடமிடும் பாதன்”, “உமையோர் பாகனே”, “சிவகாம சுந்தரி”, “செந்திலாண்டவன்”, “நம்பிக்கெட்டவர் எவரய்யா?”, “நெக்குருகி”, “பார்வதி நாயகனே”,”பிறவா வரம் தாரும்”,”மாதயை புரிந்தருள்”, “மூலாதார”, “ஸ்ரீகணேச சரணம்”, “சதாசிவகுமாரா”, “மால் மருகா”.
சொல்லாமல் விடுப்பட்டபாடல்கள் ஏராளம்! பரிந்துரையும், பாடலுக்கான சுட்டலும் விழைபவர்கள் உங்களுக்குத் தெரிந்த இசை ஆர்வலர்களைக் கேட்கலாம் அல்லது எனக்கும் தெரிவித்தால் உங்கள் ஆர்வத்துக்கு என்னாலியன்றதைச் செய்யமுடியும்.

ஜனவரி 12, 2016

எம்.எஸ்.வி - மெல்லிசையின் வடிவம், விளக்கம்

[சென்னையில் வெளிவரும் இலக்கிய வேல், மாத இதழின் செப்டம்பர் - 2015 பதிப்புக்காக எம்.எஸ்.வீ-யென்னும் மெல்லிசை மேதையை நினைவு கூறுமுகமாக எழுதிய கட்டுரை]


“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
  உள்ளம் என்றொரு ஊரிருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்”

தெய்வத்தாய் படத்தில் மக்கள் மனத்தில் நீங்காமல் இடம் பெற்ற மூன்றே எழுத்துகளில் உலகே அறிந்த மக்கள் திலகம் எம் ஜி.ஆருக்காக, டி.எம்.எஸ் என்னும் குரல் வளத்தில் ஒப்பிலாத மற்றொரு மெல்லிசைக் கலைஞர் அவர்கள் பாட, அண்மையில் மறைந்த ஆனால் தம்முடைய இசையினால் தமிழ், தெலுங்கு, மலையாள பட இரசிகர்களை 50 வருடங்களுக்கும் மேலாகக் கட்டிப்போட்டு, வாழும் புகழோடு இருக்கும் எம்.எஸ்.வி என்னும் மூன்றெழுத்-துக்களால் திரையிசை உலகே கொண்டாடும் மேதை இசையமைத்த பாடல்!

“மெல்லிசை” என்னும் மூன்றெழுத்துச் சொல்லும் “மன்னர்” என்கிற மூன்றெழுத்துச் சொல்லும் சேர்ந்து இவருக்கு “மெல்லிசை மன்னர்” என்ற பட்டம் அமைந்தது, ஒரு பொருத்தமான பெருமை.

திரையுலகின் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த எஸ்.வீ. வெங்கட்ராமன், ஸி.ஆர்.சுப்பராமன், ஜி.வி.ராமநாதன் என்கிற மேதைகளின் அடியொற்றி வந்து, புதிய சகாப்தத்தை திரையிசைக்குக் கொண்டுவந்த சாதனையாளரே நம்முடைய எம்.எஸ்.வி.  திரையிசைத் திலகம் என்று போற்றப்பட்ட மறைந்த கே.வி.மஹாதேவன் காலத்தில் அவருக்கு இணையாக, மதிக்கப்பட்ட மாமேதையே எம்.எஸ்.வி.

இவருக்குப் பின்னால் வந்த, அவரவர் காலத்தில் புது அலைகளை உருவாக்கிய இசைஞாநி இளையராஜாவாகட்டும், இசைப்புயல் ஏ.ஆர்.ரெஹ்மானாகட்டும், மற்ற இசையமைப்பா-ளர்களாகட்டும், இவருடைய பாதிப்பு இல்லாமல், இவரின் இசையை நுணுக்கமாக உய்த்துத் துய்க்காமல், இசையமைத்து விடவில்லை, இசைச் சிகரங்களை அடையவில்லை என்று நிச்சயமாகக் கூறலாம்.

இசையென்னும் கடலின் கரையில் நின்று பார்ப்பவர்களுக்கே பேரின்பம் உண்டு. அதில் மூழ்கி முத்தெடுப்பவர்களின் இன்பத்துக்குக் கேட்பானேன்! அவருடைய வாழ்க்கைச் சரித்திரம், அவர் இசையமைத்த படங்கள், பாடல்கள் என்ற பட்டியல்கள் இணையம் முழுவதும் இறைந்து கிடக்கின்றன. இவ்வாவணப் பதிவின் நோக்கம் அவற்றையெல்லாம் மீண்டும் பட்டியலிட அல்ல,  அவருடைய பாடல்களில், திரையிசைப் பாதையில் அவர் சாதித்த சில உச்சங்களைக் காட்டுவதே! அதுவும் அவ்வளவு எளிதன்று! மலையாக குவிந்திருக்கும் நவரத்தினங்களில் ஒரு சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுக்கும் செயலே அது.

ஓர் இசையமைப்பாளருக்கு, இசையறிவு மட்டும் இருந்தால் பற்றாது. சொல்லப்படும் கதையும், அதில் பாட்டு வரும் கட்டங்களும், இயக்குநர் மனதில் இருக்கும் காட்சியமைப்பும், பாடலாசிரியரின் சொற்களுக்கு ஏற்ப இசையமைப்பும் தகுந்த பாடகரைக் கொண்டு பாட வைத்தலும், என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஒரு காட்சியின் வீச்சைக் காட்டுகிற சொற்களை, இசையில் அப்பாடலுக்கு உரிய வலிவு, மெலிவு, நயம் இவற்றோடு வடிப்பது எளிதான செயல் அல்ல! இது புதியதை உருவாக்கும் பணி. கேட்போர் அத்துணைப் பேரின் நாடித் துடிப்பையும் ஓரளவு ஊகித்து செயலாற்ற வேண்டிய பணி.

எம்.எஸ்.வி அவர்களின் திரை சகாப்தத்தை பல விதங்களில் நாம் ஆராயமுடியும். அவர் பணியாற்றிய பெரும் இயக்குநர்கள், அல்லது மிகப்பெரிய நட்சத்திரங்களின் படங்கள் அல்லது கவிஞர்கள்  அல்லது பாடல்களைப் பாடிய இசைக் கலைஞர்கள்  அல்லது கையாண்ட இசை வகைகள், இராகங்கள் என்று பலவகைகளிலும் பார்க்கலாம்.

இயக்குநர்கள் என்று பார்க்கப்போனால், அவரது பல வெற்றிப் படங்களைத் தந்து மறைந்த இயக்குநர்கள் பீம்சிங், ஏ.சி.திருலோகச்சந்தர், பி.மாதவன், சி.வி. ஸ்ரீதர், இயக்குநர்  சிகரம் பாலசந்தர் போன்றோர் மிகச் சிறப்பாக எம்.எஸ்.வியை பயன் படுத்தியுள்ளனர்.

பீம்சிங்-எம்.எஸ்.வி கூட்டணி:
பீம்சிங்கின் “பா-வரிசைப்” படங்களின் பாடல்கள் 50 களின் இறுதியிலும், அறுபதுகளிலும் தமிழகத்தின் தெருக்களில் முழக்கமிட்டன. காலம் கடந்து அவை இன்றும் பசுமையான பாடல்களாக, பொருளும், இசையும், உச்சரிப்புத் தெளிவும் என்று எல்லாம் கலந்து இரசிகர்களின் உள்ளங்களை அன்றும் கொள்ளை கொண்டன, இன்றும் கொள்கின்றன. பதிபக்தி, பாகப்பிரிவினை, பாசமலர்,பாலும் பழமும், பாவ மன்னிப்பு, பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா,பார்மகளே பார், பச்சை விளக்கு, ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்களின் பாடல்களை யார் மறக்கமுடியும்? 

சி.வி.ஸ்ரீதர்-எம்.எஸ்.வி கூட்டணி:
அறுபதுகளில் திரையுலகில் தன்னுடைய அற்புதமான திரைக்காவியங்களால், எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைத்தவர் இயக்குநர் சி.வி.ஸ்ரீதர்! முதலில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி, பின்பு தனியாக எம்.எஸ்.வி என்று வெற்றிக்கூட்டணிகளை அமைத்து இயக்கிய சுமைதாங்கி, நெஞ்சில் ஓர் ஆலயம்,கலைக் கோவில், காதலிக்க நேரமில்லை, வெண்ணிற ஆடை,ஊட்டி வரை  உறவு, சிவந்தமண், போன்ற படங்கள் கதைகளுக்காக மட்டுமல்லாமல் கட்டிப்போட்ட இசைக்காகவும் வெற்றிப் படங்களாயின.

கே.பாலச்சந்தர்-எம்.எஸ்.வி கூட்டணி:
அறுபதுகளின் தொடக்கத்தில், பெரும்பாலும் மற்றுமொரு மதிக்கத்தக்க இசையமைப்-பாளரான வி.குமாரே பாலச்சந்தர் படங்களுக்கு இசையமைத்தார். அறுபதுகளின் இறுதிகளிலும், எழுபதுகள், எண்பதுகள் என்று பாலச்சந்தர்-எம்.எஸ்.வி கூட்டணி வெள்ளி விழா கூட்டணியாக அமைத்ததில் இரசிகர்களுக்குக் கிடைத்தன பல நினைவில் நின்ற பாடல்கள். பாமா விஜயம், அனுபவி ராஜா அனுபவி, அபூர்வ ராகங்கள், மன்மத லீலை, மூன்று முடிச்சு, அவர்கள், அவள் ஒரு தொடர்கதை, நிழல் நிஜமாகிறது, வறுமையின் நிறம் சிவப்பு போன்ற பல படங்களின் வெற்றிக்கு எம்.எஸ்.வியின் பாடல்களும், பின்னணி இசைக் கோர்ப்பும் உறுதுணை என்பது உறுதி.

பி.மாதவன்  இயக்கி எம்.எஸ்.வி இசையமைத்த  தெய்வத்தாய், ராமன் எத்தனை ராமனடி, வியட்நாம் வீடு, பட்டிக்காடா பட்டணமா, ராஜபார்ட் ரங்கதுரை போன்ற படங்களின் பாடல்கள் இன்றும் இனிப்பவை.

எத்தனையோ இயக்குனர்களுக்காக இவர் அமைத்த, இன்றும் இளமையோடு உள்ள பாடல்கள் எண்ணிக்கை இந்த  ஆவண வரைவுக்குள் அடங்காதது. அதே நேரத்தில் கீழ் காணும் பாடல்களைச் சொல்லாமலும் விடமுடியாது.

தெய்வத்தாயில், இந்த புன்னகை என்ன விலை, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்,  ஒரு பெண்ணைப் பார்த்து, வியட்நாம் வீடு படத்தில்,  பாலக்காட்டுப் பக்கத்திலே, உன்கண்ணில் நீர் வழிந்தால், உயர்ந்த மனிதன் படத்தில், நாளை இந்த வேளை பார்த்து, வெள்ளிக் கிண்ணம்தான் போன்ற பாடல்கள் இசையமைப்பின் புதிய பரிமாணங்களைத் தொட்டவை.

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே. நீயே உனக்கு என்றும் நிகரானவன் வாழ நினைத்தால், கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா, மானாட்டம் தங்க மயிலாட்டாம் பூவாட்டம் வண்ண தேராட்டம், பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓர் உயிரே, தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே, சட்டி சுட்டதடா, காலமகள் கண் திறப்பாள், நினைக்கத் தெரிந்தமனமே பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே, அமைதியான நதியிலே ஓடம், ஆறுமனமே ஆறு, சிரிப்புவருது சிரிப்புவருது. சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது, ராமன் எத்தனை ராமனடி போன்ற பாடல்களை என்று கேட்டாலும் இன்றுதான் சமைக்கப்பட்ட விருந்துபோல் சுவையாக இருக்கின்றன.

எம்.எஸ்.வியும் இராகங்களும்:
எல்லா திரை இசைப்பாடல்களுமே கருநாடக இசையென்றறியப்படும் தமிழிசையின் பரந்த நிலவெளியில் அடங்குபவைதான். மெல்லிசை என்பதால் ஒரு இராகத்தை அடிப்படையாகக் கொண்டாலும் படைப்பாளிகளின் கற்பனை இராக எல்லைகளைத் தாண்டி செய்யும் சோதனை முயற்சிகளாலேயே மெல்லிசை தனித்துவம் பெறுகிறது, தவிரவும் பாரம்பரிய இசையறிவு இல்லாத பாமரருக்கும் இரசிக்கமுடிகிறது.

இசையமைப்பாளரின் ஆழமான பாரம்பரிய இசையறிவோடு, மற்ற இசை வடிவங்களை அறிந்து கொள்ளும் ஆர்வமும், அவற்றைப் பொருத்தமாக நம்மிசையோடு சேர்த்து செய்யும் இரசவாதமும்தான் அவரை ஒரு உன்னதப் படைப்பாளியாக உலகுக்கு அடையாளம் காட்டும்.

எம்.எஸ்.வி எத்தனையோ பாடல்களை பாரம்பரிய இசையாகவே வழங்கியுள்ளார். அவருடைய பிற இசைக் கலப்பு அவருடைய அழகியல் புரிதலைக் காட்டுவதாகவே உள்ளன. எடுத்துக்காட்டுகளாக சில பாடல்கள் இங்கே:

ஆபேரி: கங்கைக் கரைத்தோட்டம் ராகங்கள் பதினாறு, பூமாலையில் ஓர் மல்லிகை
ஆபோகி: வணக்கம் பலமுறை சொன்னேன்,  நானின்றி யார் வருவார்,  தங்க ரதம் வந்தது, மங்கையரில் மஹாராணி
மோஹனம்: பாடும்போது நான் தென்றல் காற்று (சுமதி என் சுந்தரி), மலர்கள் நனைந்தன பனியாலே, தங்கத் தோணியிலே
அடாணா: யார் தருவார் இந்த அரியாசனம்
அம்ருதவர்ஷிணி: நேரம் பௌர்ணமி நேரம், சிவகாமி ஆட வந்தால் நடராஜன் என்ன செய்வார்?
ஆனந்த பைரவி: போய்வா மகளே
ஆரபி:ஏரிக்கரையின் மேலே
ஆஹிர்பைரவி: உள்ளத்தில் நல்ல உள்ளம்,
பாகேஸ்ரீ: நீ என்னென்ன சொன்னாலும் கவிதை, நிலவே என்னிடம் நெருங்காதே, மயக்கும் மாலைப் பொழுதே, கலையே என் வாழ்க்கையில் திசை, பொன்னெழில் பூத்தது புது வானில்
ப்ருந்தாவன சாரங்கா: பொன்னொன்று கண்டேன், முத்துக்களோ கண்கள்,
சந்த்ரகௌன்ஸ்: மாலைப் பொழுதின் மயக்கத்திலே
தர்பாரி காநடா: வசந்தத்தில் ஓர் நாள்
மதுவந்தி: நந்தா நீயென்நிலா, காதல் காதல் என்று பேச - ஹெல்லோ மைடியர் ராங் நம்பர்
கௌரி மனோஹரி:  கௌரி மனோஹரியைக் கண்டேன், மலரே குறிஞ்சி மலரே
ஹமீர் கல்யாணி: என்னுயிர் தோழி கேளொரு சேதி
கல்யாணி: இசைக்கேட்டால் புவி அசைந்தாடும்
கரஹரப்ரியா: மஹாராஜன் உலகை ஆளுவான், மாதவிப் பொன் மயிலாள்
லதாங்கி: ஆடாத மனமும் உண்டோ
சிந்துபைரவி: உனக்கென்ன மேலே நின்றாய்
பந்துவராளி: ஏழு ஸ்வரங்களுக்குள்
மஹதி: அதிசய ராகம்
வாசந்தி: கேட்டேன் கண்ணனின் கீதோபதேசம்

ஒரு பானைச் சோற்றுக்கு..:
சில இசை நுணுக்கங்களை எம்.எஸ்.வி அவர்கள் கையாண்டது போல அழகுணர்ச்சியோடு செய்தவர்கள் யாருமில்லை என்றே சொல்லலாம்.

உயர்ந்த மனிதன் படத்தில் வரும், “வெள்ளிக்கிண்ணந்தான்” என்ற பாடல் உதடுகள் ஒட்டாச் சுரங்களைக் கொண்ட நிரோஷ்டா என்ற இராகத்தில் தொடங்குவதைப் பார்க்கலாம். இரண்டு மத்தியம சுரங்களை அடக்கிய 36 இரண்டு மத்தியம இராகங்களை மறைந்த கர்நாடக இசை மேதை தஞ்சாவூர் கல்யாணராமன், அடையாளம் காட்டி, அவற்றில் பாடல்களையும் பாடியுள்ளார். நமது திரை இசை மேதையோ சில நேரங்களில், இரண்டு காந்தாரம், இரண்டு மத்தியமம் என்றெல்லாம் சேர்த்தமைத்து புதிய மெட்டுக்களை உருவாக்கியுள்ளார். எடுத்துக்காட்டாகச் சொல்ல, “ராஜ ராஜஸ்ரீ ராஜன் வந்தான், ராஜ போகம் தரவந்தான்“ என்ற பாடலில், அடுத்த இரண்டு வரிகளின் சுரங்களைக் (கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த கன்னமிரண்டினில் இன்னொரு ரகசியம் சொல்ல) கூர்ந்து கவனித்தால் புரியும். “காரிஸ” என்பது முதல் நான்கு சொற்களின் இசைக்குறிப்பு. இந்த “க” சாதாரண காந்தாரம் எனப்படும், “சிந்த” என்ற சொல்லுக்கான இசைக்குறிப்பு  “ரிகமா” என்பதாகும். இதில் வரும் “க”, அந்தர காந்தாரமாகும். அடுத்த நாகன்கு சொற்களின் சுரக்குறிப்பு, “தாபம” என்பதாகும் இதில் வரும் “ம” சுத்த மத்தியமாமகவே ஒலிக்கும்; ஆனால், “சொல்ல” என்பதன் சுரக்குறிப்பாம் ,”மபாப” என்பதில் வரும் “மா” இரண்டாவது மத்தியமமான, “ப்ரதி மத்யமத்தைக்” காட்டுவதாக உள்ளது. இவற்றின் சங்கமத்தால் நெஞ்சில் நின்று துள்ளும் ஒரு மெட்டினை நிரந்தரமாகப் பதித்தவர் எம்.எஸ்.வி. இது போன்ற இசை நுணுக்கங்கள் ஏராளம் அவருடைய இசையமைப்பில்

குறைந்த இசைக் கருவிகளை வைத்தும், ஏன் ஒரே இசைக் கருவியை வைத்தும் இசையமைத்திருக்கும் எம்.எஸ்.வி, 150க்கும் மேற்பட்ட இசைக்கருவிகளை வைத்தும் சில பாடல்களைச் செய்துள்ளார், பட்டத்து ராணி என்கிற பாடலில். தவிரவும் அப்பாடலில் சவுக்கடியையே ஒரு இசைக் கருவியாகப் பயன்படுத்தியிருப்பார் எம்.எஸ்.வி. அப்பாடலிலும், பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற பாடலிலும் ஒலிக்கும் பாங்கோ இசைக்கருவியின் முழக்கம் இல்லாத மெல்லிசை மேடைகளே அந்நாளில் கிடையாது.

சில நேரங்களில் ஒரே இராகத்தில் பல பாடல்களைச் செய்யும் போது, பெரும்பாலும், ஏதேனும் ஒன்றிரண்டைத் தவிர மற்றவையெல்லாம் அந்தளவுக்கு நினைவில் நில்லாமல் போய்விடும். அவ்வாறு இல்லாமல் ஒரு இராகத்தையே பலவித வடிவங்களில், அதுவும் பாட்டுக்குப் பொருத்தமாகக் கையாண்டு நினைவில் நிற்கச் செய்ததில் எம்.எஸ்.விக்கு இணை அவரேதான்! எடுத்துக்காட்டாக, ஆபோகி இராகத்தில் “தங்க இரதம் வந்தது” என்ற டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா பாடிய கலைக்கோவில் படப் பாடலும், “நானன்றி யார் வருவார்” என்ற டி.ஆர்.மஹாலிங்கமும், ஏ.பி.கோமளாவும் மாலையிட்ட மங்கைப் படத்திற்காகப் பாடிய பாடலும் அமைப்பில் வெவ்வேறாக உள்ள கர்நாடக இசை வடிவம் மாறாத சிறப்பான வெற்றிப் பாடல்கள்.  “வணக்கம் பலமுறைச் சொன்னேன்” என்னும் “அவனொரு சரித்திரம்” படப்பாடலுக்கும் மேற்கத்திய இசைத் தொடக்கத்தோடு இயல்பாக வந்து அமர்ந்துகொள்ளும் அற்புதப் பாடலும் ஆபோகிதான். “அவளுகென்று ஓரு மனம்”, படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பீ.சுசீலா குரலில் ஒலிக்கும் “மங்கையரில் மஹராணி” என்ற பாடலும் ஆபோகிதான்! ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட ஆபோகி இராகப் பரிமாணங்கள்!

இசை நுணுக்கங்களை விரித்துச் சொல்ல ஒரு சில பக்கங்கள் போதாதெனினும், இன்னுமொரு பாடலைச் சொல்லியே ஆகவேண்டும். மீனவ நண்பன் படத்தில் வரும் “தங்கத்தில் முகமெடுத்து” என்ற ஜேசுதாஸ், வாணி ஜெயராம் பாடிய பாடல் இதுவரைக்கும் யாருமே முன்பும், பின்பும் செய்திராத கற்பனை. சிவரஞ்சனிக்கு ஒரு புதிய தொடக்கத்தைக் கொடுத்து நடுவில் ஒரு சிறிய வரிமட்டும் மோஹன கல்யாணிபோலே காட்டி மீண்டு சிவரஞ்சனியில் சேர்ந்தது அவருடைய மட்டில்லா கற்பனைக்கும், கவிநயத்தோடே கூடிய இசை உணர்வுக்கும் ஒரு சோறு பதம்!

ஒருவர் மெட்டை மற்றொருவர் திருடுவது என்பது கலையுலகில் நடப்பதுதான். ஆனால் வேறு மொழியில், இசை வடிவத்தில் வந்த மெட்டுக்களை, நம் திரையிசைக்கு ஏற்ப மாற்றி அழகான, இயல்பாகக் படைப்பதற்கு மிகுந்த திறமை வேண்டும். அவ்வாறு வந்தவைதான், காதலிக்க நேரமில்லை படத்தில் வரும், “அனுபவம் புதுமை” என்னும் பாடலும், புதிய பறவை படத்தில் வரும், “பார்த்த ஞாபகம் இல்லையோ” என்பதும்! முதலாவது, “பெஸமே மூச்சோ” என்னும், ஸ்பானிஷ் மொழிப்பாடலையொட்டியது; மற்றது, டாங்கோ என்னும் நடன வடிவத்துக்கான “ஸ்வே வித் மீ” என்கிற பாடலையொட்டியது.

இசைப் பாடகர்களைக் கையாண்ட விதம்:
எத்தனையோ இசைப் பாடகர்களும், பாடகிகளும், இவரது மோதிரக்கையால் குட்டுபட்டவர்களே. யாரை எவருக்குப் பயன்படுத்தலாம் என்பதை மிகவும் நேர்த்தியாக அறிந்திருந்தார் எம்.எஸ்.வி.  டி.எம்.எஸ், பி.சுசீலா, பி.லீலா, ஜேசுதாஸ், பி.பி.ஸ்ரீநிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி, வாணி ஜயராம், சாய் பாபா, சதன், ஏ.எல்.ராகவன், ஜிக்கி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ, சித்ரா என்று பலரையும் பல நடிக நடிகையருக்காகப் பொருத்தமாகப் பயன்படுத்தியவர்.

டி.எம்.எஸ் அவர்களை, எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன் போன்ற வர்களுக்குப் பொருத்தமாக பயன் படுத்தியதோடல்லாமல், ரஜினிகாந்த்க்கு தானே முதலில் பாடி அவரின் வெற்றிக்கு ஒரு காரணமானவரும்  எம்.எஸ்.வி. மூன்று முடிச்சு படத்தில் வரும் “வசந்த கால நதிகளிலே” என்ற பாடலில், வரும் “மணவினைகள் யாருடனோ” என்ற வரிகள் எம்.எஸ்.வியிம் குரலில் ஒலித்தது, ரஜினியின் வில்லத்தனத்துக்குப் பொருத்தமென்றால் அவ்வளவு பொருத்தம்.

ஜேசுதாசை காதலிக்க நேரமில்லைப் படத்தில், “நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா தா” என்ற பாடலைக் கொடுத்துவிட்டு, மீண்டும் தமிழுலக்கு, “தெய்வம் தந்த வீடு” பாடலின் மூலம் மறு அறிமுகம் செய்ததும் இவரே. முதல் அறிமுகம் வீணை மேதை பாலச்சந்தர் செய்தது என்றாலும், நிலைக்கச் செய்தவர் எம்.எஸ்.வியே. அவரை மக்கள் திலகத்துக்கு பாடவைத்ததும், மக்களை அக்குரலும், எம்.ஜி.ஆருக்கு பொருந்துவதே என்று காட்டியதும் இவரே.

எம்.எஸ்.வியும் எம்.ஜி.ஆரும்:
நடிகர் திலகம் படங்கள் பலவற்றுக்கு இவர் இசை அமைத்திருந்தாலும், மக்கள் திலகத்துக்கும் இவருக்கு இருந்த பிணைப்பு அலாதியானது. எம்.ஜி.ஆரே சிறந்த இசை இரசிகர். அவரை மகிழ்விப்பது அவ்வளவு எளிதான செயலாகவும் இருக்கவில்லை. ஆனாலும், அவருடைய விருப்பையும், அவரது இரசிகர்களின் நாடித் துடிப்பையும் துல்லியமாக அறிந்திருந்தார் எம்.எஸ்.வி. அந்த கூட்டணியில் நினைவில் நின்ற பாடல்கள் பல, அவற்றுள் ஒரு சில, மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுபவை..

எம்.எஸ்.வியின் இசையில் எம்.எஸ்.வி:
தன்னை ஒரு பாடகராக என்றுமே அவர் முன்னிருத்திப் பாடியதில்லை என்று கேள்வி. இயக்குநர்கள் சில சமயம் இவரை சில காட்சிகளின் அழுத்தத்துக்காகப் பாடச் சொல்லியிருக்கிறார்கள். அவர் பாடும் பாடல்கள், அவர் பாடவே எழுதப்பட்டவைபோல இருக்கும்; ஆலால கண்டா, அல்லா அல்லா, சொல்லத்தான் நினைக்கிறேன், எனக்கொரு காதலி இருக்கின்றாள் போன்றவை இவரது குரலின் உயிர்ப்பை இன்னும் சொல்லிக்கொண்டிருப்பவை. இவர் வி.குமார் இசையில் பாடிய “உனக்கென்ன குறைச்சல்” என்ற பாட்டை தனியாக அமர்ந்து கேட்டுப்பாருங்கள்!  ஒரு புது நம்பிக்கைப் பிறக்கும்!

எம்.எஸ்.வியும் கவிஞர்களும்:
எம்.எஸ்.வி பல பெரிய முன்னாளைய கவிஞர்களின் பாடல்களுக்கு இசை அமைத்திருந்தாலும் கவிஞர் கண்ணதாசனும், கவிஞர் வாலியும்தான் எம்.எஸ்.வியின் இசைக்குப் பெரும்பாலும் எழுதியிருக்கிறார்கள். உடுமலை. நாராயண கவி, கே.டி.சந்தானம், பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம், மருதகாசி போன்ற முன்னோடிக் கவிஞர்கள் காலத்திலெல்லாம் சி.ஆர்.சுப்பராமன் போன்றோருக்கு உதவியாளராக இருந்த எம்.எஸ்.வி. அவர்களது பாடல்களுக்கும் இசையமைக்கும் அளவுக்கு வளர்ந்தகாலத்தில், அவருக்கு கண்ணதாசனோடு ஏற்பட்ட அன்புப் பிணைப்பு, தமிழ் திரையுலகிற்கு மறக்கமுடியாத காதல் பாடல்களை, களிப்புப் பாடல்களை, தத்துவப்பாடல்களை என்று பல வகைகளிலும் அள்ளித் தெளித்திருக்கிறது. “ஆலய மணியின்” என்ற பாடலை இன்று அதிகாலை வேளைகளில் கேட்டாலும் தமிழத்தின் ஒரு கிராமியக் காலைப் பொழுதின் காட்சிகள் கண்ணில் விரியுமே!  “நினைக்கத் தெரிந்த மனமே” என்ற பாடல் இன்னும் பிரிவாற்றாமையில் இருப்பவர்களுக்கு ஓர் ஆற்றுப்படுத்தும் மருந்தாக இருக்கிறதே. “பொன்னொன்று கண்டேன்”, “காலங்களில் அவள் வசந்தம்”, “அன்று ஊமைப் பெண்ணல்லோ” போன்ற  பாடல்கள் இன்றும் காதல் இரசவாதம் செய்கின்றவையாகவே இருக்கின்றனவே! இந்த கூட்டணி போல் மனித உணர்வுகளை கவிதையும் இசையும் சரியான விகிதத்தில் கலந்தளித்த கூட்டணி ஏதுமில்லை.

கவிஞர் வாலியோடு எம்.எஸ்.விக்கு இருந்த தொடர்பு வாலிபக் கருத்துகளும், வாளிப்பான புரட்சிக் கருத்துக்களும் நிறைந்திருக்கும் மக்கள் திலகம், மக்கள் கலைஞர் ஜெயசங்கர் மற்றும் ரவிச்சந்திரன் போன்றவர்களின் படங்களுக்கு எழுதிய துடிப்பான பாடல்களைக் கொண்டது. கண்ணதாசனுக்கு அடுத்தபடியாக, எம்.எஸ்.வி மிகவும் விரும்பி இசையமைத்தது வாலியவர்களின் பாடல்களுக்கு என்று உறுதியாகக் கூறலாம்.

இறுதியாக (தற்காலிக):
நிறைவோடு நிறைவு செய்யமுடியாத பணி, எம்.எஸ்.வி போன்ற வாழ்நாள் சாதனையாளாரைப் பற்றி எழுதுவதும் பேசுவதும்.எனினும் அளவு கருதி நிறைவு செய்வதற்கு முன்பு: எம்.எஸ்.வி ஒரு சகாப்தம் என்பதையெல்லாம் கடந்து, இவர் எத்தனை உள்ளங்களின், எத்தனை உணர்ச்சிகளின் இசை வடிகாலாக இருந்திருக்கிறார் என்பதே இவர் வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்க்கைக்குப் பெருமை. பெரிய விருதுகளை இவருக்குக் கொடுக்காத சிறுமைக்காக சில அமைப்புகள் வெட்கப்படவேண்டும். இவரது இசை, வாழ்வு என்று எல்லாமே இசை மிக்கது. இவரைப்போல் மற்றொரு படைப்பாளி மீண்டும் பிறந்துதான் வரவேண்டும் என்பவர்களின் பட்டியலில் முதல் வரிசையில் இருப்பார் நம் எம்.எஸ்.வி.

திரையிசைத் தேனிசை தித்திக்கத் தந்தவா திகட்டாமல் தந்தவா
நரையுடன் திரைவர நலமது குறைந்துமே நயமிகு இசையினை
வரையிலா வள்ளலாய் வழங்கிய வித்தகா விலையிலா முத்துநீ
உரைபெறும் உம்மிசை உலகினில் நிலைபெறும் உம்பெயர் என்றுமே

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...