டிசம்பர் 25, 2015

ஷோடஸ கணபதி 4 - (கஜகர்ணகன் - யானைக் காதன்)

நான்காவது ஷோடஸ நாமம்: கஜகர்ணகன்.

இதைப்பற்றி காஞ்சி மஹா ஸ்வாமிகள் என்ன சொல்லுகிறார்?

அடுத்த பேர் கஜகர்ணகர் அப்படியென்றால் யானைக் காது உள்ளவர். கஜமுகர் என்று முகம் முழுதையும் சொல்லிவிட்டால் போதாது. அவருடைய யானைக் காதும் யானைக் காதுதான் என்று பிரத்யேகமாகச் சொல்ல வேண்டும் என்கிறார்போல் இப்படிப் பேர் சொல்லியிருக்கிறது.
யானைக் காதிலே அப்படி என்ன விசேஷம்?மற்ற ஸ்வாமிக்கெல்லாம் காதைச் சுற்றிப் பெரிசாக ஒரு கால் வட்டம் மாதிரிப் போட்டுத் தோளோடு சேர்த்தே விக்ரஹங்கள் பண்ணியிருக்கும். இந்த வட்டப் பிரபைக்கு உள்ளேயும், கிரீடத்துக்குக் கீழேயும் அந்த ஸ்வாமியின் காது எங்கே இருக்கிறது என்று நாம் தேடிக் கண்டு பிடிக்கும் படியே இருக்கும். அநேகமாக, பெரிஸாகத் தொங்கும் குண்டலத்தை வைத்துத்தான் காதைத் தெரிந்து கொள்ள முடியும். விக்நேச்வரர் ஒருத்தர்தான் இதற்கு விலக்கு. அவருடைய யானைக் காது அவருடைய பெரிய முக மண்டலத்துக்கு ஸம அளவாக இரண்டு பக்கமும் விரித்து விசாலமாக ப்ரகாசிக்கிறது.

நாம் பண்ணும் பிரார்த்தனையெல்லாம், நம்முடைய முறையீட்டையெல்லாம் கேட்க வேண்டியது ஸ்வாமியின் காதுதானே? அந்தக் காது தெரிந்ததும் தெரியாமலும் இருந்தால் என்னவோபோல்தானே இருக்கிறது?கஜகர்ணகராக விக்நேச்வரர்தான் தன்னுடைய பெரிய காதை நன்றாக விரித்துக்கொண்டு மற்ற தெய்வங்களுடையதைப் போல் மண்டைப் பக்கமாக ஒட்டிக் கொள்கிற மாதிரி இல்லாமல் முன் பக்கமாக விரித்துக்கொண்டு - நம் ப்ரார்த்தனைகளை நன்றாகக் கேட்டுக் கொள்கிறார் என்ற உத்ஸாஹத்தை நமக்குக் கொடுக்கிறார்.

மற்ற எல்லாப் பிராணிகளுக்கும் காது குழிவாகக் கிண்ணம் மாதிரி இருக்கிறது. யானைக்குத்தான் FLAT -ஆக விசிறி மாதிரி இருக்கிறது. கேட்கிற சப்தம் சிதறிப் போகாமல் பிடித்து உள்ளே அனுப்புவதற்காகவே மற்ற ப்ராணிகளுக்கு குழிந்து இருப்பது. யானைக்குக் கூர்மையான ச்ரவண சக்தி (கேட்கும் ஆற்றல்) இருப்பதால் சிதறாமல் பிடித்து உள்ளே அனுப்பணும் என்கிற அவசியம் இல்லை. பிள்ளையார் நம் வேண்டுதல்களை நன்றாகக் கேட்டுக் கொள்வார்.

யானை பெரிய காதை விசிறி மாதிரி ஆட்டிக் கொள்வது ரொம்ப அழகு. பிராணி வர்க்கத்திலேயே யானை ஒன்றால்தான் இப்படிக் காதால் விசிறி போட்டுக் கொள்ள முடிவது. ஏதாவது பூச்சி பொட்டை விரட்டுவதற்காக ஒரு தரம். இரண்டு தரம் வேண்டுமானால் மாடுகூடக் காதை ஆட்ட முடியுமே தவிர, யானை மாதிரி ஸதா பண்ண முடியாது. மாடு ஏதோ கொஞ்சம் ஆட்டுவதற்குக்கூட ஸ்ட்ரெயின் பண்ணிக் கொள்ள வேண்டியிருக்கிறது. யானைதான் அநாயாஸமாக, ரொம்ப இயற்கையாக எப்பப் பார்த்தாலும் காதை ஆட்டிக் கொண்டே இருப்பது. கஜாஸ்பாலம் (கஜ ஆஸ்பாலம்) கஜதாளம் என்றே அதற்குப் பேர் கொடுத்து வைத்திருக்கிறது. ஆனை விசிறி மாதிரியுள்ள காதை ஒரே சீராகத் தாளம் போடுகிற மாதிரி அசைத்துக்கொண்டே இருக்கிறது.

மனிதர்கள் யானை மாதிரிக் காதை ஆட்டுவது சிரம ஸாத்தியமான ஒரு பெரிய வித்தை. அதைத்தான் கஜகர்ணம் போட்டாலும் நடக்காது என்று சொல்கிறோம். கஜகர்ணம் என்பதை கஜகரணம் என்று நினைத்துக்கொண்டு யானை மாதிரி குட்டிக் கரணம் போட்டாலும் நடக்காததாக்கும் என்று அர்த்தம் பண்ணிக் கொள்கிறார்கள். அது ஸரியில்லை. யானை மாதிரி காதை ஆட்டுகிற வித்தைத்தான் கஜகர்ணம்.

கஜகர்ணம், கோகர்ணம் போடுவது என்பது முழு வசனம். கோகர்ணம் என்கிற வார்த்தையில் கர்ணம் என்றால் காது என்று அர்த்தமில்லை. கர்ண என்பது க்ரியா பதமாக (வினைச் சொல்லாக) வரும்போது துளைப்பது, குத்துவது என்று அர்த்தம். ஒரு மாட்டின் உடம்பில் விரலாலோ தார்க்குச்சியாலோ குத்தினால் உடனே அதன் உடம்பு முழுக்க சுழி

சுழியாக அலை மாதிரி ஒரு சலனம் பரவும். இதே மாதிரி ஒரு மநுஷ்யர் பண்ணிக் காட்டுகிற அபூர்வமான வித்தைத்தான் கோகர்ணம் கஜகர்ண வித்தையும் அதே மாதிரிதான், ஸுலபத்தில் கற்றுக் கொள்ள முடியாது.நமக்கு ரொம்ப சிரமமாயிருப்பதை விக்நேச்வரர் விளையாட்டாகப் பண்ணுவதை கஜகர்ணர் என்ற பேர் காட்டுகிறது.

யானை காதை ஆட்டுவதில் அழகு இருப்பதோடு ஒரு பர்பஸும் இருக்கிறது. மதம் பிடிக்கிற காலத்தில் அதன் முகத்தில் கன்னப் பிரதேசத்தில் மத ஜலம் ஸதாவும் துளித்துக் கொண்டிருக்கும். அதற்காக ஈ, எறும்புகள் ஏகமாக மொய்க்க வரும். அதுகளை விரட்டுவதற்கு வசதியாகவே பகவான் யானைக்கு விசிறிக்காதைக் கொடுத்து, அதனால் விசிறிக் விட்டுக் கொள்ளும் திறமையும் கொடுத்திருக்கிறார்.
விக்நேச்வரரின் கன்னத்தில் மத ஜலம் வழிந்து கொண்டு இருப்பதை ஆச்சாரியாள் கபோல தான வாரணம் என்று (கணேச பஞ்சரத்தினத்தில்) சொல்லியிருக்கிறார். கபோலம் என்றால் கன்னம். தானம் என்றால் மத ஜலம்.

பிள்ளையார் பெருக விடும் மத ஜலம் என்பது ஆனந்த தாரைதான், க்ருபா தாரைதான். பரம மதுரமாக இருக்கும் அம்ருதம் அது. அந்த மாதூர்ய மத நீரை ருசி பார்ப்பதற்காக வண்டுகள் ஏகமாக வரும். இதையும் ஆச்சார்யாள் ஒரு ஸ்தோத்திரத்தில் சொல்லியிருக்கிறார்.

கலத்-தான கண்டம் மிலத் ப்ருங்க ஷண்டம்

மத ஜலத்தை மொய்க்கும் வண்டுகளை விரட்டுவதற்காகப் பிள்ளையார் விசிறிக் காதை ஆட்டிக் கொண்டே இருக்கிறார். கோபத்தில் விரட்டுவதல்ல. குழந்தை ஸ்வாமிக்கும் இது ஒரு விளையாட்டுதான். வண்டுகளும் அவரிடத்தில் இந்த விளையாட்டுக்காகத்தான் வருவது. அவருடைய தர்ஸனமே அவற்றுக்கு அம்ருதமாக இருக்குமாதலால் மத ஜலத்தை குடிக்க வேண்டுமே என்பதில்லை. விளையாடனும், அவர் தங்களுக்கு விசுறனும் என்றேதான் அதுகள் கன்னக்கண்டை வந்து மொய்க்கும். நாம் குழந்தை காதில் விளையாட்டாக ருர்ர் என்று கத்தி அது மயிர்கூச்சலெடுப்பதைப் பார்த்து ஸந்தோஷப்படுகிறோல்லியோ?அந்த மாதிரிப் பிள்ளையாருடைய பெரிய காதிலே அதிர அடிக்கிற மாதிரி தங்களுக்கே உரிய ஜங்கார சப்தம் போட்டு வேடிக்கை பண்ணனும் என்றே வண்டுக் கூட்டம் வரும். அந்த வேடிக்கை விளையாட்டை புரிந்து கொண்டு அவரும் காதை ஆட்டி ஆட்டி அதுகளை விரட்டுகிற மாதிரிப் பண்ணுவார். அந்தக் காற்றிலே அதுகள் மாற்றி மாற்றி ஒடிப் போவதும், மறுபடி வந்து மொய்ப்பதுமாக அமர்க்களம் பண்ணும், மதஜலத்திலே விசிறிக் காதின் காற்றுப் பட்டு ஸ்வாமிக்கு ஜில்லென்று ஆனந்தமாயிருக்கும்.

ராக சைதன்யர் என்று ஒருத்தர் மஹாகணபதி ஸ்தோத்திரம் என்று செய்திருக்கிறார். அதில் மந்த்ர சாஸ்திர விஷயங்களெல்லாம் வருவதோடு அழகான கவிதா வர்ணனையும் அழகான வாக்கில் வருகிறது. விக்நேச்வரர் விசிறிக் காதை ஆட்டி வண்டுக் கூட்டத்தை விரட்டுவது போல விளையாடுவதை அதில் நீள நெடுக வார்த்தைகளைக் கோத்து அழகாகச் சொல்லியிருக்கிறது.

தாநாமோத-விநோத-லுப்த-மதுப ப்ரோத்ஸாரணாவிர்பவத்
கர்ணாந்தோலன-கேலனோ விஜயதே தேவோ கணக்ராமணீ

தான ஆமோதம் என்றால் மதஜலத்தின் ஸுகந்தம். ஸ்வாமி பெருக்கும் மத ஜலம் கமகமவென்று வாஸனை அடிக்கிறது. அநேத விநோதமான, அதாவது இன்பமூட்டுகிற வாஸனையை மோந்ததில் வண்டுகளுக்கு ஒரே பேராசை உண்டாகிறது. மத ஜலத்தை அப்படியே குடித்துவிட வேண்டுமென்று, லுப்த மதுப என்றால் பேராசை கொண்ட வண்டுகள். அல்லது வாஸனையில் மயங்கிப்போன வண்டுகள் என்றும் அர்த்தம் பண்ணலாம். அந்த வண்டுகளை விரட்டணுமென்று ஒரு விளையாட்டு ஆவிர்பாவமாகிறது, விளைகிறது.

கேலனம் என்றால் விளையாட்டு. என்ன விளையாட்டு கர்ணாந்தோலன கேலனம் கர்ண ஆந்தோலனம் என்றால் காதை முன்னேயும் பின்னேயுமாக ஆட்டுவது.

ஊஞ்சலுக்கு ஆந்தோலம் என்று பெயர். தோலம் என்று மட்டும் சொன்னாலும் அதே அர்த்தம்தான். தோல உத்ஸவத்தைத்தான் டோலோத்ஸவம் என்று சொல்லி ஊஞ்சல் போட்டு ஸ்வாமியை ஆட்டி ஸந்தோஷபப் படுகிறோம். டோலி கூட இதோடு ஸம்பந்தப்பட்டதுதான்.

காதை ஆட்டி வண்டை விரட்டி விளையாடும்போது விக்நேச்வரர் கூடுதலான அழகாக விளங்குகிறார். வெற்றி வீரராக விளங்குகிறார். படையெடுக்கும் வண்டுக் கூட்டத்தை விரட்டியடிக்கும் வெற்றி வீரராக விளங்குகிறார்.

இங்கே பிள்ளையாரை கணக்ராமணி என்ற பெயரில் குறிப்பிட்டிருக்கிறது. க்ராமணி என்றால் ஒரு குறிப்பிட்ட கூட்டத்துக்குத் தலைவர். கிராமம் என்றால் சின்ன ஊர் என்ரு பொதுவாக நாம் எடுத்துக் கொள்ளும் அர்த்தம். அதில் தலையாரியாக இருப்பவர் கிராமணி. அப்படியிருந்தவர்களின் வம்ஸத்தினர்தான் இப்போதும் ஜாதிப் பெயராக கிராமணி என்று போட்டுக் கொல்கிறார்கள். சிவ கர்ணங்கலுக்கு தலைவராக, கணபதி-கணேசன்-கணாதிபன் கணநாயகன் என்றால்லாம் சொல்லப்படுபவரை இங்கே கணக்ராமணி என்று அழகான வார்த்தை போட்டுச் சொல்லியிருக்கிறது.
கணக்ராமணியாக ஏகப்பட்ட பரிவார கணங்கள் சூழ இருக்கிறவரானாலும், அவர்கள் யாரும் தனக்குச் சாமரம் போட வேண்டுமென்றில்லாமல் தானே தன் காதுகளையே ஆட்டிப் போட்டுக் கொள்கிறார். சாமர கர்ணர் என்று அதனால் பேர்.

மூஷிக வாஹன மோதக ஹஸ்த
சாமர கர்ண...."

கஜகர்ணராக இருப்பதால்தான் அப்படித் தனக்குத் தானே தன்னாலேயே சாமரம் போட்டுக்கொண்டு கரணம், காரணம், கர்த்தா, கருவி எல்லாமே தாம்தான் என்று காட்டுகிறார்.

ஷோடச கணபதி 4 - கஜகர்ணகன் ( யானைக் காதன்)

மதநீர் மதுவிழை வண்டினம் வேண்டும் மலர்முகத்தோய்
இதமாய் விரட்ட இருசெவி யாட்டும் இபமுகத்தோய்
முதமே முருகோன் முதல்கஜ கர்ணா முழுமுதலோய்
நிதமும் துதிப்போம் நிலைபெறச் செய்திடு  நிர்மலனே


matanīr matuviḻai vaṇṭiṉam vēṇṭum malarmukattōy
itamāy viraṭṭa irucevi yāṭṭum ipamukattōy
mutamē murukōṉ mutalkaja karṇā muḻumutalōy
nitamum tutippōm nilaipeṟac ceytiṭu  nirmalaṉē

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...