வியாழக் கிழமை என்பது குருவாரம் என்றும் வெள்ளிக் கிழமை சுக்ரவாரம் என்றும் அறியப்படும் வடமொழியினரால்.. வியாழக்கிழமை தேவர்களின் குருவாம் ப்ரஹஸ்பதி மற்றும் கல்லாலின் கீழ் வாக்கிறந்த பூரணமாய் அமர்ந்த தக்ஷிணாமூர்த்தி வழிபாட்டுக்கு விசேட நாள். தெய்வீகமான நாள்.. வெள்ளிக்கிழமைகள் தேவி வழிபாட்டுக்கு உகந்த நாளென்று கொண்டாடுகிறோம்…ஆனால் ஏன் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் வெள்ளிக்கிழமை இரவுகள் (வார இறுதி நாள்) பொதுவாக மதுபானம் மற்றும் கேளிக்கைகளோடு செலவிடப்படுகிறது என்பதற்கான காரணம் சிந்தித்தால், இதோ இந்த கலித்தொகைப் பாட்டால் அதை ஓரளவுக்கும் ஊகிக்கமுடிக்கிறது. வெள்ளிக்கிழமை அசுர குருவாம் சுக்ராச்சாரியாரின் நாளாக அறிகிறோம். ஒருவேளை வெள்ளிக்கிழமைகளில் இந்த அசுர குருவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தத்தான் லலிதா சகஸ்ரநாமம் போன்ற சுலோகங்களைச் சொல்லுகிறோமோ? தெரியவில்லை… அது என்ன அப்படிப்பட்ட வரிகள் என்று நினைக்கிறீர்களா!
இப்போது பாடல் வரிகளைப் பார்க்கலாம்…
நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்து
அறவினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது
மருதன் இளநாகனார். கலித். 99 : 1- 3
கள்ளை உண்ணுதல் ஆகாது என்று நீக்கின தேவர்க்கும் - அதனை உண்ணுதலை நீக்காத அசுரர்க்கும் நீக்குதலும் நீங்காமையும் ஆகிய அவ்விரண்டினையும் கைக் கொண்டு அறத்தொழிலாக இன்பமுறுத்துபவர்கள் அந்தணர்களாகிய வியாழ குருவும் வெள்ளி குருவும். இவ்விருவரும் வெவ்வேறு வகையினவாகச் செய்துள்ள அரசியலைக் கூறும் நீதிகள் கூறும் வழியைத் தப்பாமல் ஆட்சிபுரிபவன் நீ. ( அந்தணர் இருவர் என்றது தேவருக்குக் குருவாகிய வியாழனும் அசுரர்க்குக் குருவாகிய வெள்ளியும் ஆவர். வியாழன் இயற்றிய நூல் பாருகற்பத்தியம். வெள்ளி இயற்றிய நூல் சுக்கிர நீதி. வியாழன் கள் உண்ணக்கூடாது என்றும் ; வெள்ளி கள் உண்ணலாம் என்றும் தம் நூலுள் கூறியுள்ளனர்.)
அதாவது நமது பாணியில் சொல்வதென்றால்…
வெள்ளி உரைப்பான் விருந்தாகக் கள்ளினை
கொள்ளென சுக்ரநீதி யாயானால் - தள்ளுக
வென்பான் வியாழந்தன் பாருகற் பத்தியத்தில்
என்செய்வீர் தள்ளாகொள் ளா?
ஆனால் இன்றும் இரண்டு கட்சிக்காரர்களும் இருக்கிறார்கள்..
அள்ளி அருந்தினால் ஆகாயத் தில்மிதக்கக்
கள்ளால் களிப்பே கணந்தோறும் - தள்ளிட
உள்ளம் ஒருநாளும் ஒவ்வாதே கொள்ளுவோம்
உள்ளியதைத் தள்ளுவோமுள் ள!
என்பர் சிறந்த டாஸ்மார்க் குடிமகன்கள்!
அள்ளி அருந்த அறிவழித்து ஆட்டிவைக்கும்
கள்ளால் கவலையே காண்போம்நாம் - கொள்ளவெம்
உள்ளம் ஒருநாளும் ஒவ்வாதே தள்ளுவதை
உள்ளுவதே உள்ளத் துவப்பு
என்பர் சிறந்த பாஸ்மார்க் (வீட்டிலும் வெளியிலும் வாங்கத்துடிக்கும்) குடிமகன்கள்!
நீங்கள் வியாழனா அன்றி வெள்ளியா?
பாஸ்மார்க்கா? டாஸ்மார்க்கா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam