இப்போது எல்லோரும் அறிந்த, தாங்கள் வாங்கிய விருதுகளைத் திருப்பிக்கொடுக்கும் ஓர் அசிங்கக்கூத்து நாடுதழுவி நடந்து கொண்டிருக்கிறது. குடியரசில் இதெல்லால் செய்யலாம் என்றாலும் கூட, ஒரு பைசாவுக்குப் பெறாதா காரணத்தைச் சொல்லி, தங்கள் அரசியல் எதிரியான மோடி அவர்களின் இமாலய வளர்ச்சி, மற்றும் உலகளாவிய அங்கீகாரம் இவற்றைப் பொறுக்கமுடியாமல், இவர்களது கைக்கூலிகளாகவே செயல்பட்டு அவற்றுக்க்காக விருதுகளை வாங்கியவர்களே இன்று திருப்பிக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்..
இது ஒரு அரசியல் பின்னணியில் பின்னப்பட்ட சதிவலையாகவே தோன்றுகிறது. இவர்களில் பல எழுத்தாளர்கள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்.. ஏன் விஞ்ஞானிகள் என்றுகூட சொல்லிக்கொள்கிறார்கள்.. பெரும்பாலும் இடது சாரி சிந்தனைத் தளத்தில் இயங்கி, சார்பின்மை என்பதனைப் பற்றி நாளும் பாடம் எடுத்துக்கொண்டிருப்பவர்கள்.
ஒருவகையில் இவர்கள் செய்வது சரியே.. பொறையுடைமை (TOLERANCE) பற்றி மற்றவர்களுக்குப் பாடம் எடுக்கும் இந்த பொறையுடைமையின் அரிச்சுவடி கூட அறியாதவர்களுக்கு, அசடர்களுக்கு, தகுதியில்லாதவர்களுக்கு, முதலில் விருது கொடுக்கப்பட்டதே தவறு.. அத்தவறு இப்போது சரி செய்யப்பட்டிருக்கிறது. இன்றைய பாரதம் பொறையுடைமை இன்மையோடு (INTOLERANT) இருக்கிறதாம்.. அதாவது நம்முடைய பெரும்பாலான குடிமக்கள் அவ்வாறு இருக்கிறார்களாம்.
இவர்கள் பிரதமர் மோடியை அசிங்கப்படுத்தவேண்டும், நம் நாட்டை வெளிநாடுகளின் பார்வையில் அசிங்கப்படுத்தவேண்டும் என்று ஒரு முனைப்போடு செயல்படுகிறார்கள்.
ஒருவர் சொல்லுகிறார், பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணத்தைப் பற்றி, குறிப்பாக அமெரிக்கப் பயணத்தைப் பற்றி அமெரிக்கப் பத்திரிக்கைகள் பெரிதாகப் பேசவே இல்லை என்று.. அதே மூச்சில், அவர்கள் நம்நாட்டு பொறையின்மையைக் கூர்ந்து கவனித்து பத்திபத்தியாக எழுதுவதாக.. எவ்வளவு அயோக்கியத்தனமான வாதம் இது? அவர்களுடைய நோக்கமாவது பரவாயில்ல.. நம்முடைய வளர்ச்சியை விரும்பாதவர்கள், குற்றங்களை பூதாகாரமாகப் பேசி உலக அரங்கிலே நம்மைத் தலைகுனியச் செய்யவேண்டும் என்று முனைபவர்கள்.
மன்னவனும் நீயோ வளநாடும் உன்னுடையதோ என்று கேட்டு நாட்டைவிட்டு நீங்கிய புலவர்களைத்தான் நம் நாடு கண்டிருக்கிறது.. இந்த தன்மானத் திலகங்கள் அவ்வாறு செய்தாலாவது கொஞ்சம் மதிக்கலாம். இங்கேயே உட்கார்ந்து கொண்டு, தங்களுடைய வக்கிரங்களை அனுமத்திக்காத அரசு மத்தியில் ஆட்சி புரிகிறதே என்று வயித்தெரிச்சல் படுபவர்களை என்ன செய்யலாம். அவர்கள் நினைப்பது போல மிகவும் பொறையுடைமை உடைய நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா அல்லது ISIS போன்ற ஜீவகாருண்யமிக்க இயக்கங்கள் இருக்கும் ஸிரியா போன்ற நாடுகளுக்கு வேண்டுமானாலும் அனுப்பிவிடலாம்.
கீழ் காணும் கலித்தொகை வரிகளைப் பாருங்கள்.. நல்ல நாட்டிலே பகை வந்து சேர்ந்த்தாக அந்த நாட்டை விட்டு நீங்கும் மக்கள், தகுதியுள்ள தலைவனைத் தேர்ந்தெடுத்து வேறு இடத்தில் வாழ்வார்களாம்..
பண்புடை நல்நாட்டுப் பகை தலை வந்தென
அது கை விட்டு அகன்று ஒரீஇ காக்கிற்பான் குடை நீழற்
பதி படர்ந்து இறை கொள்ளும் குடி …………..
மருதன் இளநாகனார். கலித். 78 : 4 – 6
இந்த விருது திரும்பிகொடுக்கும் நன்மக்கள், இவர்கள் நாட்டுக்கு அரசே பகையாயிற்று என்று கருதினால், ஒட்டுமொத்த பாரதமும் பொறையின்றிப் போயிற்று என்று நினைத்தால், பாகிஸ்தான் எல்லைக்கு அருகே அவர்களுக்கென்று தனி குடியேற்றம் செய்துவிட்டால் போகிறது… அவர்களுக்குள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.. வேண்டுமானால் துணக்கு மணிசங்கர் ஐயர் போன்ற சிறந்த தேசபக்தர்களையும், பர்காதத், நிதி ரஸ்தான் போன்ற ஊடக நங்கூரங்களையும் அழைத்துச் சென்று, சார்பில்லாத ஒரு குடியரசு அமைக்கலாமே…?
அன்று இப்படி:
பண்புள்ள நாட்டிலே பார்பொறை யின்மையென்று
புண்ணாகிப் போனோர் புலம்பெயர்வர் - திண்ணமவர்
தன்மானம் காத்தோராம்; தம்மவரில் சீர்த்தோனை
முன்னிருத்தி வாழ்வார் முனைந்து
இன்று எப்படி?:
உடனிருந்தே கொல்நோய் உறவாடிச் சாய்க்கும்
விடமென்ன பச்சோந்தி வீணர் - சுடரணைக்கும்
சூரர்கள் சொல்லாலே சூதுவிளை சூழ்ச்சியர்கள்
பாரதத்தைப் பற்றிய புற்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam