கட்டளைக் கலித்துறை
சிவனார் படைத்தத் தமிழைக் கொணர்ந்தார் குறுமுனியோர்
உவந்தே அமர்ந்து அழகாய் வளர்த்தார் அறுமுகனார்
புவன்ம் முழுதும் நிறைந்தே கவிதை இலக்கியங்கள்
சுவையாய் மணந்து அறிவைப் பரப்பி நிறைந்தனவே
வஞ்சி விருத்தத்தில்
எல்லாம் துறந்த துறவோரும்
ஏனோ கவிதை துறக்கவில்லை
வல்லோ ராகி நல்லவற்றை
வாரி கவிதைகள் வழங்கிவிட்டார்
கவிதை என்பது உளம்பொங்கி
கருத்தாய் ஒன்றினை கூறிடவே
புவிமேல் அறிஞர் பெருமக்கள்
புதுக்கி வைத்த ஒருபாதை
கருத்தைச் சொல்லக் கவிதையேன்
கருதும் சிலபேர் இங்குண்டு
பொருத்த மான சொல்லழகால்
பதியும் கருத்தும் பலவுளவே
மொழியது தோன்றிய நாள்முதலாய்
மோனம் கலைந்து உலகோர்கள்
வழியது காட்டும் வகைபலவும்
வாழும் முறையும் கற்றாரே
உன்னை உய்த்து உணர்ந்திடவும்
உலகைக் கடந்தும் தேடிடவும்
முன்னை பின்னை என்றிலாத
மூலப் பொருளைத் தேடிடவும்
இன்னம் பலவாய் இருப்பவற்றை
எல்லாம் தேடிப் பகிர்ந்திடவும்
பின்னிப் பிணைந்த மருமங்கள்
பிற்காலத் தோர் படித்திடவும்
அறிவைச் சுருக்கிச் சொல்லிடவே
அமைந்த அழகே கவிதையதாம்
அறிவோம் அந்த உண்மையினை
அதனால் நாமும் கவிபடைப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam