ஏப்ரல் 21, 2014

கயிலைப் பதிகம்

கயிலைநாதனை நினைந்து கைலாசபர்வதம்-மானசரோவரம் யாத்திரை தொடர்பான புத்தகங்களையும், ஊடகப் படங்களையும் பார்த்துவிட்டு, பதிகம் பாடலாமே என்று தொடங்கினேன்.  பதிகம் என்பதை விட அதிகம் பாடியிருக்கலாமோ என்ற ஆவல் இப்போது எழுகிறது. தேவார மூவரின் பாடல்களைப் படிக்கும் போது ஏற்படும் தமிழ்சுவையில் ஒரு துளியாவது என்னுள் ஊறியிருக்கும் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்டது. தவறாயினும் சரியாயினும், எல்லாம் என்னைக் கருவியாகக் கொண்டு அவன் எழுதியதுதான் என்று எண்ணுகிறேன். என்னுள் விளைந்திருக்கும் கவிதைப் பயிரானது மேலும் வளர்ந்து என்னை எழுத ஊக்குவிக்க அவனருளாலே அவன் தாள் வணங்கி, இதை அவனுக்கே சமர்ப்பிக்கிறேன்.

கயிலைப் பதிகம்

முற்றத் தணைந்த முழுமதி போல்வானை
பற்றை நமக்குள் பதத்தில் விதைத்தானை
கற்றோர் கனலென் றறிநுதல் கண்ணானை
பற்றக் கயிலைக்குச் செல் (1)

கொன்றை அணிந்த முடிவெண் மதியானை
நன்றை நமக்குள் நலிய விதியானை
என்றும் உளத்தில் இதத்தை அளிப்பானை
சென்று கயிலையில் காண் (2)

பொன்று வினைகள் பொடிய அருள்வானை
நின்று நடமிடும் தில்லை வனத்தானை
வென்று திரிபுரம் சேர எரித்தானை
தொன்று கயிலையில் தேடு (3)

ஒன்றே அவனென் றுலகம் உணர்வானை
கன்றாக் கனிவோ டுலகைப் புரப்பானை
மன்றம் அமர்ந்து தமிழை சமைத்தானை
குன்றாக் கயிலையில் பார் (4)

வற்றாக் கருணை வளர்மயிலை வேந்தனை
கற்றோரும் காணறியா சோதியை காந்தனை
உற்றான் எனவே உவந்துளம் கொண்டானை
ஒற்றிக் கயிலையை நாடு (5)

கன்றிய காலனை காலால் கடிந்தானை
கன்றிடக் காமனை கண்ணால் கனன்றானை
நன்றாம் நமச்சிவாய நாமத்தின் நாதனை
குன்றாம் கயிலையில்  கூடு (6)

வேதம் வழுத்திடும் வேதியன் நீறனை
நாதப் ரணவவோங் காரத்தின் சாரனை
வாதவூர் சுந்தரன் பாடிய பித்தனை
சீதக் கயிலையில் சேர்(7)

காந்தனாம் கந்தனை வேலனை ஈந்தோனை
பூந்தளிர் மேனியளை பாகத்தே வைத்தோனை
தீந்தமிழால் மூவர்செய் தேவாரம் ஆனானை
போந்துக் கயிலையில் பார் (8)

நான்முகன் நாரணன் தேடியும் காணானை
நான்மறை ஆரணம் ஆதியாய் சொல்வானை
வானோர்  வாழவாரி நஞ்சை உண்டானை
ஞானக் கயிலையில் நாடு (9)

தந்தையும் தாயுமான எந்தை சிவபிரானை
முந்தை முடைவினைகள் முற்றும் அழிப்பானை
சிந்தையைச் சீராக்கும் சிற்றம் பலத்தானை
விந்தைக் கயிலையில் வாழ்த்து (10)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...