ஏப்ரல் 25, 2009

மென்பொருள் தேசத்திலிருந்து “மெய்ப்பொருள்”



[மெய்பொருளைப் பார்ப்பதற்கு முன்பு செய்தி முன்னூட்டமாக எழுதியது.. நேற்றுதான் படத்தின் முன்னோட்ட வெள்ளோட்டம் ஸான் ஹோசேயில்! விமரிசனம் விரிவாக கூடிய விரைவில்!)


சாதிக்கும் வெறியும், அயர்ச்சி இல்லாத முயற்சியும், உறுதியான வெற்றிக்கான கூட்டணி! ஸிலிக்கன் வேலியின் மென்பொருள் என்ஜினீயர்களாக இருக்கும் நாட்டி (நடராஜன்) குமாரும், க்ரிஷ் பாலாவும் இணைந்து தொடங்கிய ‘ட்ரீம்ஸ்-ஆன்- ஃப்ரேம்ஸ்’ திரை நிறுவனத்துக்கும் இந்த வெற்றி நிச்சயமே! அவர்கள் இருவரும் இணந்து தயாரித்து, இயக்கியுள்ள, அமெரிக்காவிலேயே முற்றும் தயாரான முதல் தமிழ் படம் என்கிற முத்திரையுடன் வருகிறது “மெய்பொருள்”. நாராயண் சுந்தர்ராஜன், இணையாக இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோருமே “ஸான் ப்ரான்ஸிஸ்கோ” வளைகுடாப் பகுதியைச் சார்ந்தவர்கள்.

வள்ளுவரின் திருக்குறள்களான “ எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” மற்றும் “எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்பவை எல்லோரும் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைக்கானவை.

இத்திரைப்படத்தின் உண்மையான பொருள்கூட மேற்கண்ட கருத்தை, தமிழ்த்திரை கண்டிராத கதை இழை, மற்றும் திரைக்கதை அமைப்பினால், மிகவும் நேர்த்தியாக, சொல்லியிருப்பதில்தான் இருக்கிறது.

இந்த முழுநீள திரைப்படம், புலம்பெயர்ந்த இந்தியர்களை, வழக்கமான முத்திரைகுத்திய, வார்ப்புகளில் காட்டாது, ஒரு நேர்த்தியான மனோதத்துவ த்ரில்லராக வெளிவந்திருப்பது, ரசிகர்களை தங்கள் இருக்கைகளின் விளிம்புகளில் உட்கார வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!

டாக்டர்களும், இன்ஜினியர்களும், விஞ்ஞானிகளுமாக பல்வேறு தொழில்களில் வெற்றிகரமாக இருப்பவர்கள், தொழில்ரீதியான திரைபடக் கலைஞர்களோடு இணந்து, ஒருவருடத்துக்கும் மேலாக, உழைத்து உருவாக்கியுள்ள படம், “மெய்ப்பொருள்”.

“மோகமுள்” தயாரிப்பாளரான டி.ஜானகிராமினின் மகனான நாட்டி குமாரும், க்ரிஷூம் இயக்கம்(பெர்க்லியில்), மற்றும் படத்தொகுப்பும் பயின்றவர்கள்.

அப்படிபட்ட வித்தியாசமான கதைக் களன்தான் என்ன?

“ஸாம்” (க்ரிஷ் பாலா) ஒரு வெற்றிகரமான “ந்யூரோ சர்ஜன்”, தன் மனைவி (அனுஷா) தேவியுடன் (தென்றல் மாத இதழின் நிருபர்) மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவர்கள் வாழ்வில், அவர்களுடைய பழைய நண்பர்களான விஸ்வா, சஷி, லக்ஷ்மியும் (நாரயண் சுந்தர்ராஜன், ரித்து பார்க்கவா, ராணி), புதிய அறிமுகங்களாக தரணும், ராஜனும் (சுரேன் விஜயகுமார், நாட்டி குமார்) நுழைகிறார்கள்.

தேவியின் தொழில்முறை போட்டியான சஷி, வேலிக்கும் காவல், ஓணானுக்கும் சாட்சியான விஸ்வா, வரப்போகும் சிக்கல்களை முன்னதாகவே ஆருடம் போல் கூறும் வானவியல் நிபுணர் ராஜன், பிரபல நடிகர் தரன், இவர்களின் நுழைவு, ஸாம், தேவி இவர்கள் உறவிலே உரசல்களயும், விரிசலையும், விளைவிக்கின்றன. ஆருடங்கள் அறிவுக்கு அப்பாற்பட்டு, உண்மைகளாகும் போது, ஸாம், யாரை நம்புவது என்றும், அவன் வாழ்க்கையில், மேலும் என்ன விபரீதங்கள் நடக்கும் என்றும் தெரியாமல் தவிக்கிறான்.

அவன் யாரை நம்புவான்..? நட்பா? குடும்பமா? உறவுகளா? உடன் பணிபுரிபவர்களா? ஸாம், உண்மை, கற்பனை இவற்றில் வித்தியாசம் காண முடியாமல் தவிக்கிறான். அவனுடைய ஒவ்வொரு முடிவும் இன்னும் சிக்கலை உண்டு பண்ணுகின்றன. நேரம் கடந்து, நிலைமை கை மீறுவதற்கு முன்பு அவன் இந்த சிக்கல்களை விடுவிக்கவேண்டும், அவற்றிலிருந்து விடுபடவேண்டும்!

வழக்கமான சண்டைக்காட்சிகள், பஞ்ச் வசனங்கள், ஐட்டம் நடனங்கள், திணிக்கப்பட்ட, கதைக்கு சம்பந்தமில்லாத நகைச்சுவைக் காட்சிகள், மரங்களை சுற்றும், சமவெளிகளை அளக்கும், வெளி நாடுகளை வீடியோ சுற்றுப்பயணமாக அழைத்துச்செல்லும் கதா நாயக நாயகிகளின் காதல் பாடற்காட்சிகளும் தவிர்க்கப்பட்டு, நுண்ணிய புரிதலோடும், புத்திசாலித்தனமான கற்பனைகளோடும் அமைந்திருக்கும் இறுக்கமான, “நச்” கதைச்சொல்லுதல், தமிழ் திரைத்துறைக்கு வித்தியாசனமவைதான்!

கலிஃபோர்னியாவைச் சுற்றியுள்ள இடங்களில், எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் பல்வேறு இந்தியர், அமெரிக்கர், ஆப்ரிக்கர், ஆசியாவினர், லாட்டினோக்கள் என்று பல இனத்தவர்களும், பங்குபெற்றுள்ள படம்!

சென்னை திரை உலகின் சிறந்த எடிட்டர்களுள் ஒருவரான B.லெனின், இப்படத்தை எடிட் செய்திருப்பதுடன், ஹாலிவுட்டைச் சார்ந்த க்ரிஸ்டோபர் எல்ட்ரிட்ஜ் (சினிமாட்டோக்ராபி), ஜான் மேஸே (பின்னணி இசை) போன்றவர்கள் பணியாற்றி இருக்கிறார்கள்.

திரையில் சுமார் 120 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு (எதி நிஜம்?) , ஒரே சமயத்தில் வெளியிடப்படுகிறது. யூ.எஸ்.ஏ-வில், ஏப்ரல் 24-ம் தேதியும், சென்னையில் மே 1-ம் தேதியும் வெளியிடப்பட இருக்கிற “மெய்ப்பொருள்”, உண்மையிலேயே, தமிழ் திரையுல வரலாற்றின் மற்றுமொரு மைல்கல்!


படத்தைப்பற்றிய விவரங்களுக்கு: www.meipporulthemovie.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...