ஏப்ரல் 12, 2009

முடிவதெல்லாம் தொடர்ந்துவிட்டால்.. (சிறுகதை)

‘கிருஷ்ணவேணி'.. சுந்தரத்தமிழில், ‘கார்குழலி!'... ஆஹா.. என்ன அற்புதமான பெயர்..? இந்தக் கதையின் நாயகியும் ஒரு அற்புதமான பெண்மணிதான்..!

புதுமைப்பெண், புரட்சிப்பெண் என்ற அடைமொழிகளெல்லாம் இல்லாத, அதேசமயத்தில், மௌனமும், அழுத்தமும் கலந்த பார்வையும், இருகண்விழிகளிளாலேயே, எதிரிலிருப்போரை மில்லிகிராம் துல்லியத்திற்கு எடைபோடக்கூடிய திறமையும் கொண்டவள்.

தெளிவான சிந்தனை, மேல்பூச்சு இல்லாமல், எவருக்காகவும் உண்மைகளை மாற்றாமல், உள்ளதை, உள்ளபடியே உரைக்கின்ற நெஞ்சத்துணிவு, அதேசமயத்தில் அசட்டுப் பிடிவாதங்கள் இல்லாத உண்மையான பெண்மணி..! கலியுக ஔவை என்று சொல்லக்கூடிய அறிவு முதிர்ச்சி.

ஐ.ஐ.டி-யில், எம்.டெக் எலெக்ட்ரானிக்ஸ் படிப்பை முடித்துவிட்டு, தனியார் நிறுவனமொன்றில், டிசைன் இன்ஜினீயரிங் மேனேஜராக பணிபுரிகிறாள்.

கல்யாணமாகி, ஒரு 10 வயது பெண்ணுக்குத் தாயாக இருந்தபோதிலும், வயதை சிறிதும் காட்டாத ஆட்ரே ஹெப்பர்ன் போன்ற உடல் வாகு.

கல்யாணமாகி, கௌரவான குடும்பத்தலைவியாக இருப்பதால், விவரமாக வருணிக்க முடியாவிட்டாலும், பார்ப்பவர்கள் மறுமுறை திரும்பிப்பார்க்கக் கூடிய ஒரு 'பர்ஸனாலிட்டி'. அளவான பேச்சு, அமைதியான முகம்....

எல்லாம் இருந்தும், இவள் வாழ்க்கையில் எதோ ஒரு நிறைவின்மை..!

அவளுடைய கணவன் ஷ்யாம், கண்ணுக்கு நிறைவானவன், அதி புத்திசாலி, அவனும் இன்ஜினீயரிங் டைரக்டராக, ஒரு சா•ப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறான்.

மற்றவர்களுக்குத் தெரியும்படியாக ஒரு குறைவும் இல்லைதான். ஆனால், மிகவும் உள்ளார்ந்த மனிதன். எவரையும் சுலபமாக நம்பிவிட மாட்டான்.

தான், தன் மனைவி, தன் குழந்தை இவர்களைத்தவிர மற்றவர்களோடு உறவெல்லாம், வெறும் உதட்டளவில்தான்..! தன் மனைவி, தன் நண்பர்களோடு பேசுவதைக் கூட விரும்பாதவன்.

இவ்வளவு ஏன்...? கார்குழலி, தன்னுடைய, நெருங்கிய உறவினர்களோடு சிறிது அதிகமாகப் பேசுவதைக் கூட பொறுக்கமுடியாதவன். கார்குழலி தன் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதைதான் விரும்பினான்.

கார்குழலிக்கு, ஷ்யாமுடைய வியாபார நிமித்தக் குடிப்பழக்கம், புலால் உணவுப்பழக்கம் இவைகள் எல்லாம் பிடிப்பதே இல்லை. எப்போதும், எல்லா விஷயங்களிலும், தானே விட்டுக்கொடுப்பது, அவளுடைய ஔவை அறிவுக்கும், தன்மான உணர்வுக்கும் சம்மதமாக இல்லையென்றாலும், சுற்றம், தாய் தந்தையர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, ஷ்யாமின் பிற நல்ல குணங்களைமட்டும் பாராட்டிக்கொண்டு, தன் கல்யாண வாழ்க்கையை சீராக நடத்திக்கொண்டிருந்தாள்.

ஷ்யாமுக்கு, கார்குழலி, படித்த பத்தாம் பசலி என்னும் எண்ணம்.. தனக்கு சமமாக, அலுவலகப் 'பார்ட்டி'களில், கார்குழலியும் ஒரு 'கம்பெனி'க்காகக் கூட குடிப்பதில்லை, புலால் உணவு சமைக்கும் விடுதிகளில் நுழைவதுகூட இல்லை என்கிற வருத்தம் ஒருபுறம்.

தேவையில்லாத, உறவுகளையும், நண்பர்களையும் கொண்டாடி, தனக்கு மட்டுமே சொந்தம் என்னும் தன் எண்ணத்தை அலட்சியப்படுத்துகிறாள் என்னும் கோபம் மறுபுறம்.

வெளித்தோற்றத்தில், பொருத்தமான தம்பதியரைப் போல இருந்தாலும், இவர்களுக்குள்ளாக, எத்தனைப் மனத்தாங்கல்கள்..? பனிப் போர்கள்..? எத்தனை நெஞ்சுவரை வந்து அடக்கப்பட்டு, அடைக்கப்பட்டுள்ள குமுறல்கள்..?

போன மே மாதம், ஒருநாள் மாலை நேரம், வேலையிலிருந்து வீடு திரும்பி கொண்டிருக்கிறாள் கார்குழலி.

ஆழ்வார்பேட்டையில் இருக்கும் தன் வீட்டுக்கு ஜெமினி முக்கிலிருக்கும் அலுவலகத்திலிருந்து, கதீட்ரல் சாலை வழியாக கார்குழலி, மதியம் நடந்த 'டிசைன் மீட்டிங்கைப்' பற்றி சிந்தனையில் ஆழ்ந்துகொண்டே தன் காரை ஓட்டிக்கொண்டே வர, ஸ்டெல்லா மேரீஸ் அருகில் திடீரென்று, 'ஸ்க்ரீச்'சிட்டு நிறுத்தினாள்..

மனம் எங்கோ இருந்தாலும், கண்கள் சாலையில் இருந்ததால், எதிரே வந்த '•போர்ட் ஐகான்' தன் காரை உரசும் அருகில் இருப்பதை கணநேரத்தில் ஊகித்து ப்ரேக் போட்டதில்தான் 'ஸ்க்ரீச்'. எளிதில் கோபப்படாத கார்குழலிக்கு, ஏகப்பட்ட எரிச்சல்.. கோபம்..! காரை விட்டு இறங்கி, நாலு வார்த்தைகள் சூடாக பேசிவிடுவது என்ற தீர்மானத்தோடு இறங்கியவளுக்கு, எதிரில் வந்த காரிலிருந்து அதே தீர்மானத்தோடு இறங்கிய ஆளைக் கண்டதும், ஆச்சரியம்..துக்கம்..சந்தோஷம்..!

எதிர்காரிலிருந்து இறங்கிய ஆளுக்கும்... துக்கம் நீங்கலாக மற்ற இரண்டும் இருந்ததை, அவன் கண்களும், அகண்டு நீண்ட அவன் வாயும் சொல்லின.

"ஹே ஜெயந்த்"..நீ எப்படிடா இங்க..? ஸாரி.. நீங்க எப்படி..." என்று தடுமாறினாள் கார்குழலி..

"கார்குழலி... நீ எப்படி இங்க..! யூ.எஸ்-ஸிலிருந்து எப்ப வந்த..? ஸச் எ ப்ளஸென்ட் ஸர்ப்ரைஸ்..! சரி.. சரி.. நடு ரோட்டில இருந்து காரை எடுத்துருவோம் வா... ஹேய்..காரைத்திருப்பி, உட்லண்ட்ஸ் வரைக்கும் வரமுடியுமா..? கொஞ்சம் கா•பி குடிச்சிண்டே பேச டைம் இருக்குமா..?".....

மூச்சுவிடாமல் பேசும் அழகிலிருந்து இவர் இன்னும் மாறவில்லையே என்று எண்ணிக்கொண்டே, "ஜெயந்த்...இத்தன வருஷம் கழிச்சு உங்களப் பாக்கறதில ரொம்ப சந்தோஷமா இருக்கு...! ஆனா.. நான் ரொம்ப அவசரமா போயிண்டிருக்கேன்..! 6.30 மணிக்கு, என் பொண்ணை டான்ஸ் க்ளாசுக்குக் கூட்டிண்டு போகணும்..' உங்க டெலிபோன் நம்பரக் கொடுங்களேன்.. நான் நாளைக்கு கூப்பிடறேன்...", கார்குழலி குரலில் அவசரத்தைக் காட்டினாள்...

"வேணாம் வேணி.. உன் நம்பர நீ குடு.. நானே உன்னக் கூப்பிடறேன்.. நம்ப கடைசியாப் பாக்கும் போது, இதோ கூப்பிடறேன்னு சொல்லிட்டு, கூப்பிடவே..ல்லியே நீ..!

கிண்டலும், அதே சமயம் குரலில் வருத்தத்துடனும் ஜெயந்த் சொன்னதை உணர்ந்தாலும், ஒரு தளர்வான புன்னகையை மட்டும் பதிலாக உதிர்த்துவிட்டு, "சாரி.. ஜெயந்த்.. அது ஒரு கதை..! உனக்கு சொன்னாப் புரியாது.. ப்ளீஸ்.. என்னோட ஆபீஸ் நம்பரை எடுத்துக்கோ..! நாளைக்கு, என் லன்ச் டைம்ல கூப்பிடு..! இவ்வளவு நாள் கழிச்சுப் பாக்கறோம்.. ! ஆனா, அவசரமா ஓட வேண்டியிருக்கு.. ப்ளீஸ்.. நாளைக்கு கண்டிப்பா கூப்பிடு" என்று நம்பரைச் சொல்லிவிட்டு, அவசரமாகக் காரில் ஏறி காரைக் கிளப்பினாள் வேணி...

அவள் கார் சென்ற திக்கைப் வெறித்துப்பார்த்து கொண்டிருந்த ஜெயந்த்.. பின்னால் நிற்கும் கார் கூட்டத்தின் காதைப் பிளக்கும் ஹார்ன்களின் சத்தத்தால், சுய நினைவுக்கு வந்து தன் காரை நோக்கி நகர்ந்தான்...

மறுநாள், லன்ச் டைம் எப்போது வரும் என்று காத்திருந்து, சரியாக 12.30 மணிக்கு, டெலிபோன் டயலில் கார்குழலியின் எண்களைச் சுற்றி, ரிசீவரைக் காதில் வைத்துக்கொண்டே, ஒரு நெடியமூச்சுடனும், உடம்பு பரபரப்புடனும், மறுமுனையின் குரலுக்கு காத்திருந்த அந்த விநாடிகள் மிகவும் மெதுவாக நகர்ந்தன.

"திஸ் ஈஸ் கார் ஹியர்... ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ..?" வருவித்துக் கொண்ட அமெரிக்க உச்சரிப்பு தூக்கலாக இருந்தாலும், ஜெயந்த்துக்கு, கண்டுபிடிப்பது கஷ்டமாக இல்லை.

"என்ன கார்குழலி..? ஆக்ஸென்ட் எல்லாம் பலமாயிருக்கு? நான் தான் ஜெயந்த், அதுக்குள்ள லன்ச் டேட்-ஐ மறந்தாச்சா..?"...நான் எப்ப உன்னப் பாக்கலாம்..?

ஜெயந்த்.. நான் உட்லண்ட்சுக்கு லன்ச்சுக்கு போகலாம்னு இருக்கேன்.. உன்னால வரமுடியுமா..? நீ எங்க இருக்க..?

ஹேய்.. நான் ரொம்ப தூரமில்ல.. இங்கத்தான்.. ஹாடோஸ் ரோட்டிலதான்.. 'ஐ வில் பீ தேர் இன் •பி•ப்டீன் மினிட்ஸ்... வெய்ட் பண்ணமுடியுமா..?'

சிறிது நேரத்துக்குப் பின் கார்குழலியின் கம்பெனி லாபியில் பிரசன்னமான கார்குழலியும், ஜெயந்தும், காரில் ஏறி, ட்ரைவ்-இன் உட்லண்ஸ்-ஐ நோக்கிச் செல்லும் வழியில்...

"ஸாரி.. ஜெயந்த், கொஞ்சம், ப்ரபோஸல் அனுப்பவேண்டிய அவசரத்தில, டைம் போனதையே கவனிக்கல..!. ஸோ.. உட்லண்ட்ஸ் பரவாயில்லையா..?"

முகத்தில் இரண்டு கையையும் வைத்துக்கொண்டே, தலையை ஒரு பக்கமாக சாய்த்துக் கொண்டே கேட்ட கார்குழலியையே பார்த்துக்கொண்டிருந்த ஜெயந்த்,

'வேற எங்க போகறது கார்குழலி..? நீதான், காலில வெந்நீர் கொட்டிண்டா மாதிரி, இரண்டு மணிக்குள் போகணுங்கறயே..! இப்பவே மணி ஓண்ணாகிறது.. சாப்பிட்டுட்டு போகறதுக்குத்தான் டைம் சரியாக இருக்கும்...உட்லண்ஸே போகலாம்..'

உட்லண்ஸில் இறங்கி இரண்டு தக்காளி பாத்தும், காபியும் ஆர்டர் செய்துவிட்டு, பெருமூச்சு வாங்கிக் கொண்டு, கார்குழலியைப் பார்த்து... கொஞ்சம் கூட நேரத்தை கடத்தாமல், பளிச்சென்று கேட்டுவிட்டான்..!

'சொல்லு... கார்குழலி.. எங்க இருந்த இத்தன நாளா..? அப்படி, கான்டாக்ட் கூட பண்ணமுடியாத அளவுக்கு என்ன நிர்பந்தம்..? கடைசீயா நம்ப பாத்து, பேசி பத்து வருஷம் இருக்குமா..? உன்னால எப்படி இந்தமாதிரி இருக்க முடிஞ்சுது..?'... ஜெயந்த் எப்போதும் போல சரமாரியாக கேட்டுக்கொண்டே போக...

'டேபிளில் மேல் தன் கைகளை வைத்துக் கொண்டு, அவற்றையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த கார்குழலி... நிமிர்ந்து ஜெயந்தைப் பார்த்தாள்... அவள் கண்களில் நீர் பூத்திருந்தது...!

'ஹேய்.. ஜெயந்த் ஸாரியா..! உன்னக் கூப்பிட முடியாதபடி நிர்பந்தம்...! அவருக்கு அவ்வளவா பிடிக்கலை, அப்போது....! இப்பவும், பெரிசா மாறல்ல..! அவருக்குன்னு ஒரு சின்ன வட்டம் இருக்கு ஜெயந்த்... அதில அவருடைய உறவுகள், அவருடைய பெண், தவிர நான் மட்டும்தான், ரொம்பப் போனா.. என்னுடைய அப்பாவும் அம்மாவும் சேர்த்தி... என்னோட பழைய நண்பர்கள், என்னோட 'கஸின்கள்' கூட அந்த வட்டத்துக்குள்ள வரமுடியாது.. வரக்கூடாது...!

என் கல்யாணத்துக்கு அப்புறம் நாம் வெறும் நண்பர்களாகத்தான் பழகினாலும், அது அவரால தாங்கமுடியலய்யா..! நான் என்ன பண்ணியிருக்க முடியும்...? நான் உன்ன (நேற்றைய மரியாதை ஒருமைக்கு மாறிவிட்டது, ஜெயந்துக்கு சரியாகப் பட்டது..!) அப்புறம் கூப்பிடறேன்னு சொன்னதுக்கப்பறம் கூப்பிடாம போனதுக்கும் காரணம் அதான் ஜெயந்த்.. நாம கடைசியா பார்த்த அன்னிக்கு, நாம சிரிச்சி பேசினது அவருக்கு சுத்தமா ரசிக்கல..! வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் ஒரே 'லாங் •பேஸ்'.. முகத்தத் தொங்க போட்டுகிட்டு ஒருவாரம் சரியாக்கூட பேசாம, கண்ணாலேயே அடிச்சிருக்கார்..

நானும், கல்யாணமான புதிசானதினாலே..அதத் தாங்காம, என்னுடைய அம்மாகிட்ட சொல்லி அழுதப்போ, எங்கம்மா என்னத்தான் திட்டினா..! உன்னையும் சேத்துத்தான்..! எனக்குத் தாங்கல ஜெயந்த்...அதனாலத்தான் உன்ன கூப்பிடல...என்னால நீ எதுக்கு அவமானப் படணும்..? திட்டு வாங்கணும்..? உன்ன ஏன் மத்தவா ஏதாவது சொல்லணும்.. எங்கம்மாவாகவே இருந்தா கூட..? சொல்லிவிட்டு, ஒரு சிறு கேவலுடன், யாரும் பார்த்துவிடக் கூடாதே என்று, கண்ணைத் துடைத்துக் கொண்டாள்...!

மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்த ஜெயந்த், அவள் கண்ணைத் துடைப்பதைப் பார்த்ததும் பதறிப்போய், "ஹேய்.. குழலி...என்ன இது.. ப்ளீஸ்..! ரொம்ப சாரிம்மா..! ஐ ஷ¤ன்ட் ஹேவ் ஆஸ்க்ட் யூ..!முட்டாள்தனமா அந்த கேள்விய கேட்டிருக்கக் கூடாது.. வெரி ஸாரி டியர்..! " என்று கரிசனத்தோடு சொன்னவன், சற்று நேரம் அவள் கண்களையே ஊடுறுவிப் பார்ர்துவிட்டு,...மிகவும் கனத்த மனதோடு, "அப்போ.....நான்.... உன்ன இப்ப பாக்கறது கூட தப்புதான்னு இப்ப நினைக்கிறேன்.." என்று சொல்லி நிறுத்தினான்...!

"அப்படியெல்லாம் இல்ல ஜெயந்த்...நானும் உன்னப் பாத்து பேசணும்னுதான் ஆசைப் பட்டு இங்க வந்திருக்கேன் ஜெயந்த்..! நீ கூட என்னை, மத்த எல்லாரையும் போலத்தான் நினச்சிருப்ப இல்லையா..?.. நான் சொல்றது, உனக்கு முழுசா ஒத்துக்கும்படியாக இருக்கோ.. இல்லையோ..! உண்மை இதுதான்...! பக்கத்திலேயே இருந்து, உன்னப் பாத்து,நானும், என்னப் பாத்து நீயும் வேதனப் படவேணாம்னுதான்.. நானே கத்திரிச்சிட்டேன் ஜெயந்த்... நீ இப்பவாவது, என்ன புரிஞ்சிப்பன்னு, நினைக்கிறேன்...இத உன்கிட்ட எப்பவாவது சொல்லணும்னு நினச்சேன்... சொல்லி, உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு ..." பேசிக்கொண்டே இருந்த குழலியை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஜெயந்த்...!

"இந்த பத்து வருஷங்கள் எனக்கு ஒரு தாய்ங்கற கவுரவத்தக் கொடுத்திருக்கு.. ஊரும் ரொம்ப மாறிப் போயிட்டிருக்கு..! இன்னிக்கு நாம இங்க பாத்து பேசறது யாருக்கும் தப்பாவும் படாது.. பட்டாலும், அதை ஹேன்ட்ல் பண்ணக்கூடிய மனோபலம் எனக்கும் இருக்கு...! ஷ்யாமும்.. கொஞ்ச மாறியிருக்கார்ன்னு நினைக்கிறேன்.. அப்படியே இல்லைன்னாலும்.. முன்னே மாதிரி முகத்தை தொங்கப்போட்டுக்க மாட்டார்.."

ஷ்யாமை அவள் விட்டுக்கொடுக்காமல் பேசினாலும், அதில் உண்மை இல்லை என்பது, ஜெயந்துக்கு உடனே புரிந்துவிட்டது,..

ஜெயந்த் அவளை நேராகப் பார்த்து... "லுக் ஹியர் குழலி...நானும் உன் வாழ்க்கையிலேயிருந்து விலகி இருக்கணும்னுதான், உன்னைக் கூப்பிடாம இருந்தேன்..நிறைய சமயங்கள்ள போன் கிட்டப் போய், உன்ன கூப்பிட்டு கொஞ்ச நேரம் பேசலாமேன்னு தோணும்.. ஏதோ ஒரு •பால்ஸ் ப்ரைட்.. தவிர ஒர் ஊகம்.. எதுக்காகவோ என்ன நீ அவாய்ட் பண்ணறயோன்னு..! உன் •ப்ரண்ட் மாலா சொல்லித்தான் தெரியும், நீ அமெரிக்கா போனது கூட..! அவளப் பாக்கறப்போதெல்லாம், உன்னப் பத்தி விசாரிப்பேன்..! கொஞ்சநாளா நானும் அவளப் பாக்கல.. அதானலத்தான் நீ ஊருக்கு திரும்பி வந்ததுகூடத் தெரியாது..! கிடக்கட்டும்..நீ எப்ப திரும்பி வந்த குழலி? இது என்ன தற்காலிக அரேன்ஞ்மென்டா..? திரும்பி அமெரிக்கா போயிடுவியா..?"

குழலி, சிறிது லேசானப் புன்னகையுடன்.. இல்ல ஜெயந்த்.. பெர்மனென்டாத்தான் வந்துட்டோம்..அவருக்கும் இங்கயே நல்ல வேலை.. எனக்கும் நல்லவேலை.. எங்களுக்கு இருக்கறதோ ஒரே பொண்ணு.. அவரோட அப்பா அம்மாவுக்கும் வயசாகிகிட்டே வருதே..! இதனாலத் திரும்பி போகவேண்டாம்ன்னு நினச்சுதான் திரும்பி வந்திருக்கோம்..ஷ்யாமிடத்திலேயும், நிறைய சேன்ஞ் பாக்கறேன்.. அவரோட இந்த பத்து வருட அமெரிக்க வாசம், கொஞ்சம் அவரையும் மாத்தியிருக்கு.. அட்லீஸ்ட்.. அப்படீன்னு தான் நான் நினைக்கிறேன்..!

ஜெயந்த் முகத்தில் 'ஷ்யாமைப்' பற்றி ஏன் இரண்டாவது முறையும், நான் கேட்காமலேயே சொல்லுகிறாள் என்னும் கேள்விக்குறி அப்பட்டமாகத் தெரிந்தது..குழலி அவசர அவசரமாக...

'ஜெயந்த்.. நான் என்னப்பத்தியேப் பேசிக்கிட்டிருக்கேன்.. உன்னப்பத்தி ஒண்ணுமே கேக்கலியே..! நீ எப்படி இருக்கே..? எப்ப கல்யாணம் பண்ணிகிட்டே..? குழந்தைகள் எத்தனை..? உன்னோட வொய்•ப் எப்படி..? உன்னமாதிரியே நிமிஷத்துக்கு முன்னூறு கேள்விகளா..?".. அடுக்கிக்கொண்டே போன குழலியைக் கையமர்த்தி..

"குழலி.. நீ எனக்கில்லன்னு ஆனதுக்கு அப்புறம்.. கொஞ்ச நாள் கல்யாணமே வேண்டாம்னுதான் இருந்தேன்.. அப்பத்தான்.. பார்வதி எங்க ஆபீஸிலே அகௌண்ட்ஸ் டிபார்ட்மென்ட்லே இன்டர்னல் ஆடிட்டரா சேர்ந்தா..! ரொம்ப ரிசர்வ்ட் டைப்.. ரொம்ப பேச மாட்டா.....ஒரு நாள் ஆபீஸ் விட்டு வீட்டுக்குப் போகும்போது, பஸ் ஸ்டாப்பில நின்னுகிட்டிருந்தவகிட்ட காரை நிறுத்தி, அவ வீடு போகற வழியிலே இருந்தா ட்ராப் பண்ணிடறேன்னு சொல்லி, ஆரம்பிச்ச பரிச்சயம், லன்ச், அவ வீட்டில ஒரு நாள் டின்னர்..அப்படின்னு வளர்ந்து, ஒரு நாள் அவளே.. என் கிட்ட, 'ஐ லவ் யூ' ன்னு சொல்லும் படியா ஆயிடுத்து..

குலம், கோத்திரமெல்லாம் பொறுத்தமாக இருக்கவே.. என்னோட வீட்டிலேயும் ரொம்ப அப்ஜெக்ட் பண்ணல.. உனக்குக் கல்யாணம் ஆகி ஒண்ணரை வருஷத்துக்கெல்லாம் எனக்கும் கல்யாணம் ஆயிடுத்து..

எனக்கு என் மேலேயே ஆச்சரியம். அவ்வளவு சீக்கிரமா உன்னை என் நினப்பிலே இருந்து எப்ப, எப்படி தூக்கி எறிஞ்சேன்..? அவ்வளவு சலன புத்திக்காரனா நான்..? நான் உன் உருவத்தத்தான் காதலிச்சேனா..? நான் என்ன பண்ணியிருக்கணும்..? தேவதாஸ் மாதிரி தாடி வளத்துண்டு, லொக் லொக்னு இருமி செத்திருக்கணுமா..? நான் இப்படி ஒன்ன மறந்து கல்யாணம் செஞ்சிக்கறது சரிதானா..? இப்படி ஒரே குழப்பங்கள்..

அதே சமயம்.. உன் மேலே கொஞ்சம் கோபம், வருத்தமெல்லாம் கூட இருந்தது..! எவ்வளவு சுலபமா உன்னாலே நம்ப பழகினதையும், நம்மோட காதலையும் மறக்க முடிஞ்சது..? நம்ப ரெண்டு பேரும், அவங்களா பார்த்து செய்யாம, 'லவ்' செய்துட்டோங்கறதுதானே உன்னோட அப்பா அம்மாவுக்கு பெரிய அப்ஜெக்ஷன்..? அது அப்படி என்ன மேனேஜ் பண்ண முடியாத ஒண்ணா..? எனக்கும் எதிர்க்க தைரியம் இல்லை.. உனக்கும், உன்னோட அப்பா அம்மாவை மீறி என்ன கல்யாணம் செஞ்சிக்க மனசில்ல..! எனக்கு நானே சமாதானம் செஞ்சிகிட்டேன்.. தைரியமில்லாமல்.. காதல் செய்தது தவறுன்னு... அதுக்காக எனக்கு தண்டன கொடுத்துக்கறது நியாயம்.. என்னோட அப்பா அம்மா என்னத் தவறு பண்ணினாங்க..? இப்படி, என் வசதிக்கு - வெக்கமில்லாமல் சொல்றேன் குழலி - எனக்குள்ளேயே தர்க்கம் செய்துகொண்டு... ஆட்சேபணை சமாதானங்களைச் செய்து கொண்டு, அந்த கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டேன்..

பண்ணிகிட்ட மூணு மாசத்தில எனக்கும் பாருவுக்கும் எவ்வளவோ வித்தியாசங்கள்னு தெரிஞ்சது..! அவளுக்கு.. நான்.. என்னோட முழு கவனம் எல்லாம் அவள் மேலே மட்டும்தான் இருக்கணும். நான் அவள் ரசிக்கிற விஷயங்களைத்தான் ரசிக்கணும்.. அதுக்கப்பறம் வேற என்ன..? வாழ்க்கை அப்படியே ஓடவேண்டியதுதானே..!

வெறும் கணவன் மனைவின்னா.. விவாகரத்து செய்துடலாம்.. அப்பா, அம்மாவாக வேறு ஆகிட்டோமே..! ஆமாம்.. குழலி...எனக்கு ஒரே பையன்.. 'க்ருஷ்'.. ஆறு வயசு ஆகறது...

திடீரென்று, நேரத்தைப்பார்த்த குழலி, .. "ஜெயந்த்.. சாரி.. டைம் போனதையே கவனிக்கல..!நான் அவசரமாக ஆபீசுக்கு போகணும்.. நீ என்ன ஆபீசிலே நாளைக்கு கூப்பிடேன்..பேசலாம்...'

பேச்சை, மொட்டையாக பாதியில் நிறுத்திவிட்டு, குழலி கிளம்பியது, ஜெயந்துக்கு என்னவோ போல் இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்... "சரி.. நான் ஆபீசில், கூப்பிட்டா உனக்கு தொந்தரவு இல்லையே... ?" அவள்.. "அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லவேண்டும்" என்று எதிர்பார்த்தான்.. அவளும், அவனது எதிர்பார்ப்பை உடைக்கவில்லை..! மெலிதாக புன்னகைத்துவிட்டு, 'செர்ட்டன்லி நாட் டியர்'... என்று சொல்லிவிட்டு காரை நோக்கி நகர்ந்தாள்.. ஜெயந்த் அவளை அலுவலகத்தில் இறக்கி விட்டு, அவள் சொன்ன "டியர்" என்னும் வார்த்தையின் சந்தோஷத்தில் தன் காரை...வீட்டுக்குத்திருப்பினான்..

மறுநாள்.. மதியம் ஒரு இரண்டு மணிவேளையில், குழலியின் டெலிபோன் மணி அடித்தது...! குழலி போனை எடுத்து ஹலோ சொல்வதற்கு முன்னாலேயே...! "குழலி.. நான்தான் ஜெயந்த் பேசறேன்.. ஏதாவது முக்கியமான வேலையில் இருக்கியா..?" என்று கேட்கவும், குழலி.. "இல்லை ஜெயந்த்.... ஆறு மணிக்குத் தான் மீட்டிங் இருக்கு.... என்ன எப்படி இருக்கே..? எல்லா சுமையும் இறக்கி வச்ச மாதிரி மனசு லேசா இருக்கு இல்ல... உன்கிட்ட பேசினது ரொம்ப சந்தோஷம் ஜெயந்த்.."..

குழலி, ஆபிஸை விட்டு வெளியே, உட்லன்ட்ஸ் வரைக்கும் வரமுடியுமா, கா•பி குடிக்க..? அப்படியே கொஞ்ச நேரம் பேசலாமே..! டைம் இருந்தா..

"ஜெயந்த்..ப்ளீஸ்.. நோ •பார்மாலிட்டீஸ்.., இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல நான் அங்கே இருக்கேன்."

அடுத்த இருபது நிமிஷத்திலே, உட்லன்ட்ஸ் டிரைவ்-இன்னில், கூட்டமில்லாத பகுதியில் ஜெயந்தும், குழலியும் கா•பிக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு.. தங்கள் நாற்காலிகளில் சாய்ந்து உட்கார்ந்தார்கள்..

"குழலி.. உன்கிட்ட ஒண்ணு சொன்னா.. நீ கோவிச்சுப்பியா..?" - ஜெயந்த்.. ஒரு பட படப்புடன் கேட்டான்..

"சொல்லு ஜெயந்த்..! என்னிடத்தில என்ன •பார்மாலிட்டி உனக்கு..?"

"நான் கேக்கறது, உனக்குப் பிடிக்கலேன்னா, அல்லது, ஒத்துவராதுன்னு தோணித்துன்னா, நீ மறுத்துடலாம்.." எனக்கு வருத்தமா இருக்காது... உண்மையில வருத்தமாகத்தான் இருக்கும்..! ஆனா, அதைத் தாங்கிக்கிற பக்குவம் இருக்குன்னு நினைக்கிறேன்! - ஜெயந்த்..தட்டித்தடுமாறி சொல்லி முடிக்கவும்...

"ஜெயந்த்.. ப்ளீஸ்.. சுத்தி வளைக்காம சொல்லேன்..!" - குழலி குரலில் பரிவான கடுமையைக் காட்டினாள்.

"இல்ல குழலி.. எனக்கு, உன்னோட 'நார்மலான ப்ரண்ட்ஷிப்' மறுபடியும் வேணும் குழலி.. முன்னப்போல இல்லேன்னாலும்.. மாசத்துக்கு ஒருதடவையாவது, உன் கூட ஒருமணி நேரமாவது பேசணும் குழலி..! உன்னோட, தற்போதைய நிலையில, உனக்கு அது சம்மதமா இருக்குமான்னு தெரியல..! " ஜெயந்த் குரலில் ஏக்கம் கொஞ்சம் ஏற்றமாகத் தொனித்தது..! அவனுக்கே எதனால் இது அவசியம் என்று புரியவில்லை,,! காரண காரியங்கள் யோசிக்கும் நிலையிலும் அவனில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது..

அங்கே நிலவிய, சிறிது நேர மௌனம், ஜெயந்துக்கு, என்னவோ செய்தது..

குழலியின் ஒரு நெடிய பெருமூச்சு, அந்த மெளனத்தை விரட்டியது.

"ஜெயந்த், என்னோட எண்ணத்தைதான் நீயும் சொல்லியிருக்க..நேத்து உன்னைப் பாத்து, பேசிட்டு வந்ததுக்கப்புறம்... என்னவோ பழைய நினைவுகள் எல்லாம் மறுபடியும்... எனக்கே என்னப் புரியல ஜெயந்த்...உன்னப்பாத்து அடிக்கடி பேசணும், மறுபடியும் நல்ல நண்பர்களா இருக்கணும்னு ஆசையா இருக்கு...ஆனால் எனக்கு கொஞ்சம் பயமாவும் இருக்கு ஜெயந்த்.. ! நமக்கு கல்யாணம் ஆகி, குழந்தைகள், என் கணவர், உன் மனைவி என்று ஆன பிறகு.. அவர்களோட உணர்வுக்கள நாம மதிக்கணும் இல்லையா..? உலகத்தைப் பத்தி எனக்கு கவலை இல்ல ஜெயந்த்.. நம்ப நெருங்கிய உறவுகளைப் பத்திதான் கவலை, பயம் எல்லாம்.. உன் மனவிக்கு, இந்த நட்பு சம்மதமா இருக்குமா..? ஷ்யாமுக்கு.. என்று நிறுத்தினாள் குழலி.

அவளும் அவள் வசம் இல்லை என்பதை அவளின் முகமும், அதில் தெரிந்த குழப்பமும் தெரிவித்தன..!

"என்ன குழலி..? நீதான்.. ஷ்யாம்கூட இப்பல்லாம் மாறிட்டதா சொன்னியே..? இப்பகூட நம்ப நட்பை தப்பா எடுத்துப்பார்ன்னு நீ நினைக்கிற..?" - ஜெயந்த், அவளுடைய வாக்குமூலத்தையே சுட்டிக்காட்டினான், குரலில் குறும்போடு..

"ஜெயந்த்.. உண்மைய சொல்லணும்னா.. எனக்கு நிச்சயமாத் தெரியல்லேன்னுதான் சொல்லணும்..! அமெரிக்க வாசம், பத்துவருட தாம்பத்தியம் எல்லாம், என்மேலேயும், எங்க உறவின் மேலேயும் அவருக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கணும்..." குழலியின் சந்தேகத்தோடு கூடிய முற்றுப் புள்ளி, ஜெயந்தின் புருவத்தை உயர்த்தியது..

அது முற்றுப்புள்ளியல்ல.. மேலும் தொடர்வதற்கு முன்பாக, இறுக்கம் நிறைந்த தற்காலிகமான நிறுத்தம்...!

குழலி தொடர்ந்தாள்...

"ஜெயந்த்.. நம்மோட கல்யாண அமைப்புல, இரண்டு பேர் சேர்ந்து வாழறதுல நிறைய கட்டாயங்கள் இருக்கு. நம்ம பெண்களுக்கு, பொதுவாக, கல்வியறிவோ, சுயமா வேல செய்து சம்பாதித்து, சொந்தக் காலில் நிற்கக் கூடிய திறமை இல்லாத நாட்களிலே, கணவனுக்குக் கட்டுப்பட்டு, 'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்'னு சொல்லி அவங்களையே சமாதானப் படுத்திகிட்டு, கணவனுடைய கயமைகளையெல்லாம், கண்ணீரிலே கரைச்சிட்டு, குங்குமத்தோடயும், பூவோடவும் போய் சேருவோம்னு வாழ்ந்த காலமிருந்தது...

இன்றைய கால கட்டத்திலே நிலமை அப்படி இல்ல.. ஸொசைட்டிலே, மத்திய அல்லது மேல் மட்டத்தில இருக்கவங்க மத்தியிலே, கல்யாணம் பண்ணிக்கிட்ட இரண்டு பேர், ஏறக்குறைய, ஒரேவிதமான படிப்பு, உத்யோகத் தகுதியோடு இருக்காங்க..! அப்படி இல்லேன்னாலும் கூட, இரண்டு பேருக்குமே, சுயமா சிந்திக்கக்கூடிய திறமை இருக்கு.,..சுயமான விருப்பு வெறுப்புகள் இருக்கு...அவங்க பலபேரை கல்யாணத்துக்கு முன்னும், பின்னும் பார்த்து, பழகக்கூடிய சூழ்நிலைகள் இருக்கு.! தனக்கு வாய்திருப்பதையும், வெளியில் இருப்பதையும் 'கம்பேர்' செய்து பார்க்கத் தோணுவது, மனித மனசுக்கு இயல்பா இருக்கறதுதானே..! அது நகை நட்டாக இருந்தாலும் சரி, கார், வீடாக இருந்தாலும் சரி..! தன்னிறைவோட, கிடைச்சது இவ்வளவுதான்னு சமாதானப்படுத்திக்காம, நாம் உயர்வுன்னு நினைக்கிறத வேண்டறதும், அது கிடைக்கறதுக்காக, பாடு படறதும் இயற்கைதானே...! உயர்வானதுங்கறதுனால மட்டுமல்ல, இது நமக்கு பொருத்தமானதுங்கறதுனாலேயும் ஆசை படறதும் சரிதானே...! இதை இந்தக்கால பெண்களாகட்டும், ஆண்களாகட்டும், தங்களுடைய கணவன் அல்லது மனைவி விஷயத்திலும் செய்யலாமில்லையா?.... பெரும்பாலானவங்க செய்யவிரும்பறாங்க.. சிலபேர் செய்யறாங்க..ஜெயந்த்..."

ஜெயந்த் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.. குழலியின் சிந்தைனையோட்டமும், சிதைவடையாமல் வரும் வார்த்தைப் பிரவாகமும், அவன் புருவங்களை உயர்த்தின..!

ஜெயந்துடனான கடந்த இரண்டு சந்திப்புகளில், அவள் மனம் சிறிது சஞ்சலப்பட்டிருப்பது உண்மை..! அடுத்து அவள் பேசப்போவது, அறிவின் முதிர்ச்சியில் விளைந்ததா, அல்லது, அவளுடைய தற்போதைய நிலைமைக்கு அவளே தேடிக்கொள்ளும் சமாதான விளக்கங்களா..? குழலி தொடர்ந்தாள்...

"ஜெயந்த்.. ஆச்சரியமா இருக்கா..? நான் கணவன்-மனைவி உறவு என்கிற சமூக அமைப்பை உடைச்சிட்டு, வாழ்நாள் முழுவதும் இருப்பதைவிட உயர்ந்தது எது என்று அலையணும்னு சொல்லவில்லை.. ஆனால், பெரும்பாலான ஆண்கள், இந்த தங்களுக்கு மட்டுமேயான நியாயம் என்று நினைக்கிறார்கள்..

மாற்றானை மனதில் நினத்தாலே ஒழுக்கம் தவறிய குற்ற மனப்பான்மையைத்தானே நம் சமூகம் பெண்களுக்குள் தலைமுறை தலைமுறையாக விதைத்து, வேர் ஊன்றச் செய்திருக்கிறது?..! தினசரிகளிலும், மற்ற பத்திரிக்கைகளிலும், சினிமாக்களிலும், கற்பழிக்கப் பட்டப் பெண், கற்பிழந்தவள் என்றெல்லாம் வருவது போல, ஆண்களைப் பற்றி வந்திருப்பதைப் பார்த்திருக்கிறாயா..? கேள்விப் பட்டிருக்கிறாயா..? ஏதோ, கற்புங்கறது.. பெண்களுக்கு மட்டுமேயான குணம் மாதிரி..!

இந்தமாதிரி கேள்விகளெல்லாம் மனசுல எழுந்தாலும், சமூகத்துக்கு இன்னும் பயப்பட வேண்டியிருக்கே ஜெயந்த்..! அந்நிய புருஷனோட நட்பாகூட தைரியமா பழகமுடியலயே..! நம்ப நட்பை புரிந்துகொள்ளக் கூடிய பக்குவம், ஷ்யாமுக்கு இப்பகூட இருக்குமான்னு சந்தேகம்தான்!.. முன்னேமாதிரி, வெடுக்கென்று ஏதாவது சொல்லாவிட்டாலும், மெளனமாகவே என் நெஞ்சை சுடுவது ஷ்யாமுக்கு சுலபம் ஜெயந்த்..!

கல்யாணம், குடும்பம், குழந்தைகள் என்ற கட்டுப்பாட்டு கோப்பு ஒருபுறம், இதெல்லாம் இரண்டாம் பட்சம், தனி மனித மனசின் சந்தோஷங்கள், கட்டுகள் இல்லாத சுதந்திரம் என்று வளர்ந்து வரும் மனப்பான்மை மறுபுறம்.. இந்த இரவும் இல்லாத, பகலும் இல்லாத, சந்தியா காலத்தில்தான் என்னைப் போன்ற பெண்கள் இருக்கோம் ஜெயந்த்.."

"குழலி.. எனக்கு புரியறது குழலி...

ஏன் ஜெயந்த், உன்ன ஒண்ணு கேட்கிறேன்.. கற்புங்கறது என்ன ஜெயந்த்...? தெரியுமா உனக்கு? - குழலியில் கேள்விக்குப் பின்னால், அவள் எந்த பதிலை எதிர்பார்க்கிறாள் என்பது ஜெயந்துக்கு நிச்சயமாகத் தெரியவில்லை..!

"குழலி.. கற்புங்கறது.. ஆண், பெண் இரண்டு பேருக்கும் பொதுவான ஒண்றுங்கறத நான் மட்டுமில்ல... இந்த காலத்துல படிச்ச நிறைய ஆண்கள் ஒத்துக்கறாங்க குழலி..! நடைமுறைல, தங்களப் பொறுத்தவரைக்கும் கடைபிடிக்கறது.. அவங்க அவங்க மனசாட்சிக்கு மட்டுமே தெரியும்..! கற்புங்கறது.. ஒழுக்க நெறி.. ஒரு ஆணும், பெண்ணும், தங்களை ஒருவொருக்கொருவர் ஒப்படைச்சிக்கிட்ட பிறகு, அந்த கட்டில இருந்து விலகாமல்.. தங்களுக்குள்ள உண்மையா இருக்கறதுதானே.. குழலி..!".. அவளின் ஆமோதிப்பினை ஆவலோடு எதிர் பார்த்தான் ஜெயந்த்..!

குழலி....அவனை கூர்ந்து பார்த்துக்கொண்டே, "நீ சொல்றது சரிதான் ஜெயந்த்.. ஔவையார் என்ன சொல்லியிருக்காங்கத் தெரியுமா..? கற்பெனப்படுவது சொற்திறம்பாமை... ஒருத்தருக்கு கொடுத்த வாக்கை மீறாமல் இருப்பதுதான் கற்புதான்.. இதுக்கு, ஒரு பழைய தமிழ் பண்டிதரோட அரை வேக்காட்டு விளக்கம் ஓன்றை படிச்சேன்.. அதுல, 'கற்பு எனப்படுவது, பெண்கள், கணவன் சொல்லுக்கு மாறி நடவாமல், அவன் வழி நடப்பதுவாம்' என்று விளக்கத்தைப் பார்த்து, எனக்கு ஒரே ஆச்சரியம்.! ஔவை என்பவள் பெண் புலவி, அதிலும், மிகவும் அறிவார்ந்தவள்.. கேள்வி வழிக் கதைகள்படி, திருமணம் செய்யாமலே முதிய பிராயத்தை அடைந்து, தமிழுக்கே தன்னை கொடுத்தவள்.! அப்படிப்பட்ட அவள் எப்படி, பெண்குலத்தின் தன்மானத்தை அடகு வைத்தாற் போல எழுதியிருக்க முடியும்..?"

நம்முடைய கல்யாண முறைகளில், கன்னிகாதானம், பாணிக்கிரஹணம், மற்றும் சப்தபதி போன்ற சடங்குகள் மூலமாக, ஆண், பெண் இருவரும், வாழ்கை ஓடத்தின் சம துடுப்புதாரர்களாக, ஒப்பந்தம் செய்துக்கறாங்க,, இல்லையா..? இது போல, ஒருவொருக்கொருவர், பறிமாறிக்கொள்ளும், உறுதிச் மொழி சொற்களிலிருந்து, மாறாமல் இருப்பதுதான் கற்பாக இருக்கமுடியும்.. இது திருமண விஷயத்தில் மட்டுமல்ல ஜெயந்த்.. பொதுவாக, அன்றாட வாழ்க்கையில, நாம செய்யும் தொழிலில், மற்றவர்களுடனான பறிமாற்றங்களில், சொன்ன சொல் மாறாம நடந்துக்கறதுதான் கற்பு ஜெயந்த்..! - குழலியின்.. பட்டிமன்ற பேச்சாளரின் உத்வேகத்தோடு கூடிய சொற்பொழிவுக்கு, மீண்டும் தற்காலிக நிறுத்தம்..

"குழலி.. நான் உன்னோட சிந்தனையை, 'அனாலிஸிஸை' ரொம்ப அப்ரிஷியேட் பண்றேன்.. ஆனா.. நீ என்ன சொல்ல வரேங்கறது.. எனக்குப் புரியல..! - ஜெயந்த், நிஜமாக குழப்பத்தோடு புருவங்களை உயர்த்தினான்..

"நாம் இரண்டுபேரும், ஒருத்தர ஒருத்தர் விரும்பறப்ப, இரண்டு பேரும், ஒருத்தருக்கொருத்தர்.. எவ்வளவு உத்தரவாதம் கொடுத்துக்கிட்டோம்..? எந்த தடங்கல் வந்தாலும், ஒருத்தருக்கொருத்தர் உதவியா இருப்போம்.. கடைசீ மூச்சு வரைக்கும், உனக்காக நானும், எனக்காக நீயும்னு வாழ்வோம், எது வேண்டுமானாலும் செய்வோம்..!..காதலின் உத்வேகம், எல்லோரையும் வசனகர்த்தாக்களாக ஆக்கிவிடுகிறது..!" - சற்று வெறுப்பு கலந்த கேலியுடன் மெலிதாக சிரித்தாள்..

மீண்டும் சிறிது, பெருமூச்சுடன், "நாம் இரண்டு பேருமே, சுலபத்தில, கொஞ்சம் கூட எதிர்ப்பு இல்லாம, நம்மை பெற்றவர்களோட விருப்பதுக்கு உட்பட்டு, கல்யாணமும் செய்துகொண்டு, நமக்குள் செய்துகிட்ட உறுதி வார்த்தைகளை தொலச்சிட்டமே! எனக்கு உன்கிட்ட சொல்றதில தயக்கமோ, வெக்கமோ இல்ல ஜெயந்த்.. இப்போதும், என் மனசு, உனக்காக துடிக்கறது..ஏங்கறது.. ஆனால் கூடவே.. ஷ்யாமோட நெருப்பின் முன்னால் செய்த சத்தியமும், பறிமாறிக்கொள்ளப்பட்ட உறுதி மொழிகளும், என்னுடை கற்பை கேலி செய்வது போலிருக்கே..! எனக்குள்ளே பெரிய போராட்டமா இருக்கே ஜெயந்த்.. நிச்சயமாச் சொல்றேன் ஜெயந்த்.. எனக்கு ஷ்யாமுகிட்ட, பயம் கலந்த மரியாதை இருக்கு.. என்னோட குழந்தைக்கு தந்தை என்ற ஸ்தானம் இருக்கு.. அதையும் மீறி அன்பு இருக்கான்னு தெரியலே.. இத்தன வருஷமா, பிரிஞ்சிருந்தும், உன்னைப் பார்த்த உடனே வந்த சந்தோஷம், உன்னிடத்தில பேசும் போது இருக்கக்கூடிய சுதந்திரம், எதுமே அவரிடத்தில இருந்ததில்ல...எனக்கு ஆச்சரியமாக இருக்கு.. என் உள் மனசுக்கு இவ்வளவு பிடிவாதமா..?"

இந்த சமயத்தில் ஜெயந்தும், குழலியும்.. இந்த பேச்சின் நோக்கையும், போக்கையும் புரிந்துகொள்ளாவிட்டாலும்.. அவர்கள் மீண்டும் மீண்டும் சந்திக்கப்போவது நிச்சயமென்று தோன்றுகிறது.. அவர்கள் இருவருமே புத்திசாலிகள்.. எதையுமே தீர ஆய்பவர்கள்.. இவர்களது, இப்போதைய உரையாடலைக் கூட...இவர்களது சந்திப்புகளும், பேச்சுகளும் இவர்களை எங்கே கொண்டு செல்லுமென்று நினைக்கிறீர்கள்..?

இவர்களது கடந்தகாலக் காதலை இவர்கள் மீண்டும் உயிர்பித்துக் கொள்ளுதல் அவசியம்தானா..?
அல்லது, இருவருமே, தங்களுக்கு முழுவதுமாக ஈடுபாடில்லாத, தங்கள் மணவாழ்க்கையிலே தொடர்ந்து, சமூகத்தின் பார்வைக்காகவும், அல்லது, அவர்களின் குழந்தைகள் அல்லது நெருங்கிய உறவுகளுக்காக, இருக்கவேண்டுமா..? என்ன செய்யவேண்டும்..

எழுத்தாளனாக, நான் கூட இதற்கு ஒரு முடிவை வழங்க முடியாது.. ஏனென்றால்.. இது தனிப்பட்ட இருவரின் சொந்த விஷயம்.. குழலி, ஜெயந்த், ஷ்யாம், பார்வதி தொடர்பான உறவுப் பின்னல்கள் போல, எத்தனையோ சிக்கலான, சிக்கிக்கொண்டு வெளிவரமுடியாமல் தவிக்கும் உறவுகள்.. ஒவ்வொன்றின், நிகழ் களங்களும், சூழ் நிலைகளும், கட்டாயங்களும் வெவ்வேறானவை.. அந்தந்த சூழ்நிலைகள், உறவுச் சங்கிலிகளின் வலிமை, அது இன்மை போன்ற பல சங்கதிகள் ஒவ்வொரு ஜெயந்தையும், குழலியையும் அவர்களுக்கு ஏதுவான, ஏதுவாக இல்லாவிட்டாலும், சூழ்நிலை வசதியோடு ஒட்டிய முடிவுகளை எடுக்க வைக்கும்.. ஆனால் ஒன்று.. காரணமில்லாது காரியமில்லை.. அவர்களின் மற்ற சந்திப்புகள், அமைத்துக்கொண்டவையாக இருந்தாலும், நீண்ட பிரிவுக்கப்புறமான முதல் சந்திப்பு முற்றிலும் தற்செயலானதே.. அந்தக்கணம்.. அவர்கள் உறவின் ஒரு முடிவான முடிவை நோக்கித்தான் அவர்களைச் செலுத்தும்..! இல்லையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...