நிச்சயமாக, தமிழ் மொழி, பரந்த அண்டம் உள்ளளவும் வாழும் என்பதில் ஐயமில்லை! ஆனால், அது என்ன “மெல்ல” வாழும்…? மெல்லத் தமிழினி சாகும் என்னும் சலிப்பைவிட இந்த நம்பிக்கை, மகிழ்ச்சிகரமானதுதான்! உற்சாகத்தினை அளிப்பதுதான், ஊக்கத்தைத் தருவதுதான். ஆனால், “மெல்ல அல்லது மெள்ள” என்பதன் பொருள் என்ன என்பதைத் தெரிந்துதான் சொல்லியிருக்கிறார்களா?
சைவ சித்தாந்தப் பதிப்பகத்தின், தமிழ் மொழியகராதி (கதிரைவேற் பிள்ளை தொகுத்தது), “மெல்ல” அல்லது “மெள்ள” என்ற சொற்களுக்கு “மிருதுவான” என்னும் பொருளையே கொடுத்துள்ளது. “மிருதுவான” என்கிற சொல் கூட சமஸ்க்ருத மொழி சொல் “ம்ருது” வின் தமிழாக்கமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
இச்சொல்லே திரிந்து தமிழிலே “மெது” என்னும் சொல்லாக ஆளப்படுவதும் உண்டு.
“மெதுவடை” தெரியாதவர்கள் இருக்கமுடியுமா? அல்லது மெல்லியலரைத் தெரியாத கவிஞரும் உண்டா? பெண்டிரை மெல்லினம் என்றதும், அவர்கள் பொதுவாக, மிருதுவானர்கள் என்பதால் தானே? மெது உணவுகளை மென்று தின்பதும், கமர்கட்டு, சீடை, முறுக்குகளையும் கடித்துத் தின்பதும் நாம் அறிந்ததுதானே…
ஆங்கில வார்த்தைகளான “Soft” (ஸாஃப்ட்), “Slow” (ஸ்லோ), இவற்றுக்கிடையே உள்ள வேற்றுமைகூட தெரியாத அளவில்தான் நம்முடைய சொல்லாட்சி இருக்கிறது.
“பைய” சொல் மாற்றாக இருக்குமோ என்றும் பார்த்தேன். இல்லை! அச்சொல்லும், “மெல்ல” என்ற பொருளையே கொண்டுள்ளது. “மந்தம்” என்னும் சொல்லே ஓரளவுக்கு பொருந்திவரும் போல தோன்றுகிறது.
வேகமாக உலுக்கும் சண்ட மாருதத்திற்கு பதிலாக, மந்தமாக வீசும் மாருதம் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், மந்தம் என்னும் சொல்லில், “சோம்பல்” வாடை வீசுகிறதே..! சே..! தமிழில் சொல்லறிவு அதிகம் இல்லாமைக்கு வெட்கப்படுகிறேன்..
தமிழ் மெல்ல வாழ்வதைவிட வலிவுடன் வாழ்வதையே விரும்புகிறேன்!
ஆனால் மாற்றுச் சொல் தெரியாத வரை, “மெல்ல அல்லது மெள்ள” என்றுதான் எழுதவேண்டியிருக்கும். மெல்ல, மெதுவாக, மெள்ள எல்லாம் மாறும்வரை.
ஆனால், பொது மக்கள் வழக்கிலே, புழக்கத்துக்கு வந்துவிட்ட, ‘அஸால்ட்”, “பின்னி பெடல் எடுத்தல்”, “ஃப்லீங்”, “தோடா”, போன்ற, பிரபல ஊடகங்களின் ஊக்கதோடு தினமும் அரங்கேறும் மொழி அத்துமீறல்களை விட இவை ஒத்துக்கொள்ளக் கூடியவையே
தமிழில் எழுத எத்தனையோ செய்திகளும், பொருள்களும் உள்ளன. இன்று முதல், தினமும் எழுத விருப்பம்.. இறைவன் திருவுளம் எப்படியோ…!