ஜூலை 20, 2019

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாமதமாக வந்தாலும் தமிழென்ன, கசக்கவா போகிறது?


அமரேசன் எழிற்கோல
……அழகதனைக் காண்பதற்கு
எமக்கென்றோ அருள்புரிவான்
……என்றேங்கிக் காத்திருந்தேன்
நிமலனந்தக் குறையென்னில்
……நீளாமல் நிறையளித்தான்
தமதுருவை தண்பனியாய்
……சமைந்திருக்கும் பேரழகைக்                    8
காட்டியுளம் கனியவைத்தான்.
……கண்களில்நீர் பெருகவைத்தான்
கூட்டியருள் கோடிசென்மக்
……குறையாவும் குலைத்தென்னை
வாட்டியவை, வாடிவிடும்
……வகையன்றோ செய்துவிட்டான்
ஆட்டுவிப்பும் அவன்செயலே
……அருளளியும் அவன்செயலே!                    16
வரப்பணித்து வரந்தந்த
……வல்லானை மனத்திருத்தி
கரங்குவித்துச் சிரங்கவித்தேன்
……கழல்பணிந்து கண்மூடி
அரனேயென் அமரேசா!
……ஆக்கியிந்த அண்டத்தைப்
புரக்கின்ற போதமுதே
……புரமெரித்தப் புண்ணியனே!                     24
சிந்துநதி தழுவியோடும்
……திருமேனி அழகோடு
எந்தையன்னை உமைக்குந்தன்
……ஏகாந்த உபதேசம்
தந்தஞான சத்குருவே!
……சரணமுன்றன் தாளிணையே!
சிந்தையிலே நின்றுநீயே
……சீர்செய்வாய் சிவபரனே!                          32
பணிபூண்ட பரமவுனை
……பாடிநிதம் பரவிடப்பா
வணியெனக்கு வழங்கிடுவாய்
……வண்டமிழாய் வந்தருள்வாய்
அணிபிறையா ஆடலீசா
……அகமேவு மமுதீசா
தணிந்தென்றன் தாபமெல்லாம்
……தளையறுத்தாள் வாயெனையே               36


அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...