ஜூன் 24, 2019

ஜூன் 24 - கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள்...


ஜூன் 24 - கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள்... ( ஜூன் 23, 2019-ல் எழுதியது)

கவியரசன், கவிப்பேரரசன், எல்லாமே என்றும் கண்ணதாசன்தான். இவர் எழுதிய பழைய திரைப்பட பாடல்களைக் கேட்கும்போதெல்லாம்தான், அந்த திரையுலகப் பொன்னாட்களை நினைக்கும்போதெல்லாம், "வசந்தக் காலம் வருமோ" என்னும் கவிஞர் சுரதாவின் பாடல் வரிகளே நினைவுக்கு வருகின்றன.

வண்ணவண்ண சொற்குவியல்
....வகைவகையாய்ப் பாடல்கள்
எண்ணியென்றும் உள்மகிழும்
....இன்பவெழில் சித்திரங்கள்
பண்ணிசைந்த பாப்பூக்கள்
....பார்முழுதும் பவனிவரும்
கண்ணதாசா உன்பெயரை
....காலமெலாம் சொல்லிநிற்கும்


புண்ணியமாய் பாரதத்தாய்ப்
....புதல்வனாகப் பெற்றெடுத்த,
கண்ணியனே கண்ணதாசா
....கருத்தினிலே நின்றநேசா
மண்ணுலகில் வளர்தமிழில்
....மாரியெனப் பொழிந்தவனே
விண்ணுலகும் வியக்கவங்கு
….வியன்கவிகள் செய்கிறாயோ?

நினைவினிலே நித்தியமாய்
....நின்றுளத்தில் நெகிழவைக்கும்,
அனவைரையும் அன்றாடம்
....ஆனந்தக் கடலாழ்த்தும்,
தினையளவுக் கருத்தினையும்
....திறமையாயுன் சொல்லழகில்
பனையளவு உயர்த்திவிடும்,
....பாங்குண்டே உன்றமிழில்

அருத்தமுள்ள இந்துமத
....ஆழமான அனுபவங்கள்
கருத்தொடுநீ சிந்தித்து
....கச்சிதமாய் எழுதிவைத்தாய்!
விருப்போடு படித்தறிந்து
....வியந்தவர்கள் எத்துணப்பேர்!
குருவாக உளக்குன்றின்
....கொடுமுடியில் தங்கிவிட்டாய்!

நறும்பாகோ நாவொடுதான்!
.... நறுமணமோ நாசியொடாம்!
பெறுகின்ற செவியமுதும்
....பேறான கண்ணொளியும்
அறுகின்ற பிறவியிதில்
....அணுத்துளியே ஆயினுன்றன்
சிறுகவியும் ஜெயித்திருக்கும்
.... செகயிறுதி நாள்வரையில்!

கண்ணதாச! கல்வியினால்
....கனிந்ததல்ல உன்பாட்டு
எண்ணத்தின் எழுச்சியிலே
....ஏற்றிவைத்த எழிற்சுடராம்!
புண்ணியமாய் இவ்வுயிரில்
....புகுந்துன்றன் புலமையின்பம்
உண்ணுகின்ற உவப்பளித்தாய்
....உள்ளளவும் உனைநினைப்பேன்!

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...