ஆகஸ்ட் 30, 2018

கணையாழி காவியம் (சாகுந்தலம்)


நாட்டிய நாடக வடிவில், காளிதாசனின் சாகுந்தல காவியம்! 
(நாட்டிய நாடக வடிவைக் கருதி சுருக்கமாகச் செய்யப்பட்டது)


ஓம் ஸ்ரீகணபதயே நம:


கணையாழி

நாட்டை:

பல்லவி:
ஒங்கார நாதா ஸ்ரீவிக்னராஜா
பாங்காக பாடநீ பதம் தருவாயே

அனுபல்லவி:
நீங்காமல் நெஞ்சில் நீயே நிறைந்தாய்
தீங்கிலா தெழுதிடும் திறனருள் புரிவாய்

சரணம்:
தீங்கனிப் பாகாம் தெய்வத் தமிழினில்
ஓங்குசா குந்தல உயர்கா வியமதை
ஈங்கெழு திடவே எளியன் துணிந்தேன்!
தாங்கும் தயவே தாள்சர ணடைந்தேன்.

Scene 1: (parallel in the split stage – On one side Indra Sabha with Indra and later Menaka, and on ther 

இந்திரசபை: இந்திரன், மேனகா

விஸ்வாமித்திரர் தவக்கோலம் (ஓம் நம ஶிவாய) மந்திரம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.. அப்போது வெப்பம் மெல்ல மெல்ல வளர்ந்து மேடையில் இந்திர சபையை நெருங்கும்போது இந்திரன் நடுங்குகிறான்.. இந்திரலோகமே நடுங்குகிறது... அவனுடைய சிம்ஹாசனமும் நடுங்குகிறது.. அவனுடைய கிரீடம் தலையிலிருந்து நழுவுகிறது... கையைத் தட்டி மேனகையைக் கூப்பிடவும், மேனகை ஓடோடி வருகிறாள்...

இந்திரன்:  அடாணா - கண்டசாபு:

வசிட்டமுனி வாக்காலே 
 வரமுற்ற பிரம்மரிஷி
நசிக்கின்ற தவத்தாலே
 நடுநடுங்கச் செய்கிறார்!
பசிதாகம் காணாமல்
  படுத்துறக்கம் கொள்ளாமல்
வசிக்கும்நம் உலகம்தம்
  வசமாக்க முனைகின்றார்

அழகான மேனகையே
  அவணுடனே நீசென்று
பழகியவுன் கலைத்திறனால்
  பாழ்செய்க அவர்தவத்தை!
விழலுக்கு இறைநீராய்
  வீணாகிப் போகவுந்தன்
நிழல்பட்டு கருகட்டும்!
  நின்னடியில் வீழட்டும்!

விசுவத்தை ஆளுமெண்ணம்
  வீரரிஷி கொள்வாரோ?
பொசுக்கியதை போக்காமல்
  போயொதுங்கிக் கொள்வேனோ?
விசுவாமித் திரரிஷியை
   வெல்கின்ற பெருமையதே
கசுநீக்கும்! கட்டளைகேள்!
   கடிதுசென்று காத்திடுக!  (கசு- வருத்தம்)


மேனகை: பூர்விகல்யாணி - ஆதி

பல்லவி:
அமரா பதியே! அடியாள் மேனகை
உமக்கே சரணம்! உம்சொல் வேதம்! (அமரா)

அனுபல்லவி:
இமையோர் அரங்கின் எழில்மங் கையரில்
அமைவாய் எனையே ஆக்ஞை செய்தீர் (அமரா)

சரணம்:
இமைக்கும் பொழுதில் இறங்கி பூமியில்
உமக்கே தவத்தால் உளைச்சல் கொடுப்பார்
தமைநான் விரகில் தவிக்கச் செய்வேன்!
அமைவீர்! அடைந்தே ஆறுதல் கொள்வீர்


பூமியில்.. விஸ்வாமித்திரர் தவம் செய்யுமிடம்.

மோஹனம்: மிஸ்ரசாபு:

பல்லவி: 
மோஹமானேன் மேனகைநான்
வேதைதீர்ப்பாய் விஸ்வாமித்ரா

உன்மேல் மோகம் கொண்டேன், மேனகையாகிய நான்.. என்னுடைய (காதல்) துன்பத்தை நீ தீர்த்திடுவாய் விஸ்வாமித்திரா!

அனுபல்லவி:
தேசமங்கை காதல்கொண்டே
தேடிவந்தேன் தேவனுன்னை (மோஹ)

ஒளிவீசும் பெண் (நான்) காதல் வயப்பட்டு, உன்னைத் தேடி வந்தேன் என்னுடைய தேவனே

சரணம் 1:
பாதமுதலிந்த பாவிதேகமு
பாதைகொண்டே பரிதவிக்கும்
நீதமோநீ நிஷ்டையில்நின்று
சீதம்செய்யாமல் இருப்பதிங்கு (மோஹ)

பாதம் முதற்கொண்டு இந்த் பாவியின் தேகம் (விரக) உபாதை கொண்டே பரிதவிக்கிறது. முறையோ? நீ நிஷ்டையில் நின்று, என்னை குளிர்விக்காமல், இங்கு, இவ்வாறு இருப்பது!

சரணம் 2:
வேதசாஸ்த்ர வித்தைதேர்ந்து
மோதமாதவன் தேவரிஷியால்
பேதமற்றவன் பிரமரிஷியென
ஓதமுற்ற உனதுசோபையில் ((மோஹ)

வேத ஶாஸ்த்ரங்கள் முதலாக எல்லா வித்தைகளையும் கற்று தேர்ந்து, ஞான, பெருந் தவத்தானாகிய தேவ ரிஷியால் (வசிஷ்டரால்), எவ்வித பேதமுமில்லாத சுத்த ஞானமாகிய பரம்பொருளை உணர்ந்த இவன், பிரம்ஹரிஷி என்ற பெருமையுற்ற உனது தேக காந்தியில், பேரழகில் (மோஹமானேன்)

விஸ்வாமித்திரர், வசந்தமே வந்தார்போல் வாசமலர்களின் நறுமணமும், இன்னிசையும், பெண் நடனமாடும் ஓசையும் கேட்டு, மெல்ல கண் விழிக்கிறார்.. (அவர் வாய் இன்னும் சிவநாமத்தை உச்சரிக்கிறது.. மெல்ல மெல்ல அந்நாமம் தேய்ந்து, அவருடை பார்வை சுற்றுபுறத்தை நோட்டம் விட்டு, அந்த அழகிலே மயங்கி, சற்றே தள்ளி வெட்கத்துடன் நின்றிருக்கும் அழகான அப்சரஸ் மேனகையில் விழுகிறது! அவருடைய கண்கள் ஆச்சரியத்தில் மலர்கின்றன, முகத்தில் ஒரு பரவசம் பரவுகிறது.. மெல்ல நிட்டை நிலையிலிருந்து கலைந்து எழுந்து வந்து, அவளைப் பார்க்கிறார்.. அவள், அவரைச் சுற்றி நடனமாடுகிறாள்.. அவர் மெல்ல மோகவயப்பட்டு, அவளுடன் ஆடுகிறார்.. ஆட்டத்தின் முடிவில், மறைவுக்குச் சென்று கூடுகிறார்கள்! மறைவிலேயே இருக்கும்போது, காலம் நகர்கிறது.. மீண்டும் மறைவிலிருந்து வெளிப்படும்போது, மேனகைக் கையில் ஒரு குழந்தை இருக்கிறது.. அதோடு பாடிக்கொண்டே வருகையில், விஸ்வாமித்திரருக்கு, தன்னுடைய தவம் கலைந்து, தான் முழு குடும்பஸ்தனாக ஆகிவிட்டது பொறி தட்டுகிறது.. ஞான திருஷ்டியில், அது இந்திரனின் வஞ்சகம் என்பது தெரிகிறது.. அப்போது மேனகையைக் குழந்தையோடு விட்டுவிட்டு மீண்டும் தவம் செய்யப்போய்விடுகிறார்.. மேனகையும், வருத்தத்துடன் குழந்தையுடன் கண்வர் ஆஸ்ரமத்துக்கு அருகில் ஒரு மரத்தடியில் குழந்தையை விட்டுவிட்டு, தேவலோகம் சென்று விடுகிறாள்.. அக்குழந்தையை இரண்டு சாகுந்தலப் பறவைகள் பார்த்துக்கொள்கின்றன. அவ்வழியே வரும் கண்வர், அக்குழந்தையைக் கண்டெடுத்து, ஆஸ்ரமத்துக்குக் கொண்டுவந்து, அவளுக்கு சகுந்தலை என்று பெயரிட்டு தன் துணைவியாரிடம் கொடுக்கிறார்

கன்னட: ஆதி

பல்லவி:
அகங்கொள்ள என்முன்னே ஆடுமாரணங்கே!
செகமீது யாருந்தன் சீருக்கிணையிங்கே!

(என் உள்ளம் கொள்ளை கொள்ளும்படியாக, என் முன்னால் வந்து ஆடுகிற ஆரணங்கே, இப்பூமியில், உன்னுடைய மிகுந்த அழகுக்கு இணையென்று சொல்ல யார் இருக்கிறார்?)

அனுபல்லவி:
தகதகக்கும் தங்கமோவுன் தளிர்மேனி ஒளியே!
உகந்தேன் உனைநானும் உணர்வாயென் அளியே!

(தகதகவென மின்னும் தங்கமோ உன்னுடைய இளம் துளிர் போன்ற உடலின் ஒளியானது? உன்னை நான் மிகவும் விரும்பிவிட்டேன். என்னுடைய அன்பை நீ உணர்வாயாக)

சரணம்:
ககனத்தில் காணாத கவினழகைக் கண்டேன்!
இகத்திலிந்த இன்பத்தின் ஈடில்லை விண்டேன்!
சுகம்தந்து சொக்கவைக்கும் சுந்தரியை உண்டேன்!
முகம்கண்டேன் நான்செய்த முற்றவமாய் கொண்டேன்!

(இந்த அண்டத்தில் எங்குமே காணமுடியாத மிகுந்த எழிலார்ந்த அழகை நான் பார்த்துவிட்டேன். இகத்தில் இந்த இன்பத்திற்கு ஈடாக ஏதும் இல்லையென்று தெரிந்துகொண்டேன். எனக்கு சுகத்தைத் தந்து, என்னை மயங்க வைக்கும் சுந்தர உருவமுள்ள பெண்ணின் (அழகை) நான் உண்டேன்... அவளுடைய முகத்தை நான் கண்டேன்.. அதை நான் முன் பிறவில் செய்த தவமே என்று கொண்டேன்).

மேனகை ஆடுகிறாள்.. விஸ்வாமித்திரரும் அவளுடைய அழகில் மயங்கிப் பின் தொடர.. இருவரும் ஒரு மரத்தின் பின்னால் மறைகின்றனர். இனிய இசை, அவர்கள் இல்லறத்தில் இருப்பதைக் காட்ட, இருவரும் மரத்தின் பின்னாலிருந்து வெளிப்படுகின்றனர்.. அப்போது கையிலொரு பெண்குழந்தை. கொஞ்சிக்கொண்டே வருகின்றனர். விஸ்வாமித்திரர் தவம் புரிந்த இடத்துக்கு வரும்போது, விஸ்வாமித்திரர் முகத்தில் ஒரு மாற்றம், தன் தவம் வீணாய்ப்போன ஏமாற்றம், அதனால் கோபம், அதேசமயத்தில் பிறந்த பெண்குழந்தையையின்மேல் பாசம் என்று உணர்ச்சிகள் மாறி மாறி அலைமோத, மேனகையிடம் தாம் மீண்டும் தவமியற்றச் செல்வதாகச் சொல்லிக் கிளம்புகிறார்.. அப்போது மேனகை குழந்தையை அவரிடத்தில் காட்டி கெஞ்சுகிறாள்.. அவர் அவளை நிராகரித்துச் சென்றுவிட, அவள் குழந்தையை இமயமலைச் சாரலில் மாலினி நதிக்கரையில் விட்டுவிட்டு, இந்திரலோகத்துக்குத் துயரோடு சென்றுவிடுகிறாள். அக்குழந்தையைச் சாகுந்தலப் பறவைகள் அன்போடு பார்த்துக்கொள்ளுகின்றன. அப்போது அவ்வழியாக சீடர்களோடு வரும் கண்வ முனிவர், அக்குழந்தையைக் கையில் எடுத்து, மிகவும் தேவாம்சம் பொருந்திய குழந்தையாக இருப்பதை உணர்ந்து, தன்னுடன் ஆஸ்ரமத்துக்குக் கொணர்ந்து, தன்னுடைய புத்திரியாகவே வளர்க்கிறார்

பைரவி: மிஸ்ரசாபு:

பல்லவி:
மாலினி நதிக்கரையில் மகளிவளை ஈன்று
பாலின்றி பரிதவிக்க
   பண்ணியதாரோ - பாவி
   கண்ணியம் ஈதோ? - ஈசா

அனுபல்லவி:
பார்க்கப்பார்க்க பேரழகும் பாலைப்போலே முகமும்
பாவியளுக்கேனோ 
    பார்வை இற்றதோ? - பெற்றதும்
    ஆர்வம் அற்றதோ? - இன்னும்/இந்த

சரணம்:
சாகுந்தலங்கள் தாயாய் தாமேநின்று காத்ததாலே
சகுந்தலை எனும்நாமம் சாற்றியென் திருமகளாய்
       வாகாய் வளர்ப்பேனே - கட்டிப்
       பாகாய் இனிப்பாளே - இவளை
நோகாமல் நொடிந்திடாமல் நொந்துத் துன்பத்தீத்தழலில்
வேகாமல் சோகத்தென்றும் வீழ்ந்து  துயர்க்கடலில்
       போகாமல் காப்பேனே - அன்பாம்
       போகத்தை அளிப்பேனே!

கண்வர் ஆஸ்ரமத்தில் குழந்தை சகுந்தலை, தவழ்ந்து, நடந்து, வளர்ந்து பெரியவளாகிறாள்.. ஒரு நாள் கண்வர் ஆஸ்ரமத்திலிருக்கும் வனத்திற்குள்ளே பழங்களைச் சேகரிக்கச் சென்றிருக்கும்போது, வனத்திற்கு வேட்டையாட வந்த புரு மன்னன் துஷ்யந்தந்தன், வேட்டையாடி முடிந்து,களைத்து, கண்வர் ஆஸ்ரமத்திற்கருகில் வருகிறான்.. அங்கு வேதகோஷங்களும், பறவைகளின் இசையும் ஒன்றாக, மிகவும் இரமியமாக இருப்பதைக் கண்டு, தேடிக்கொண்டு வருகையில், நடுவிலே கண்வருடைய ஆஸ்ரமத்தைக் காணுகிறான்.. ஆஸ்ரமத்திற்கு வெளியே யாரும் இல்லாமல் இருப்பதைக் கண்டு, “யார் இங்கே” என்று குரல் கொடுக்கவும், ஆஸ்ரமத்துள்ளிருந்து, அழகு மயிலாக சகுந்தலை வெளிப்படுகிறாள். அந்தப் பேரழகைக் கண்ட துஷ்யந்தன், அவளை நெருங்கி அவள் யாரென்று கேட்கவும், அவள் தான், “கண்வ மஷரிஷியின்” புத்திரி என்கிறாள். கடுந்தவ நியமம் கொண்ட கண்வருக்குக் பெண் என்பது எவ்வாறு பொருந்தும் என்று துஷ்யந்தன் கேட்க, அவள் தான் பிறந்த வரலாற்றைக் கூறுகிறாள்.. அவள் மீது மையல் கொண்ட துஷ்யந்தன், அவளைக் கந்தர்வ விவாஹம் செய்துகொள்வதாகக் கூறூகிறான்.. முதலில் மறுத்தாலும், அவள் உடன்பட்டு, விவாஹமும் நடந்து, அவர்கள் மண உறவிலும் ஈடுபடுகிறார்கள்..துஷ்யந்தன் முனிவர் வந்தால் என்ன சொல்வாரோ, எப்படி சபிப்பாரோ என்று பயந்து, ஆஸ்ரமத்தை விட்டு விரைந்து வெளியேற நினைத்து, சகுந்தலையிடன், அவளுக்க்கு உரிய மரியாதைகளுடன், அவளை தன்னுடைய ராஜ்ஜியத்துக்கு அழைத்துக்கொள்வதாகக் கூறி, தன்னுடைய பெயர் பொறித்த கணையாழியைக் கொடுத்துவிட்டு செல்கிறான்..

வசந்தா:
துஷ்யந்தன் தனக்குள்ளாக:
உயிரோவியமாய் என்முனம்வந்து 
 ஒயிலெனநிற்கும் எழிலிவள்யாரோ?
மயிலழகுடைத்தாள் மான்போல்மருளும் 
  மங்கைநல்லாள் மொழிதருவாளோ?

சகுந்தலையை பார்த்து:
மகரிஷிகண்வர் மாதவம்செய்யும் 
  வனக்குடிலிருக்கும் மங்கைநீயாரோ?
அகமழியழகே! ஆரணங்கேயான் 
  ஆவல்கொண்டேன்நீ அருந்துணையாக !

த்விஜாவந்தி:
சகுந்தலை தனக்குள்ளாக:
விழிகளில்நுழைந்து உள்ளம்நிறைந்த 
  வீரம்செறியிவ் வேந்தர்யாரோ>
அழிந்துளமுருகி ஆசைமிகுமென்னை, 
  ஆளவந்தவொரு ஆண்மகனிவரோ?

துஷ்யந்தனைப் பார்த்து:
வனத்தினுள்சென்ற என்தந்தைகண்வர் 
  வந்திடும்மாலை வரையில்நீரும்
மனத்தாலிசைந்து  காத்திருப்பீரே! 
  மணமுறையதுவே எனதுரைபொறுப்பீர்!

துஷ்யந்தன் (கல்யாணி)
வேந்தன்புருகுல துஷ்யந்தனென 
  வீரருலகெனை வியந்தேபோற்றும்!
காந்தருவமெனும் திருமணமுறையில் 
  கடிமணம்புரிதல் அரசருக்கேற்பே!
பாந்தமுனக்கும் பெருந்தவசீலர் 
  பார்புகழ்கௌசிகர் குலவிளக்கன்றே!
ஏந்திழையாளே! ஏழையுன்காதலை 
  இறைஞ்சிடுமென்னை ஏற்பதுன்கடனே!

சகுந்தலை: (கல்யாணி)
நானிலம்போற்றும் வேந்தேநீவிர் 
  நன்றேசொன்னீர் நானுமிசைந்தேன்!
நானிலம்வானும் சாட்சியென்றாக 
  நாமிருவருமே இணவோம்வுறவாய்!
கானிலமன்றி காதமுமறியேன்! 
  காதலிலென்றென் கருத்தில்கலந்தீர்!
ஊனிலேகலந்து உயிரினைவிதைத்தீர் 
  உத்தமரேநீர் உமைநான்பிறியேன்!

துஷ்யந்தன் (கரஹரப்ரியா)

சகுந்தலையேயென் சகதர்மிணியே! 
  சற்றும்மறக்கும் சாத்தியமில்லை!
தகுந்தமுறையிலே யானிவண்வருவேன் 
  தந்தைகண்வர் தயையோடுன்னை
புகுமகம்தனக்கு போகவுமெனக்கு 
  பொருந்தும்விதத்தில் ஆவனசெய்வார்!
உகுத்திடல்வேண்டா உத்தமிகண்ணீர்! 
  உன்நினைவிக்கீ தோர்கணையாழி!

கண்வர் காட்டிலிருந்து வந்ததும், சகுந்தலை அவரிடம் நடந்ததை விவரிக்க, அவர், அவளைத் தேற்றி, ராஜரிஷியின் பெண்ணுக்கு ஏற்ற மணமே நடந்ததாகக் கூறுகிறார். நாட்கள் கடந்தன. சகுந்தலை கருவுற்று, பின்னால் பரதன் என்று பெயர் பெற்று புகழுடன் விளங்கப்போகிற அரசகுமரனை ஈன்றெடுக்கிறாள். அவனுக்குப் பனிரெண்டு வயதாயிருக்கும்போது, பலசாலியாகவும், பராக்கிரமசாலியாகவும் இருப்பதைக் கண்டு கண்வர் அவனை “ஸர்வதமனன்” என்று பெயரிட்டு அழைக்கலானார். 

ஒருநாள்... கண்வர் ஆஸ்ரமத்தை விட்டுச் சென்றிருக்கையில், துர்வாஸ முனிவர் அங்கு வருகை தர, அங்கே அமர்ந்திருந்த சகுந்தலை அவர் பலமுறைக் கூப்பிட்டும், துஷ்யந்தன் நினைவில் மூழ்கியிருந்ததால், அவர் குரலை செவிமடுக்காமல் இருக்கிறாள். துர்வாஸர் பெருங்கோபமுற்று...”நீ எவன் நினைவால் ஓர் அதிதியின் குரலைக் கேட்கமுடியாதவளாகப் போனாயோ, அவன் உனக்கு அடையாளமாகக் கொடுத்த கணையாழி தொலைந்து, அவன் தெரிந்துகொள்ள முடியாதவாறு, அவன் நினைவிலிருந்து நீங்கக் கடவாய்” என்று சபித்துவிட்டார்.. திடுக்குற்று சுயநினைவுக்கு வந்த சகுந்தலை, பலவாறாக அழுதுபுலம்பி அவரிடம் வேண்ட, அவர் கோபம் தணிந்து, அவன் என்று உனக்குக் கொடுத்த கணையாழியை அவன் மீண்டும் காணும் நாள் அவனுக்கு உன் நினைவு வர, நீங்கள் ஒன்று சேருவீர்கள் என்று உரைத்து, நீங்கினார்... பின்பொருநாள், நதிக்கரையில் நீரில் அளைந்து விளையாடும்போது, அவள் கணையாழி அவள் விரலிலிருந்து நழுவி நீரில் விழுந்து நீர் போக்கில் அடித்துச் செல்லப்படுகிறது... சகுந்தலை செய்வதறியா துக்கத்தில் மூழ்குகிறாள்...

துர்வாஸர்: (ரஞ்சனி)
கண்வமுனிவரின் தவக்குடிலினிலே
 களைப்பாறிடவே கருதிவந்துவிட்டேன்!
கண்களில்யாரும் காண்கிலேனேயான்
 கடுந்தாகமாற்றக் கனிபவருளரோ?

மெல்ல ஆஸ்ரமத்துக்குள் நுழைய அங்கே சகுந்தலை கனவினிலே மூழ்கியிருக்கிறாள், கணையாழியைக் கண்டபடி.

துர்வாஸர்.. (ஸுமனேஸ ரஞ்சனி)

பெண்ணேயென்னை துர்வாஸனென்பர்
 பெருந்தவனென்றே விண்ணோறறிவர்
விண்ணுவுமெந்தன் வீரியசினத்தின்
 விளைபயனதனை விதந்தறிவானே!

சகுந்தலை இன்னும் கனவினிலே மூழ்கியிருக்கிறாள்!

சகுந்தலை: (ஸுபபந்துவராளி)
காத்திருப்பாயே கடிதில்வருவேனென்ற
 கண்ணாளர்வாக்கை கணத்தில்மறந்தாரோ?
பூத்திவண்பெற்றேன் புருவம்ஸக்கொழுந்தை
  புருஷோத்தமரே போய்வரவில்லையே!
கணையாழியினைக் காண்கின்றபோதெலாம்
  கண்களருவியாய் கலங்கிப்பெருகுதே
அணைத்தன்றுநீரே ஆறுதல்கூறியென்னை
  அளித்தவுறுதிகள் அத்தனையும்பொய்யோ?

துர்வாஸர்: (ரேவதி)
பெண்ணேயுனது பேதமையாலே
  பெருந்தவசியென்றன் பிழைகொண்டாயே!
மண்ணாளுமொரு மாவேந்தன்மேல்
  மயக்கத்தினாலுன் மனதிழந்தாயே!
எண்ணியேங்குமுனை அவன்மறப்பானே
 இதுவென்சாபம் இட்டேனுனக்கே!
கண்ணாளன்தந்த கணையாழியைநீ
 காணாதொழியப் போக்கிடுவாயே!

சகுந்தலை: (ரேவதி)
பெருந்தவச் சீலரே பேதையைப் பொறுப்பீர்
அருளினை செய்வீர் அபலையேன் யெனக்கும்
கருத்தழிந் தேன்நான் கடமையை மறந்தேன்
கருணை முனிவரே காட்டிடுவீர் தயையே!

துர்வாஸர்: (சஹானா)
கண்வரின் புதல்வியே கடுங்கோபத் தால்யான்
புண்ணியம் போக்கும் புன்செயற் புரிந்தேன்.
எண்ணிடில் இளம்பெண் இன்பக் கனவிலே
கண்ணியம் மற்றே கலைத்திடத் துணிந்தேன்

வருந்துதல் வேண்டா! வாய்க்கும் நேரமும்
வருமொரு நாளில் வானவர் அருளால்
புருகோன் உளத்தில் புகுவாய் மீண்டும்
பரதர் தரும்நாள் பகர்கணை யாழியை!

இவ்வாறு சொல்லி துர்வாஸர் கண்வர் ஆஸ்ரமத்தை விட்டு நீங்குகிறார்! பிறகொரு நாள் நதிக்கரையில் நீராடும் சகுந்தலை நீராடுகையில் கணையாழி கைவிரலைவிட்டு நீங்குகிறது.... கதறுகிறாள் சகுந்தலை.. அவளைத் தேற்றி கண்வர், அவள் மகனோடு, புருமன்னன் துஷ்யந்தனைக் காண ஆஸ்ரமத்தில் உள்ள சிலரோடு அனுப்புகிறார்...சகுந்தலை துஷ்யந்தனைக் அரசவையில் கண்டு, தன்னை, காந்தருவ விவாஹம் செய்துகொண்டதை நினைவுறுத்த, அவன் அவளை நிந்தித்து தான் ஒரு போதும் யாரையும் காந்தருவ விவாஹம் செய்தத்தில்லை என்று உறுதியாகக் கூறி, தாம் அவளை வரித்ததற்கு அடையாளம் ஏதேனும் உண்டா என்று வினவுகிறான். சகுந்தலை, கண்களில் நீர் வழிய, தம்முடைய 12 வயது மகனான பரதனும், அரசன் கொடுத்த கணையாழியுமே சாட்சி என்று கூறி, தாம் துரதிர்ஷ்ட வசமாகக் கணையாழியை இழந்துவிட்டதையும் கூறி தம்மை ஏற்குமாறு கேட்க, துஷ்யந்தன் அவளுடைய நடத்தையையே பழித்துத் தூற்றவும், அவள் மனமொடிந்து, அங்கிருந்து நீங்கி கண்வர் ஆஸ்ரமத்துக்கே செல்கிறாள் தன்னுடைய மகனோடு...
  


சகுந்தலை: (மனோரஞ்சனி)

கண்ணாளர் தந்தகாதல் கணையாழி காணாமல்
பெண்பேதை என்செய்வேன்? - பிழையன்றோ யான்செய்தேன்!
மண்ணாளும் மாமன்னர் மணம்முடித்து சென்றதையே
எண்ணாமல் எனைமறக்க ஏனோநான் இதைச்செய்தேன்!

என்றாலும் இதயத்தில் இடம்தந்தார் உள்ளத்தில்
என்மீது அன்பென்றும் எள்ளளவும் குறைந்திடுமோ?
குன்றாது குறையாது கோமகனார் கொண்டகாதல்
என்றென்றும் நிலைத்திருக்கும் என்றுளமும் சொல்கிறதே!

துஷ்யந்தன் நகரைச் சென்றடைந்து, சகுந்தலை, மன்னனை அவனுடைய அரசவையில் தன் மகன் பரதனுடன் சந்திக்கிறாள்.. தன்னை அவன் கண்வர் ஆசிரமத்தில் கந்தர்வ விவாஹம் செய்ததை நினைவுறுத்துகிறாள். அவன் வெகுவாக கோபமுற்று, அவளை நிந்தித்து அனுப்பிவிடுகிறான்...

சகுந்தலை: (தன்யாஸி)

காட்டினில் ஒருநாள் கைபிடித் தென்னை
மீட்டிய வீணையில் மிகுமிசைப் போலே
ஊட்டியும் அன்பினில் உளம்புகுந் தீரே!
கூட்டிய இன்பமும் கொடுத்தவர் நீரே!

அன்பின் விளைந்த அருந்தவப் புதல்வன்
மன்னா உந்தன் மகனாம் பரதன்
என்னில் பிறந்த இம்மக வோடு
என்னையும் ஏற்க இசைந்திடு வீரே

துஷ்யந்தன்: (தேவமனோஹரி)

எங்கோ யாரோ இவனின் தந்தையோ?
இங்கே வந்தே என்மகன் என்பதோ?
சிங்கம் எங்கே சிறுநரி எங்கே?
மங்கை உன்னை மணந்தவன் நானோ?

அங்கம் முழுதும் அனலாய் கொதிக்கப்
பொங்கும் கோபம் பொசுக்கும் உன்னை!
இங்கே நீயும் இன்னொரு கணமும்
தங்கா தொழிவாய் தயையவ் வளவே!

சகுந்தலை: (தோடி)

என்வினை யதனால் ஏற்றேன் சாபம்
கன்மத் தாலுன் கணையா ழிதனை
நன்நீர் வாவியில் நானும் தொலைத்தேன்
மன்னா உன்னால் மாணும் தொலைத்தேன்!

வியக்கும் தவமுனி விசுவா மித்திரன்
நயந்த மகள்யான் நடத்தை பிறழேன்
கயமை இல்லேன் கண்வரின் வளர்ப்பாம்
அயர்ந்தேன் அழுதேன் அகல்வேன் உன்னை!

பரதனோடு, சகுந்தலை அழுதுகொண்டே அரசவையைவிட்டு அகல்கிறாள்.. சிலநாட்கள் கடந்த பின்னர், ஒரு நாள், ஒரு மீனவனும், அவன் மனைவியும் வருகிறார்கள்.. அவர்கள் கடலில் இராஜ முத்திரையுள்ள கணையாழியை ஒரு மீனின் வயிற்றில் கண்டெடுத்ததாகக் கொண்டுவந்து கொடுக்கிறார்கள்.. கணையாழியைக் கண்ட கணத்தில் சகுந்தலையின் சாபம் விலகி, துஷ்யந்தனுக்கு நடந்தவையெல்லாம் நினைவுக்கு வந்து அவன் உடனே மிகவும் வருந்தி, கண்வர் ஆஸ்ரமத்தை நோக்கி ஓடுகிறான்.. அங்கு விளையாடிக்கொண்டிருக்கும் பரதனைக் கண்டு, வாரி அணைத்து உச்சி முகர்ந்து கண்வரைக் கண்டு அவரது அடிபணிந்து தான் செய்த அபசாரத்திற்கு வருந்துகிறான். அவர் அவனை அணைத்து, சகுந்தலையைக் கூப்பிடுகிறார்.. சகுந்தலை குடிலிலிருந்து வெளிப்பட, துஷ்யந்தன், சகுந்தலை இருவரது கண்களும் ஒன்றையொன்று கவ்வி, நிலைபெறுகின்றன.. கண்வரிடம் விடைபெற்று இருவரும் ரதமேறி அவனுடைய தேசத்திற்குச் செல்கிறார்கள்.. பின்னாளில் பரதன் பாரதமே புகழும் பேரரசனாக ஆகின்றான்..

துஷ்யந்தன்: (காபி)

புருவம்ச மன்னன்யான் பொல்லதன செய்தேன்
பெரும்பாவம் செய்துமனைப் பேறதனை இழந்தேன்
திருபோன்ற சகுந்தலையை தேவலோகச் சீரவளைக்
கருதாமல் கடிந்துமனம் காய்ந்திடவும் செய்தேன்

அரசனென்ற ஆணவமா அறியாமை யின்கணமா?
அரவத்தின் நஞ்சாக அவளிடத்தில் பொழிந்தேன்
தரமிழந்த என்னிடத்தில் தயைமீண்டும் கொள்வளோ?
உரமிழந்தேன் உள்ளத்தில்! உடலிதனில் உயிர்மட்டும்!

கண்வருடைய ஆஸ்ரமத்தை அடைகிறான், பதைத்து, தன் மடமையை நொந்துகொண்டு!

துஷ்யந்தன்: (பேஹாக்)

பல்லவி:
கண்டேனே கண்மணியை காதலியென் சகுந்தலையை!

அனுபல்லவி:
கொண்டேனே அளவிலாமல் குழவிபோல் குதூகலம்
அண்டமேயான் அடைந்தார்போல் ஆனந்தம் அதுபலம்!

சரணம்:

தண்டனிட்டேன்  தாளடியில் தவசீலா! கண்வருமை
கண்டதாலே கன்மவினை கழிந்ததய்யே உம்பெருமை
தண்ணெழிலாள் உம்புதல்வி சகுந்தலையாள் எம்திருவை!
கண்ணிமையைப் போலினியான் காத்திடுவேன் என்கடமை!

குருபூர்ணிமை 2018

(முன்னரே எழுதி முகநூலில் இட்ட கவிதை)

கண்ணில் கருணைத் தேக்கும்
  கருத்தில் கசுமலம் நீக்கும்
எண்ணில் இகபர இன்பம்
  எளிதில் கிடைக்க அருளும்
அண்ணல் ஆல்கீழ் அமர்ந்த
  அரனார், தென்பால் நோக்கும்
வண்ணன் திருவருள் ஒன்றே
  மண்ணில் குருவருள் என்பேன்

பேசா திருந்தும் ஞானம்
  பெய்தான் நால்வர்க் கன்றே!
ஈசா! என்றே நாளும்
  ஏத்தித் துதிக்க எம்மில்
ஆசா பாசம் எல்லாம்
  அறவும் அருள்வான் அவனே!
நேசா எனநெக் குருகி
  நினைவேன் அவன்தாள் மலரே!

காணும் காட்சி யாவும்
  கல்விக் கூடம் ஆகும்
பேணும் அறிவை நன்றாய்
  பெருக்கும் திறமை கண்டீர்
தாணு எனவோர் தணற்றூண்
  தருக்கை அழித்துப் பொசுக்கும்
கோணும் மனப்பே யதனை
  கூத்தில் கொன்று முடிக்கும்

குருவும் அவனே கோதில்
  குணமும் அவனே கோமான்
அருளே நமக்கு வேண்டும்
  அதுவே அறிவைத் தூண்டும்
மருளை அகற்றும் மனத்தில்
  மதியில் மயலும் மயங்கும்
திருவாய் குருவாய் தேசன்
  தினமும் நம்முடன் இருப்பான்

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பேயிக்கு ஓர் அஞ்சலி

முன்பே முகநூலில் இட்ட அஞ்சலி கவிதை இது..!

பாரதத்தாய் பெற்றெடுத்த
  பார்போற்றும் வாஜ்பேயி
நீரதத்தின் நிலையுருவாய்
  நெஞ்சினிலே நிறைந்தவராம்
தீரமிக்க தலைவரென
  திரைகடற்கும் அப்பாலும்
ஆரங்கள் சூட்டுதற்கு
  அயலவரும் அயராத

பன்முகத்துத் திறமைமிக்கார்,
  பாவலர்நல் நாவலரும்!
தன்மையுடன் வெளியுறவும்
  தகைமையுடன் உள்ளுறவும்
கன்மமதே கண்ணெணவும்
  கண்ணியத்தின் காவலனாய்
அன்றுமென்றும் வாழ்ந்திருந்த
  அற்புதமாம் தலைவரவர்!

நற்கரத்தால் துவக்கியபொன்
  நாற்கரமாம் சாலைதிட்டம்!
செற்றலர்க்குச் சிம்மமென
  சீரியபோக் ரான்திட்டம்
சற்றும்நேர் மைகுன்றா
  சாகசமாய் கூட்டாட்சி
முற்றைந்து ஆண்டுகளில்
  முனைந்தமுதற் மூத்தமகன்!

இறப்பென்னும் இயற்கைக்கு
  யாரேதான் விலக்காவர்?
பிறப்பிறப்பின் நடுவினிலே
  பெற்றியுடன் வாழுவதே
சிறப்பான வாழ்வன்றோ?
  சீர்த்தமதி சிந்தனைகள்
திறந்தவொரு புத்தகமாய்
  திகழ்ந்தநல் வாழ்வென்று

இருந்திறப்போர் எத்தனைபேர்
  இவ்வுலகில் எண்குறைவே!
திரும்பிப்பார்த் திவ்வுலகே
  திருவென்னும் அடைமொழிக்கு
பொருத்தமிவர் என்றுரைத்துப்
  போற்றுமொரு சீர்தலைமை!
வருந்தாதீர் வாழுமவர்
  வான்புகழ்வை யத்தென்றும்

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...