பிப்ரவரி 28, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 60

जानीमो जगदीश्वरप्रणयिनि त्वन्मन्दहासप्रभां
श्रीकामाक्षि सरोजिनीमभिनवामेषा यतः सर्वदा
आस्येन्दोरवलोकेन पशुपतेरभ्येति सम्फुल्लतां
तन्द्रालुस्तदभाव एव तनुते तद्वैपरीत्यक्रमम् ६०॥

ஜானீமோ ஜக³தீ³ஶ்வர ப்ரணயினி த்வன் மந்த³ஹாஸ ப்ரபாம்
ஸ்ரீகாமாக்ஷி! ஸரோஜினீமபினவாமேஷா யத: ஸர்வதா³
ஆஸ்யேந்தோ³ரவலோகேன பஶுபதேரப்யேதி ஸம்பு²ல்லதாம்
தந்த்³ராலு: தத³பா ஏவ தனுதே தத்³வைபரீத்யக்ரமம் 60

உலகீசர்க்கினியாளே! காமாக்ஷி! உனது மென்னகை ஒளியை புதிய தாமரைத்தொகுதியாக நினைக்கிறோம். எனெனில் இந்த புன்னகையானது எப்போதும் பசுபதியினுடைய முகமான சந்திரனுடைய பார்வையினால் மலர்ச்சியை அடைகிறது! அது இல்லாத நேரத்தே மடிகொண்டு, மலர்வின்மையை அடைகிறது!

உலகீ சருவப்பே! உன்மென் நகையின் ஒளிபுதிய
சலசத் தொகுதியாய் சங்கையெ மக்காகும்! சந்ததமும்
மலரும் பசுபதி மண்டிலப் பார்வை வதனமதால்;
மலராமல் கூம்பும் மடியிலே காமாட்சீ! மற்றபோதே!

உலகீசர்-ஜகதீசர்; உவப்பு-மனதிற்கினியது; சலசம்-தாமரை; சங்கை-எண்ணம்; மண்டிலம்-சந்திரன்; மடி-சோம்பல்;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)


உலகீசர் உவப்பே! உன் மென்நகையின் ஒளி, புதிய சலசத் தொகுதியாய் சங்கை எமக்காகும்! சந்ததமும் மலரும் பசுபதி மண்டிலப் பார்வை வதனமதால்! மலராமல் கூம்பும் மடியிலே காமாட்சீ! மற்றபோதே!

பிப்ரவரி 27, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 59

सम्भिन्नेव सुपर्वलोकतटिनी वीचीचयैर्यामुनैः
संमिश्रेव शशाङ्कदीप्तिलहरी नीलैर्महानीरदैः
कामाक्षि स्फुरिता तव स्मितरुचिः कालाञ्जनस्पर्धिना
कालिम्ना कचरोचिषां व्यतिकरे कांचिद्दशामश्नुते ५९॥

ஸம்பின்னேவ ஸுபர்வலோகதடினீ வீசீசயைர் யாமுனை:
ஸம்மிஶ்ரேவ ஶஶாங்கதீ³ப்திலஹரீ நீலைர் மஹானீரதை:³
காமாக்ஷி! ஸ்பு²ரிதா தவ ஸ்மிதருசி: காலாஞ்ஜனஸ்பர்தினா
காலிம்னா கசரோசிஷாம் வ்யதிகரே காம்சித்³³ஶாமஶ்னுதே 59

காமாக்ஷி! யமுனையின் அலைக் கூட்டங்களுடன் கலந்த தேவலோக நதியாம் கங்கைபோலும், கரும் பெரும் முகில்களுடன் சேர்ந்த சந்திரனது ஒளிப்பெருக்கினைப் போலவும், வெளிப்படும் உன்புன்னகையின் ஒளி, கருமையுடன் போட்டியிடும் உனது குழற்கதிர்களின் கருமையுடன் இணையும்போது, ஈதென்று கூறவியலாத ஒரு தனித்தன்மையைப் பெறுகிறது.

கருநதி வங்கம் கலந்தவான் ஆறதாம் கங்கைபோலும்
கருமுகில் சேர்ந்த களங்கன் ஒளியலைக் காந்திபோலும்
வருமுன் முறுவல்வாள், மால்பொரு தும்குழற் மாலிணைந்து
ஒருசொல் லொணாத உயர்நிலை, காமாட்சி! உற்றிடுதே!

கருநதி-யமுனை/காளிந்தி; வங்கம்-அலை; வான் ஆறு- தேவநதி; களங்கன் - சந்திரன்; வாள்-ஒளி/காந்தி; மால்-கருமை; பொருது-போட்டியிடும்

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)


கருநதி வங்கம் கலந்த வான் ஆறதாம் கங்கைபோலும், கருமுகில் சேர்ந்த களங்கன் ஒளியலைக் காந்திபோலும், வருமுன் முறுவல் வாள், மால் பொருதும் குழற் மால் இணைந்து, ஒரு சொல்லொணாத உயர்நிலை, காமாட்சி! உற்றிடுதே!

பிப்ரவரி 26, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 58

यन्नाकम्पत कालकूटकबलीकारे चुचुम्बे यद्-
ग्लान्या चक्षुषि रूषितानलशिखे रुद्रस्य तत्तादृशम्
चेतो यत्प्रसभं स्मरज्वरशिखिज्वालेन लेलिह्यते
तत्कामाक्षि तव स्मितांशुकणिकाहेलाभवं प्राभवम् ५८॥

ந்நாகம்பத காலகூட கப³லீகாரே சுசும்பே³ யத்³-
க்³லான்யா சக்ஷுஷி ரூஷிதானல ஶிகே² ருத்³ரஸ்ய தத்தாத்³ருʼஶம்
சேதோ யத் ப்ரஸபம் ஸ்மர ஜ்வர ஶிகி²ஜ்வாலேன லேலிஹ்யதே
தத் காமாக்ஷி தவ ஸ்மிதாம்ஶு கணிகா ஹேலாபவம் ப்ராபவம் 58

காமாக்ஷி! எந்த மனதானது காலகூட நஞ்சருந்தும்போதும் நடுங்கவில்லையோ, எக்கண்கள் நெருப்புக் கொழுந்தால் களைக்கவில்லையோ, அத்தகு உருத்திரனின் மனதும், காமவெப்பமென்னும் தீக்கொழுந்தால் வலிந்து ஆளப்படுவதென்பது உன்னுடைய மந்தகாசக் கதிர்த் துளியின் விளையாட்டால் ஏற்படும் மான்மியமே!

காமாட்சீ!  எவ்வுள்ளம் காலகூ டத்தையுண் காலையுமஞ்
சாமலெக் கண்கள் தணற்கொழுந் தாலும் தகைத்தலுறா
தாமோவவ் வீசனார் தம்முள்ளும் ஆளும் தணற்கொழுந்துன்
பூமென் நகைக்கதிர்ப் பொட்டதன் ஆட்டின்  பொழிலதுவே!

காலகூடம்-கொடிய நஞ்சு; தணற் கொழுந்து - தீக்கொழுந்து;  தகைத்தல்- களைப்புறுதல்; கதிர்-கிரணம்; பொட்டு-துளி; ஆட்டு-விளையாட்டு; பொழில்-கீர்த்தி/பெருமை;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)


காமாட்சீ!  எவ்வுள்ளம் காலகூடத்தை உண்காலையும் அஞ்சாமல், எக்கண்கள் தணற் கொழுந் தாலும் தகைத்தலுறாதாமோ, அவ் வீசனார் தம் உள்ளும் ஆளும் தணற்கொழுந்து உன் பூ மென்நகைக் கதிர்ப் பொட்டதன் ஆட்டின் பொழிலதுவே!

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...