ஜனவரி 31, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 32

कर्मौघाख्यतमःकचाकचिकरान्कामाक्षि संचिन्तये
त्वन्मन्दस्मितरोचिषां त्रिभुवनक्षेमंकरानङ्कुरान्
ये वक्त्रं शिशिरश्रियो विकसितं चन्द्रातपाम्भोरुह-
द्वेषोद्धेषोणचातुरीमिव तिरस्कर्तुं परिष्कुर्वते ३२॥

கர்மௌகாக்²யதம:கசா கசிகரான் காமாக்ஷி ஸம்சிந்தயே
த்வன் மந்த³ஸ்மிதரோசிஷாம் த்ரிபுவன க்ஷேமம் கரானங்குரான்
யே வக்த்ரம் ஶிஶிரஶ்ரியோ விகஸிதம் சந்த்³ராத பாம்போருஹ-
த்³வேஷோத்³தேஷோணசாதுரீமிவ திரஸ்கர்தும் பரிஷ்குர்வதே 32

காமாக்ஷீ! குளிர்ந்த எப்புன்சிரிப்பு, நிலவு, தாமரைகள் மீது இயல்பிலே கொண்டுள்ள பகையை பறைசாற்றுவதை மறைக்க, மலர்ந்த முகத்தை மேலும் மலர்த்திச் செய்கிறதோ, வினைகளாம் இருளை அழித்து, மூவுலகுக்கும் நலந்தருகிறதோ, அதன் துளிர்களை தியானம் செய்கிறேன்.

வினையிருள் மாய்த்து, வியனூழி மூன்றுக்கும் வித்தகஞ்செய்
நினதின் நகையே, நிலாதா மரைமேல் நிறங்குணமாம்
முனைவினைச் சாற்றா வொளித்து, மலர்த்தும் முகத்தைமேலும்!
நினைந்தத் தளிர்நகை, நிட்டையில் காமாட்சீ நிற்பனானே!

மாய்த்து-அழித்து; வியன் ஊழி-வியன் உலகு; வித்தகம்-நன்மை; நிறங்குணம்-இயல்பு; முனைவினை-பகைமை; சாற்றா-கூறாமல்; நிட்டை-தியானம்;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)

வினை இருள் மாய்த்து வியன் ஊழி மூன்றுக்கும் வித்தகஞ்செய், நினது இன் நகையே நிலா, தாமரைமேல் நிறங்குணமாம் முனைவினைச் சாற்றா ஒளித்து மலர்த்தும் முகத்தைமேலும்! நினைந்து அத்தளிர்நகை, நிட்டையில் காமாட்சீ நிற்பன் நானே!

ஜனவரி 30, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 31

चेतः शीतलयन्तु नः पशुपतेरानन्दजीवातवो
नम्राणां नयनाध्वसीमसु शरच्चन्द्रातपोपक्रमाः
संसाराख्यसरोरुहाकरखलीकारे तुषारोत्कराः
कामाक्षि स्मरकीर्तिबीजनिकरास्त्वन्मन्दहासाङ्कुराः ३१॥

சேத: ஶீதலயந்து : பஶுபதேரானந்த³ ஜீவாதவோ
நம்ராணாம் நயனாத்வ ஸீமஸு ஶரச்சந்த்³ராத போபக்ரமா:
ஸம்ஸாராக்²ய ஸரோருஹாகர க²லீகாரே துஷா ரோத்கரா:
காமாக்ஷி ஸ்மர கீர்த்தி பீ³ஜ நிகராஸ்த்வன் மந்த³ ஹாஸாங்குரா: 31

காமாக்ஷீ! பசுபதியின் பேரின்பத்திற்கு உயிர் நிலையானதும், துதிப்போரின் விழிகள் விழுமிடமெல்லாம் சரத்கால நிலவு முளைப்பது போன்றவையும், சம்சாரம் என்னும் தாமரைக் குவியலைக் கருகச் செய்வதில் கடும்பனி போன்றதும், மன்மதனின் புகழை விளைக்கும் வித்துகள் போன்றவையுமான உன்னிளம் புன்னகைத் தளிர்கள் எமதுள்ளம் குளிர்விக்கட்டும்!

பசுபதி யின்பேரின் பத்திற் குயிர்நிலைப் பாங்குமுன்னை
விசைத்துத் துதிப்போர் விழிசெல் லுமிடம் விளைசரத
சசியும்சம் சாரகஞ் சங்கள்தீய்க் கின்றதௌ சாரமும்வேள்
இசைவீயா முன்நகை என்னுள்தண், காமாட்சீ, ஏற்றுகவே

விசைத்து-பற்றுக்கோடாய் கொண்டு; கஞ்சம்-தாமரை; சரத சசி- சரத்கால நிலா; தௌசாரம்-பனி; வேள்-மாரன்; இசை-புகழ்; வீயம்-விதை;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)


பசுபதியின் பேரின்பத்திற்கு உயிர் நிலைப்பாங்கும், உன்னை விசைத்துத் துதிப்போர் விழிசெல்லுமிடம் விளை சரத சசியும், சம்சார கஞ்சங்கள் தீய்க்கின்ற தௌசாரமும் வேள் இசைவீயாம் உன்நகை என்னுள் தண், காமாட்சீ, ஏற்றுகவே!

ஜனவரி 29, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 30

विश्वेषां नयनोत्सवं वितनुतां विद्योततां चन्द्रमा:
विख्यातो मदनान्तकेन मुकुटीमध्ये संमान्यताम्
आः किं जातमनेन हाससुषमामालोक्य कामाक्षि ते
कालङ्कीमवलम्बते खलु दशां कल्माषहीनोऽप्यसौ ३०॥

விஶ்வேஷாம் நயனோத்ஸவம் விதனுதாம் வித்³யோததாம் சந்த்³ரமா:
விக்²யாதோ மத³னாந்தகேன முகுடீமத்யே ஸம்மான்யதாம்
: கிம் ஜாதமனேன ஹாஸ ஸுஷமாமாலோக்ய காமாக்ஷி! தே
காலங்கீமவலம்ப³தே ²லு ³ஶாம் கல்மாஷ ஹீனோப்யஸௌ 30

காமாக்ஷீ! சந்திரன் எல்லோர் கண்களுக்கும் மகிழ்ச்சியளிக்கட்டும்; கீர்த்தி பெற்றவனாக இருக்கட்டும்; மாரவைரியால் மகுடத்தில் வைத்து பெருமைப்படுத்தப்படட்டும்; அதனால் அவனுக்கு என்ன பெருமை? இவன் களங்கமற்றவனாக இருந்தபோதிலும், உனது புன்முறுவலின் அழகைக் கண்டு களங்கனானே!

கலையோன் அனைவர்கண் கட்கும் மகிழ்வை கனிந்துகீர்த்தி
தலைதலா கட்டும்! தருப்பகன் வைரியும் தன்மைசெய்க,
தலைசூடி! என்ன தகைமை மதிக்கதால்? தாம்மையொன்றும்
அலனாயின் காமாட்சீ! அம்முன் நகையால்மை ஆயினானே!

கலையோன்-சந்திரன்; தலைதல்-மேன்மையாதல்; தருப்பகன்-மன்மதன்; வைரி-எதிரி (தருப்பகன்வைரி-சிவன்); தன்மை-பெருமை; தகைமை-பெருமை; மை-களங்கம்; அம்-காந்தி/அழகு

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)


கலையோன் அனைவர் கண்கட்கும் மகிழ்வை கனிக; கீர்த்தி தலைதல் ஆகட்டும்! தருப்பகன் வைரியும் தன்மை செய்க, தலைசூடி! என்ன தகைமை மதிக்கு அதால்? தாம் மையொன்றும் அலன், ஆயின் காமாட்சீ! அம்முன் நகையால் மை ஆயினானே!

ஜனவரி 28, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 29

पीयूषं तव मन्थरस्मितमिति व्यर्थैव साऽपि() प्रथा
कामाक्षि ध्रुवमीदृशं यदि भवेदेतत्कथं वा शिवे
मन्दारस्य कथालवं सहते मथ्नाति मन्दाकिनिं
इन्दुं निन्दति कीर्तिते कलशीपाथोधिमीर्ष्यायते २९॥

பீயூஷம் தவ மந்த²ர ஸ்மிதமிதி வ்யர்தை² ஸாபி(ப) ப்ரதா²
காமாக்ஷி த்ருவமீத்³ருʼஶம் யதி³ வேதே³தத் கத²ம் வா ஶிவே
மந்தா³ரஸ்ய கதா²லவம் ஸஹதே மத்²னாதி மந்தா³கினீம்
ந்து³ம் நிந்த³தி கீர்திதே கலஶீ பாதோ²திமீர்ஷ்யாயதே 29

மங்களமானவளே! காமாக்ஷி! உன்னுடைய மென்னகை அமுதமென்னுமந்த புகழ்ச்சியும் வீணே!  அவ்வாறு அது உண்மையாயின் மந்தார மலர் என்னும் சொல்லைக்கூட ஏனது பொறுப்பதில்லை? கங்கையை கலக்குவானேன்? நிலவைப் பழிப்பதேன்? பாற்கடலென்றாலே பொறாமை கொள்வதேன்?

மங்கல மானகா மாட்சியுன் மென்னகை, மாந்தமுதாய்
அங்குபு கழ்தல்வீண்! அவ்வா றதுண்மையும் ஆயினேனோ
கங்கைக் கலக்கல்? களங்கன் பழித்தல்?பாற் கார்க்கடல்மீ
தங்குகவ் வையும்?மந் தாரப்பூச் சொல்லுமேன் தாங்கிடாதே!

மாந்த-அருந்த; களங்கன்-சந்திரன்; கார்-மேகம்; கவ்வை-பொறாமை; தாங்கிடாமை-பொறுக்காமை

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)


மங்கலமான காமாட்சி!உன் மென்னகை, மாந்த+அமுதாய் அங்கு புகழ்தல் வீண்! அவ்வாறு+அது+உண்மையும் ஆயின்+ஏனோ கங்கைக் கலக்கல்? களங்கன் பழித்தல்? பாற்கார்க்கடல் மீதங்கு கவ்வையும்? மந்தாரப்பூச் சொல்லும் ஏன் தாங்கிடாதே!

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...