மே 31, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 91

स्मरमथनवरणलोला मन्मथहेलाविलासमणिशाला
कनकरुचिचौर्यशीला त्वमम्ब बाला कराब्जधृतमाला 91

ஸ்மர-மதன-வரண-லோலா மந்மத ஹேலா-விலாஸ-மணிசாலா |
கனகருசி சௌர்யசீலா த்வமம்ப பாலா கராப்ஜ-த்ருதமாலா ||91||

மன்மதனை மாய்த்தவரை தன் பதியாகக் கொள்வதில் நாட்டமுள்ளவளும், மன்மதனுடைய காதல் லீலைகளால் உண்டாகும் மகிழ்வுக்கு இரத்தின மாளிகையானவளும், தங்கத்தின் ஒளியை பறித்து கொள்ளும் திறம்கொண்டவளும், தாமரைப் போன்ற கைகளில் பதியை வரிக்க மணமாலையைக் கொண்டவளுமான பாலா நீயாவாய்.

மன்மதனை மாய்த்தாரை மன்னராய் கொள்ளும் மனமுற்றாளே
மன்மத லீலையின் மத்திர  மாம்காழி மாளிகையே;
பொன்னொளி கட்டிடப் போதும் திறத்தாளே; பொற்கமல
மன்ன கரத்தினில் மாலைகொள் பாலாவாம் மாதாநீயே


மத்திரம் - மகிழ்வு; காழி - இரத்தினம்;  போதும் - தேவைக்கீடான; கட்டு - பறித்தல்

மே 30, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 90

ताडितरिपुपरिपीडनभयहरण निपुणहलमुसला
क्रोडपतिभीषणमुखी क्रीडसि जगति त्वमेव कामाक्षि 90

தாடிதரிபு பரிபீடன பயஹரண நிபுணஹலமுஸலா |
க்ரோடபதி பீஷணமுகீ க்ரீடஸி ஜகதி த்வமேவ காமாக்ஷி ||90||

தோற்கடிக்கப்பட்ட பகைவர்தம் தொல்லையின் பயத்தை நீக்குவதில் தேர்ந்த ஏர்க்காலையும், உலக்கையையும் கொண்டவளும், பெரும் வராகத்தின் பயமுறுத்தும் முகத்தைக் கொண்டவளுமாகவும் நீயே உலகில் விளையாடுகிறாய் காமாட்சி! இவளே வராகி தண்டநாதா என்று லலிதா சகஸ்ரநாமத்தில் போற்றப்படுபவள்;

தோற்றப் பகையதன் தொல்லை பயத்தைத் துரத்திடவே
ஏற்ற உலக்கையும் ஏர்க்காலும் கையினில் ஏந்திடுவாய்
தோற்றத் திலச்சுறுத் தும்நின்வ ராகமுகத் தோடேயுன்
ஆற்றலால் காமாட்சி! அம்புவில் கேளியை ஆடுவையே

அம்பு - உலகம்;

மே 29, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 89

उर्वीधरेन्द्रकन्ये दर्वीभरितेन भक्तपूरेण
गुर्वीमकिञ्चनार्ति खर्वीकुरुषे त्वमेव कामाक्षि 89

உர்வீதரேந்த்ர கந்யே தர்வீபரிதேன பக்தபூரேண |
குர்வீம் அகிம்சனார்திம் கர்வீகுருஷே த்வமேவ காமாக்ஷி ||89||

காமாட்சி தாயே! மலையரசன் மகளே! உணவு படைக்க அன்னக் கரண்டியால் நீ எடுத்த அன்ன வெள்ளத்தால் ஏழைகளின் கொடிய துயராம் பசியைப் போக்கடித்து விடுகிறாய் (அன்னபூரணியாக) நீயே!

மலைவேந்து பெற்ற மகளாய தாயேகா மாட்சியேநீ
குலைப்பாய் தரித்திரர் கும்பிகள் காய்க்கும் கொடும்பசித்தீ!
அலகிலா அன்னம்! அளிப்பதோ வெள்ளமாய் அன்னையேயுன்
அலகில் அகப்பையில் அன்பதன் ஆற்றலோ அற்புதமே!

குலைப்பாய் - கெடுப்பாய்; கும்பி - வயிறு; அகப்பை - கரண்டி

மே 28, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 88

श्रवणचलद्वेतण्डा समरोद्दण्डा धुतासुरशिखण्डा
देवि कलितान्त्रषण्डा धृतनरमुण्डा त्वमेव चामुण्डा 88

ஶ்ரவண சலத் வேதண்டா ஸமரோத்தண்டா துதாஸுரஶிகண்டா |
தேவி கலிதாந்த்ரஷண்டா த்ருத நரமுண்டா த்வமேவ சாமுண்டா ||88||

காதுகளை அசைத்துக்கொண்டிருக்கிற யானைகளை உடையவளும், போரில் வேகமாக இருப்பவளும், அசுரர் தலைகளைப் பந்தாடி, அவர்கள் குடல்களை உருவி மாலைகளாக அணிந்தவளும், நரனின் வெட்டுண்ட தலையைக் கையிலேந்தியவளான சாமுண்டா தேவி நீயே!  ஶ்ரவண சலத் வேதண்டா” என்பதை, காதுகளில் ஆடும் தந்தக்குழைகளைக் கொண்டவள் என்றும் பொருள் கொள்ளலாம்.

அசைகின்ற காதுடை ஆனைகள் கொண்டாய்; அமர்களத்தில்
விசையுடைத் தாய்;வீங்கு வீண சுரர்களை வீழ்த்திடுவாய்;
தசையோ டவர்குடல் தாமம்பூண் சாமுண்டீ தாயேநின்கை
மிசையில் நரன்சிரம் வெட்டியே ஏந்துவாய் மிண்டவளே


தாமம் - மாலை;  மிசை - மேல்; விசை - வேகம், உக்கிரம்; மிண்டவள் - வலிமிக்கவள்

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...