[இன்று
ஒரு கவிதை..
"தானே"
புயலுக்குப்
பிறகு நடக்கும் அரசியலைப்
பற்றி ஒரு செய்தியைப் படித்தேன்.
அதன்
பாதிப்பில் எழுத தொடங்கிய
கவிதை அனுமன் வால் போல் நீண்டு
கொண்டே போக,
வழக்கம்
போல் பொசுக்கென்று முடித்துவிட்டேன்..
இன்னும்
எழுதிப் பழக வேண்டும்!
]
ஆறறிவு
மனிதர்களின் ஆரவாரப் போலித்தனம்
ஓரறிவு
மில்லாத இயற்கையிலே இருக்கவில்லை
மனிதசக்தி
அறியவொண்ணா மாசக்தி ஐந்தனிலும்
கனிவுமுண்டு
கடுஞ்சீற்றக் கூற்றாகிக்
காய்வதுண்டு!
ஆனாலும்
அங்கேயோர் மதமென்ற பேதமுண்டோ?
வீணாக
இனமென்றும் மொழியென்றும்
கூச்சலுண்டா?
நிலமதிர்வும்
கடற்கோளும் பேய்க்காற்றுப்
பெரும்புயலும்
நீர்மலிந்து
பெருவெள்ளக் காடாகும்
நிலையதுவும்,
தீயெழுந்து
எரிமலையாய் கொதிகுழம்பாய்ச்
பொழிவதுவும்,
வேர்பிடுங்கி
எறிந்திவரை அடியோடு அழித்திடுவோம்,
மாயட்டும்
மாற்றுசாதி - வாழட்டும் நம்சாதி
என்கின்ற
வன்மத்தின் வெளியீடாய்
இருப்பதில்லை!
கன்மத்தின்
குறியீடாய் கதைசொல்வர்
ஒருமதத்தார்!
இயற்கைதரும்
ஜிக்ஹாதி எனமுழங்கும்
ஒருமதத்தார்!
மயக்கமின்றி
தெளிவீரே தீர்ப்பிடுநாள்
வெகுவிரைவில்
மீட்பரிங்கு
வரவேண்டி பாவிகளே மாறிடுவீர்!
தயக்கமின்றி
தெரிவிப்பார் தேவதூதன்
கட்சியினர்
கேட்பவர்கள்
கேட்கநெய்யும் கேப்பையிலே
வடியுதென்பார்.
முயற்சியின்றி
முயங்கிமூலை முடங்கிமக்கள்
இருப்பரென்றால்
தடியெடுக்கும்
தண்டல்காரர் படியளக்கும்
பகவனாவார்
படிந்தால்பார்
இல்லையெனில் பரலோகம் உனக்கிருக்கு!
அரசின்வழி
அறவின்வழி என்றகாலம் கடந்தகாலம்!
அரவின்வழி,
அடக்குமுறை,
எதிர்த்தாலே
அழிக்கும்வழி!
உறவின்வழி
பிழைக்கின்ற ஊரேய்க்கும்
பிழைகள்பல
சிறப்பாக
சீரழிக்கும் சிங்காரம்
இக்காலம்.
ஆயிரமாய்
ஜாதியிங்கு இருந்தாலும்
அன்னியர்கள்
புகுவதென்ன
நீதியென்ற பாரதியும், நம்மவரே
தாயனைய
தேசமிதை துகிலுரியும்
துச்சர்களாய்
மிகுநீச
மோசர்களாய் போவரென அறிந்திருந்தால்
வெதும்பித்தான்
மாய்ந்திருப்பான் வெற்றாக
போனதென்று!
இதுஎன்னால்
பொறுப்பதில்லை வெந்தீயில்
தீயட்டும்
எழுதியவென்
வலக்கையும் உலக்கையென ஆகட்டும்
பழுதுபட்ட
சமுதாயம் பாழாகப் போகட்டும்
என்றல்லோ
மனம்வெறுத்து சலித்திருப்பான்?
சபித்திருப்பான்?
அன்றேதன்
தமிழாலே "அறம்"பாடி
அழித்திருப்பான்.
மதத்தாலும்
மொழியாலும் நிலத்தாலும்
நீராலும்
உதவாத
பலவாத பிடிவாத மடமைகளால்
விடமாக
வளர்ந்திருக்கும் பிளவாக்கும்
மனப்போக்கும்
முடமாகி உயிர்ப்பின்றி ஜடமான நிலையதுவும்
மாறிநம்மில்
புதுநோக்கும் புத்துணர்வும்
பிறந்திடவே
சீறியதாய்
புதுவாழ்வு மலர்ந்திடவே
இயற்கையெனும்
தாயவளின்
வீரியமே பிரளயமதாய் பொங்கட்டும்!
நேயமுடன்
மீண்டுமனிதம் புனிதமுடன்
மலரட்டும்!