நவம்பர் 04, 2011

ஏழாம் அறிவும் போதிவர்மனும்



சமீபத்தில் மிகவும் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டு, தீபாவளி வெளியீடாக வந்திருக்கும் ஏழாம் அறிவு படத்தைப் பார்த்தேன்.

எங்கே இதைப்பற்றி உண்மையான விமரிசனத்தை எழுதினால், நமக்கு ஆறாம் அறிவே இல்லையோ என்று நினைப்பார்கள் என்று பலரும் ஒதுங்கியிருக்கலாம்.. அல்லது தமிழனே இல்லையென்று முத்திரை குத்தி, ஐந்தறிவு மிருகங்களுக்கும் கீழாக எண்ணி விடுவார்களோ என்று பயந்திருக்கலாம்..

தமிழனின் பெருமையைத் தூக்கி நிறுத்தியிருக்கிற முயற்சி என்ற சுயதம்பட்டத்தை காதுகள் கிழியுமளவிற்கு உரத்து அடித்திருப்பதினால், என்னுடைய பார்வையில் இப்படத்தைப் பற்றிய சில செய்திகளைப் பதிவு செய்கிறேன்.

படம்,

பணத்தை எண்ணாமல் செலவு செய்திருக்கும் தயாரிப்பாளரின் தாராளத்தைக் காட்டுகிறது. (அது சரி! யார் வீட்டுப்பணம்! தூக்கி நிறுத்த தாத்தாவின் சேனலும், உறவுக்கார ஸன் சேனல்களும் இருக்க எமக்கு என்ன கவலை)

சூரியாவின் மெருகான அழகை, ஈடுபாட்டை, உழைப்பைக் காட்டுகிறது.. போதிதர்மன் இப்படித்தான் இருந்திருக்கவேண்டும் என்று எண்ணவைக்கிறது..

ஸ்ருதிஹாஸனின் புதுமலரைப் போன்ற அழகைக் கவிதையாகக் காட்டுகிறது.

தாமோ" என்று சீன, ஜப்பானிய மற்றும் கீழை நாட்டு புத்தமதத்தினர் கொண்டாடுகிற, நம்மில் பலருக்கும் தெரியாத பாரதப் பூர்விகரான போதிதர்மரான, போதிவர்மன் என்பவரை நமக்கு பெருமையுடன் அறிமுகம் செய்து வைக்கிறது.

இதைப்பற்றிச் சொல்லவேண்டும் என்கிற இயக்குநரின் ஆர்வத்தைக் காட்டுகிறது. (முருகதாஸ் நல்ல இயக்குநர் என்பது, அவரெடுத்த பார்த்திபன் கனவே காட்டிக்கொடுத்து. ஆனால் இப்படமோ, அவரது ஆர்வக் கோளாறைத்தான் காட்டுகிறது. ).

அழகான ஒளி ஓவியம் (நல்ல சொல்லுக்கு நன்றி தங்கர் பச்சான்), பாராட்டப்படவேண்டிய கலை இயக்கம் என்று பல நல்லவிஷயங்கள் இருந்தும், நிறைவான, முழுமையான, நம்பத்தகுந்த ஆராய்ச்சியில்லாதடாக்குமெண்ட்ரியா, ஹாங்காங்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூன்றாம் ரக குங்ஃபூ படமா, அல்லது தமிழரின் பெருமைக்காக எடுக்கப்பட்ட பிரச்சார படமா என்று தெளிவில்லாமல், செல்லும் படமாகத்தான் தெரிகிறது.

போதிதர்மன், காஞ்சியை ஆண்ட பல்லவ அரசனின் மூன்றாம் இளவரசன் என்கிற முதல் தம்பட்டம் - இதைப்பற்றி சற்று பார்ப்போம். எந்த அரசன்? அவனுடைய மற்ற பிள்ளைகள் என்ன ஆனார்கள்? எந்த நூற்றாண்டு என்ற கேள்விகள் வெகுவாக தவிர்க்கப்பட்டு, கேள்விகளைக் கேட்காமல் நாங்கள் சொல்வதை ஒத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். . வலியுறுத்திக்கேட்டால், இல்லையே, நாங்கள் வலை, இணையத்தளங்களை ஆதாரமாகக் காட்டியிருக்கிறோமே என்று சொல்லலாம். இணையதளங்கள் எல்லாம் வலுவான ஆராய்ச்சித்தலங்கள் அல்ல. 

பல்லவர்களைப்பற்றிய ஆராய்ச்சி இன்னும் முடிவுறாத ஒன்று. நமக்குத் தெரிந்த பல்லவர்கள், ஆறாம் நூற்றாண்டினைச் சேர்ந்த சிம்ஹவிஷ்ணு, அவனுடை புதல்வனும், சமணத்திலிருந்து சைவத்துக்கு மாறிய மஹேந்திர வர்மன், மற்றும் அவனுடை புதல்வனான மாமல்லபுரத்து கதாநாயகனான நரசிம்மவர்மன் என்று நீண்டு, சோழர்கள் வந்தவுடன் சுருங்கி, பின்பு மறைந்தேவிட்டது.

சிம்ஹவிஷ்ணுவின் தந்தை மூன்றாம் சிம்ஹவர்மன் (முதல் இரண்டு சிம்ஹவர்மர்கள் முந்தைய தலைமுறைகளில் இருந்திருக்க வேண்டும்), மற்றும் அவனுடைய தந்தை இரண்டாம் விஷ்ணு கோபன் (முந்தைய முதல் விஷ்ணுகோபன் இருந்திருக்கவேண்டும்) என்று சரித்திரப்பெயர்கள் கேள்விப்படுகிறோமே (தகவல்: விக்கிபீடியா), அவர்களைப் பற்றி விவரணங்கள் தெரியவில்லை. சிம்மவிஷ்ணுவின் காலமே, உத்தேசமாக கி.பி. 555-590 என்று சொல்லுகிறார்கள்.. மேலும் தமிழர்களின் இருண்டகாலமாகச் சித்தரிக்கப்படும் (சைவமும், வைணவமு ஒடுங்கியிருந்து, ஜைனமும் பௌத்தமும் முன்னிருந்த காலமாக இருந்தததினால் முன்வைக்கப் பட்ட கருந்து) களப்பிரர்களிடமிருந்து தமிழகத்தை மீட்டவன் அவனிசிம்ஹன் என்று புகழப்பட்ட சிம்மவிஷ்ணு, மற்றும் பாண்டியன் கடுங்கோன். அதற்கு முந்தைய பல்லவர்கள் என்று வைத்துக்கொண்டாலும் அவர்களும் ஒரு நூறு ஆண்டு கால அளவில்  குறுகி 4ம், 5ம் நூற்றாண்டுகளில் வந்துவிடுகிறார்கள்.. போதிவர்மனோ, 6 ம் நூற்றாண்டிலேதான் சீனாவுக்கு சென்றதாக, ( 550 களில்), அவர்களின் குறிப்பும் தெரிவிக்கிறது.

சரித்திரத்தகவல்களே சிதறுண்டு, ஆராய்ச்சியாளர்களின் பார்வைகளில் வேறுபட்டு இருக்கையில் எந்த பல்லவனைப் பற்றி பேசுகிறார்கள் படத்தில்? சீன சரித்திரத் தகவல்களும், பின்வந்த பல நூற்றாண்டுகளில், சென் பௌத்த மத ஆசிரியகளால் மேல்பூச்சு பூசப்பட்டு கோர்க்கப்பட்ட கதைகளாகவே கருதப்படுகின்றன்.. அவர்களும் ஒத்துக்கொள்ளுகிற ஒரு சரித்திரத் தகவல், போதிதர்மன் இந்தியாவிலிருந்து, தென்னகத்திலிருந்து, வந்த ஒரு மனிதன் என்பதுதான். காஞ்சிபுரம், பல்லவ இளவல் என்பதெல்லாம் பிற்சேர்க்கையாகக் கூட இருக்கலாம்!) எனக்கும் கூட அவன் தமிழனாக இருக்கக்கூடாதா என்கிற ஏக்கமுண்டு.

தவிர பல்லவர்களே, மத்திய இந்தியாவிலிருந்து வந்த, பாலி மொழியும் சமஸ்க்ருதமும் பேசிய ஒரு குடி என்கிற ஆராய்ச்சியும் இருந்திருக்கிறது. அவர்கள் முழுக்கத் தமிழர்களாக இருந்திருப்பது சந்தேகமே. பிற்கால தெலுங்கு சோழர்களைப் போல அவர்களும் தமிழை வளர்த்திருக்கலாம், ஆனால் அக்மார்க் தமிழர்கள் என்று சொல்வது உறுதிச் செய்யப்படாத, இதுவரைக்கும் முடியாத, ஆராய்விலே முடிவுறாத வீண் தற்பெருமை மட்டுமே!

ஏதோ ஒட்டுமொத்த இந்தியாவின் மருத்துவம், தற்காப்புக்கலைகள் இங்கிருந்து சென்ற போதிதர்மனோடு, சீனதேசத்துக்குச் சென்றுவிட்ட மாதிரி பேசுவது அபத்தம்.. ! "மீதிவர்மர்"களே இல்லையா? குறைந்த பட்சம் "பாதி வர்மர்கள்'" கூடவா இல்லை? அவர்களுக்கும் எதேனும் வைரஸ் தாக்கி, அழிந்துவிட்டார்களா? அவன் சென்ற பிறகு வந்த நூற்றாண்டுகளில் இருக்கும் இலக்கியங்கள் காக்கப் பட்டிருக்கின்றன, இந்த கலை மட்டும் முற்றாக அழிந்து ஒழிந்து போனதா? குறைந்த அளவு, பின்னாள் சோழர்கள், நாயக்கர்கள் காலம் வரையாவது இருந்திருக்க வேண்டுமே! இன்றும் கூட வர்மக்கலை இருப்பதாக கேள்விப்படுகிறோமே.! ஏன் பரவலாக வெளியில் வரவில்லை?

நோக்கு வர்மம் என்பது இப்போது நாம் வர்மக்கலையினைத் தேடி எடுத்து கொண்டாடும் விஷயம். இதை மிகவும் அற்புதமாக, தற்காப்புக்கலையின் ஒரு உயர்ந்த விஷயமாக சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்வந்த "ஷாவோலினின் 36ம் வகுப்பறை" என்ற படத்தில் காட்டியிருப்பார்கள். அதன் உயர்வை ஒரு மூன்றாம் தர வில்லனின் கையில் கொடுத்து, ஏதோ ஏக்கப் பார்வையிலேயே (பாதி தூக்கப் பார்வை போல இருக்கிறது) எல்லோரையும் அழிக்கிற கருவியாக சித்தரித்திருப்பது கொடுமை!

பிறகு அறிவியல், மரபணு ஆராய்ச்சி, அதை செய்யும் ஸ்ருதிஹாஸனின் அதீத தமிழ் ஆர்வம் (தத்தி தத்தி தமிழில் பேசும் தங்க பாப்பா!), மீண்டும் போதிதர்மனை கொண்டுவர உருவாக்கப்பட்ட போதிதர்மன் பரம்பரையிலே வந்தவரான சர்க்கஸ் சாகஸக்காரர் அர்விந்த், இதற்கெல்லாம் சிகரம் வைத்தால் போல், சீனாவின் இந்திய ஆக்ரமிப்பு முயற்சி, அதற்காக உருவாக்கப்பட்ட டாங் ஈ (டான்கியா?) , அவருக்குத் துணை போகும், சீனாவுக்கு விலைபோன இந்திய விஞ்ஞானி ரங்கநாதன், கொஞ்சம் காதல், நிறைய சண்டை, ஹாரிஸ் ஜெயராஜின் பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட பாத்திரக்கடை களேபர ஓசை (இசையென்பது சரியில்லை!) என்று ஒரே அமர் களம்தான் படம் ('க்' விடுபட்டிருப்பதை கவனிக்க!). ஒரு பாட்டு, சுமார் ரகம். ஆனால் கேட்ட மெட்டுபோல தோற்றம். ஆனாலும்.. ரொம்பத்தான் பில்ட் அப்பு!

கடைசீயில், சூர்யாவை வைத்து பிரசாரப் பேச்சு, அதை மானிடரில் பார்த்துக்கொண்டிருக்கும் முருகதாஸ் என்று படம் முடிகிறது. நெட்டி முறித்துக்கொண்டு எழுந்தபோது, அப்பாடா என்று இருந்தது..! முருகதாஸின் முகத்தில், இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறோமே, ஓடுமா, ஒடாதா என்கிற கவலைதான் தெரிகிறது...!

தமிழனின் பெருமை அறைகுறை ஆராய்ச்சியிலும், ஆரவாரமான தற்பெருமையிலும் இல்லை. இது காசுக்காக, காசுள்ளவர்கள், தமிழர்களை மேலும் சுரண்டுவதற்காக எடுத்த கமர்ஷியல் படம்.. இதை எடுத்த, நடித்த தமிழர்களுக்கும் இதனால் பெருமை வரப்போவதில்லை. பார்க்கும் தமிழர்களுக்கும் பெருமையும், எழுச்சியும் வரப்போவதில்லை.


அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...